அமீரகத்தில் ஊழியர்கள் தங்கள் வேலையை இழப்பது உடனடி நிதி நெருக்கடியை ஏற்படுத்தலாம். ஆனால், ‘Involuntary Loss of Employment (ILOE)’ எனப்படும் திட்டத்தில் இணைந்துள்ள ஊழியர்கள், புதிய வேலையைத் தேடும் காலத்தில் தற்காலிக வருமான உதவியைப் பெறலாம். இருப்பினும், வேலையை இழக்கும் அனைத்துச் சூழல்களுக்கும் இத்திட்டம் பொருந்தாது என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும்.
இதனடிப்படையில் நீங்கள் வேலையை விட்டதற்கான காரணம், இத்திட்டத்தில் நீங்கள் எவ்வளவு காலம் சந்தா செலுத்தியுள்ளீர்கள் மற்றும் காப்பீட்டுக் கட்டணங்கள் (premiums) முறையாகச் செலுத்தப்பட்டுள்ளதா ஆகியவற்றை கருத்தில் கொள்வது முக்கியம்.
ILOE தகுதி, இழப்பீட்டுத் தொகை மற்றும் கோரிக்கை (claim) சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு குறித்து அமீரக ஊழியர்கள் தெரிந்து கொள்ள வேண்டியவை இங்கே உள்ளன.
ILOE இழப்பீட்டை எப்போது கோரலாம்?
வேலையை இழப்பதற்கு முன், நீங்கள் இத்திட்டத்தில் குறைந்தது தொடர்ந்து 12 மாதங்களுக்கு சந்தா செலுத்தியிருக்க வேண்டும். மேலும், உங்கள் காப்பீட்டுக் கட்டணங்கள் முழுமையாகவும் சரியான நேரத்திலும் செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.
மேலும், பணிநீக்கம் (termination) காரணமாக வேலையை இழக்கும் ஊழியர்களுக்கு மட்டுமே இத்திட்டம் பொருந்தும். தாமாக முன்வந்து ராஜினாமா செய்பவர்களுக்கு இது பொருந்தாது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வளவு தொகையைப் பெறலாம்?
தகுதியுள்ள ஊழியர்கள், வேலையை இழப்பதற்கு முந்தைய 12 மாதங்களில் பெற்ற சராசரி மாத அடிப்படைச் சம்பளத்தில் 60 சதவீதத்தை (நிர்ணயிக்கப்பட்ட வரம்புகளுக்கு உட்பட்டு) பெறலாம்.
- பிரிவு A: அடிப்படைச் சம்பளம் 16,000 திர்ஹம்ஸ் அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், மாதம் 10,000 திர்ஹம்ஸ் வரை இழப்பீடு பெறலாம்.
- பிரிவு B: அடிப்படைச் சம்பளம் 16,000 திர்ஹம்ஸ்க்கு மேல் இருந்தால், மாதம் 20,000 திர்ஹம்ஸ் வரை இழப்பீடு பெறலாம்.
மேலும், ஒரு கோரிக்கைக்கு (claim) அதிகபட்சமாக மூன்று மாதங்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
பணம் செலுத்துதல் எப்போது நிறுத்தப்படும்?
பின்வரும் சூழல்களில் பணம் செலுத்துதல் நிறுத்தப்படும்:
- நீங்கள் புதிய வேலையில் சேர்ந்தால்
- ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறினால்
- ஒரு கோரிக்கைக்கான அதிகபட்ச காலமான மூன்று மாதங்களை அடைந்தால்
- வாழ்நாளில் பெறக்கூடிய மொத்த இழப்பீட்டு வரம்பான 12 மாதங்களை அடைந்தால்
- மரணம் ஏற்பட்டால்
யார் கோர முடியாது?
நீங்கள் ராஜினாமா செய்தாலோ, ஒழுங்கு நடவடிக்கை காரணமாகப் பணிநீக்கம் செய்யப்பட்டாலோ, வேலையை விட்டுத் தகவல் தெரிவிக்காமல் சென்றாலோ (absconding) அல்லது போலியான கோரிக்கையைச் சமர்ப்பித்தாலோ பொதுவாக ILOE இழப்பீட்டைப் பெற முடியாது.
30 நாள் காலக்கெடு
அதுமட்டுமின்றி, தகுதியுள்ள ஊழியர்கள் தங்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தம் முடிவடைந்த 30 நாட்களுக்குள் இழப்பீட்டிற்கான கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும். தொழிலாளர் தொடர்பான தகராறு ஏதேனும் இருந்தால், நீதிமன்றத்தால் அத்தகராறு தீர்க்கப்பட்ட தேதியிலிருந்து 30 நாள் காலக்கெடு கணக்கிடப்படும்.
மேலும், கோரிக்கைகள் அதிகாரப்பூர்வ ILOE இணையதளம் வழியாகவே சமர்ப்பிக்கப்பட வேண்டும். சுருக்கமாகச் சொன்னால், எதிர்பாராத விதமாக உங்கள் வேலையை இழக்கும்போது ILOE ஒரு தற்காலிக நிதிப் பாதுகாப்பை வழங்கக்கூடும். ஆனால், இத்திட்டத்தின் நிபந்தனைகளை நீங்கள் பூர்த்தி செய்து, உரிய நேரத்தில் அதற்கான கோரிக்கையைச் சமர்ப்பித்தால் மட்டுமே இது சாத்தியமாகும்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel