துபாயில் உள்ள மெட்ரோ நிலையத்திற்கான பெயரானது ஒப்பந்த அடிப்படையில் ஒரு சில நிறுவனங்களை கொண்டு அழைக்கப்படுவது வழக்கமான நடைமுறையாகும். அதில் ஒன்றாக இதுவரை ஆன்பாசிவ் (ONPASSIVE) என்று அழைக்கப்பட்ட துபாய் மெட்ரோ நிலையம், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) கையெழுத்திட்ட ஒரு புதிய ஒப்பந்தத்தின் கீழ், கார்மின் (garmin) மெட்ரோ நிலையமாக மாறவிருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச்கள், ஃபிட்னஸ் டிராக்கர்கள் மற்றும் GPS வழிசெலுத்தல் சாதனங்களுக்குப் (fitness trackers and GPS navigation devices) பெயர் பெற்ற உலகளாவிய பிராண்டான கார்மினுடன், RTA 10 ஆண்டு கால ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. மேலும் இந்த ஒப்பந்தமானது ஐக்கிய அரபு அமீரகத்தில் கார்மினின் பிரத்யேக விநியோகஸ்தரான AMIT ரீடெய்ல் மூலம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அல் கூஸ் மற்றும் அல் சஃபாவுக்கு இடையில் அமைந்துள்ள இந்த மெட்ரோ நிலையம், முதலில் 2010-ல் நூர் பேங்க் மெட்ரோ நிலையமாகத் திறக்கப்பட்டது. பின்னர் இது நவம்பர் 2020-ல் அல் சஃபா நிலையம் எனப் பெயர் மாற்றப்பட்டு, பின்னர் ஜனவரி 2023-ல் ஆன்பாசிவ் (Onpassive) என மறுபெயரிடப்பட்டது.
இந்த மாற்றங்கள் செப்டம்பர் மற்றும் நவம்பர் 2026-க்கு இடையில் செயல்படுத்தப்படும். இந்த புதிய கார்மின் நிலையம், ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்களில் வளர்ந்து வரும் பிராண்டட் நிறுத்தங்களின் பட்டியலில் இணைகிறது. இது மெட்ரோ நிலையங்களை உயர் மதிப்பு முதலீட்டுத் தளங்களாக மாற்றுவதோடு, பிராண்டுகள் சமூகத்துடன் இணைவதற்கான ஒரு வழியையும் வழங்குகிறது.
RTA-வின் ரயில் பிரிவின் (Rail Agency) தலைமை நிர்வாக அதிகாரி அப்துல் மொஹ்சென் கல்பாட் கூறுகையில், “துபாய் மெட்ரோ நிலையங்களுக்குப் பெயரிடும் உரிமையை வழங்கும் திட்டத்தில் ‘கார்மின்’ (Garmin) நிறுவனம் இணைந்திருப்பது, பல்வேறு வணிகத் துறைகளைச் சேர்ந்த முன்னணி நிறுவனங்களை ஈர்ப்பதில் இத்திட்டம் கொண்டுள்ள வெற்றியை மீண்டும் உறுதிப்படுத்துகிறது,” என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன் “உலகிலேயே முதன்முறையாக 2009-ல் RTA இத்திட்டத்தைத் தொடங்கியது; இது தனியார் நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளுக்குத் துபாய் மெட்ரோ நிலையங்கள் வாயிலாகத் தங்கள் பிராண்டின் இருப்பை வலுப்படுத்த ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் “துபாய் மெட்ரோ இந்த உலகளாவிய நகரத்தின் ஒரு முக்கிய அடையாளமாகவும், சிறப்பான மைல்கல்லாகவும் மாறியுள்ளது; இந்நகரம் பிராந்திய அளவில் மட்டுமல்லாமல் உலக அளவிலும் ஏராளமான பொருளாதார மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை வழங்குகிறது.”
“மக்கள் அதிக நம்பிக்கையுடனும், தொடர்புகளுடனும், தெளிவான நோக்கத்துடனும் உலகெங்கும் பயணிக்க உதவும் வகையில், RTA மற்றும் எங்களின் மதிப்புமிக்க விநியோகஸ்தரான AMIT Retail ஆகியவற்றுடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம்.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்
பயணிகளுக்கான மாற்றங்கள்
இந்த அறிவிப்பை தொடர்ந்து வரும் நாட்களில், மெட்ரோ நிலையங்களுக்குள் மற்றும் வெளியே உள்ள வழி காட்டும் பலகைகள் (signage), டிஜிட்டல் ஸ்மார்ட் அமைப்புகள் மற்றும் RTA-வின் பொதுப் போக்குவரத்து செயலிகள் ஆகியவற்றில் ‘கார்மின் மெட்ரோ நிலையம்’ (Garmin Metro Station) என்ற பெயர் புதுப்பிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் நிலையத்தை அடைவதற்கு முன்னரும், அங்கு வந்தடைந்த பின்னரும் வழங்கப்படும் ஒலிவழி அறிவிப்புகளும் (audio announcements) இதற்கேற்ப மாற்றியமைக்கப்படும். குறிப்பிடப்பட்ட தளங்களில் புதுப்பிக்கப்பட்ட நிலையத்தின் பெயரைப் பார்த்துத் தெரிந்துகொள்ளுமாறு மெட்ரோ பயணிகளை RTA கேட்டுக்கொண்டுள்ளது; அதேவேளையில், இந்த மாற்றக் காலத்தில் உதவி அல்லது கூடுதல் தகவல்களுக்கு RTA-வின் குழுவினர் பணியில் இருப்பார்கள் என்றும் பயணிகளுக்கு உறுதியளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.