துபாயில் உள்ள மெட்ரோ நிலையங்களுக்கு பெயரிடும் முறையானது ஆரம்ப காலத்தில் இருந்தே செயல்பட்டு வருகின்றது. அதில் ஒரு சில நிலையங்கள் பலமுறை பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவற்றுள் தற்பொழுது புதிதாக ‘ஆன்-பாசிவ்’ (Onpassive) மெட்ரோ நிலையம் மீண்டும் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இம்முறை உலகளாவிய தொழில்நுட்ப நிறுவனமான ‘கார்மின்’ (Garmin) நிறுவனத்தின் பெயர் இந்த நிலையத்திற்கு சூட்டப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கார்மின் நிறுவனத்தின் ஒரே விநியோகஸ்தரான ‘அமிட் ரீடெய்ல் எல்எல்சி’ (AMIT Retail LLC) மூலம் மேற்கொள்ளப்பட்ட 10 ஆண்டு கால ஒப்பந்தத்தின் கீழ், துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இந்த நிலையத்தின் பெயரிடும் உரிமையை கார்மின் நிறுவனத்திற்கு வழங்கியுள்ளது. இனி இந்த நிலையம் ‘கார்மின் மெட்ரோ நிலையம்’ என்று அழைக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
பொதுவாக துபாய் மெட்ரோ வலையமைப்பில் உள்ள குறிப்பிட்ட நிலையங்களுக்கு நிறுவனங்களின் பெயர்களைச் சூட்ட அனுமதிக்கும் RTA-வின் ‘பெயரிடும் உரிமைத் திட்டத்தின்’ (naming rights programme) ஒரு பகுதியாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் பல நிலையங்களின் பெயர்கள் இத்தகைய முறையில் மாற்றப்பட்டுள்ளன;
அந்த மாற்றங்கள் மற்றும் நிலையங்களின் தற்போதைய பெயர்கள் குறித்த விவரங்கள் கீழே காணலாம்.
துபாய் மெட்ரோ நிலையங்களின் சமீபத்திய பெயர் மாற்றங்கள்
- GGICO மெட்ரோ நிலையம் ‘அல் கர்கூத் (Al Garhoud) மெட்ரோ நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- அல் கைல் (Al Khail) மெட்ரோ நிலையம் ‘அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச் (Al Fardan Exchange) மெட்ரோ நிலையம்’ என மாறியது.
- UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையம் ‘லைஃப் பார்மசி (Life Pharmacy) மெட்ரோ நிலையம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
- ஜெபல் அலி (Jebel Ali) மெட்ரோ நிலையம் ‘நேஷனல் பெயின்ட்ஸ் (National Paints) மெட்ரோ நிலையம்’ என மாற்றப்பட்டது.
வணிக நிறுவனங்கள் குறிப்பிட்ட நிலையங்களுக்கு 10 ஆண்டுகள் வரை தங்கள் பெயரைச் சூட்டிக்கொள்ளும் வாய்ப்பை வழங்கும் ‘பெயரிடும் உரிமைத் திட்டத்தின்’ ஒரு பகுதியாக, கடந்த ஆண்டு RTA மேற்குறிப்பிட்டுள்ள துபாயில் உள்ள சில மெட்ரோ நிலையங்களின் பெயர்களை மாற்றியது.
பெயர் மாற்றம் செய்யப்பட்ட துபாய் மெட்ரோ நிலையங்களின் முழுப் பட்டியல்
துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்களில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட நிலையங்களின் விவரங்கள்:
- UAE எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையம் → லைஃப் பார்மசி மெட்ரோ நிலையம்
- அல் கைல் மெட்ரோ நிலையம் → அல் ஃபர்தான் எக்ஸ்சேஞ்ச் மெட்ரோ நிலையம்
- GGICO மெட்ரோ நிலையம் → அல் கர்ஹூத் மெட்ரோ நிலையம்
- ஜெபல் அலி மெட்ரோ நிலையம் → நேஷனல் பெயின்ட்ஸ் மெட்ரோ நிலையம்.
- Mashreq மெட்ரோ நிலையம் → InsuranceMarket.ae மெட்ரோ நிலையம்
- Onpassive மெட்ரோ நிலையம் → Garmin மெட்ரோ நிலையம்
- Umm Al Sheif மெட்ரோ நிலையம் → Equiti மெட்ரோ நிலையம்
- Al Rashidiya மெட்ரோ நிலையம் → Centrepoint மெட்ரோ நிலையம்
- Al Jaffliya மெட்ரோ நிலையம் → Max மெட்ரோ நிலையம்
- Dubai Marina மெட்ரோ நிலையம் → Sobha Realty மெட்ரோ நிலையம்
- Jumeirah Lakes Towers (JLT) மெட்ரோ நிலையம் → DMCC மெட்ரோ நிலையம்
- Nakheel Harbour மெட்ரோ நிலையம் → Jebel Ali மெட்ரோ நிலையம்
Green Line மாற்றங்கள்:
- Palm Deira மெட்ரோ நிலையம் → Gold Souq மெட்ரோ நிலையம்
- Al Fahidi மெட்ரோ நிலையம் → Sharaf DG மெட்ரோ நிலையம்
- எடிசலட் மெட்ரோ நிலையம் → e& மெட்ரோ நிலையம் (தொலைத்தொடர்பு நிறுவனத்தின் மறுபெயரிடலுக்கு ஏற்ப)
துபாய் மெட்ரோ நிலையங்களின் பெயர்கள் ஏன் மாற்றப்படுகின்றன?
துபாய் மெட்ரோ நிலையங்களின் பெயர் மாற்றும் முயற்சி 2009-ல் RTA (சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம்) தனது ‘பெயரிடும் உரிமை’ (naming rights) திட்டத்தை அறிமுகப்படுத்தியபோது தொடங்கியது. பொது-தனியார் கூட்டாண்மையை ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். மெட்ரோ நிலையங்களுக்கு அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வருவதால், பெயரிடும் உரிமை ஒப்பந்தங்கள் வணிக நிறுவனங்களுக்கு (பிராண்டுகளுக்கு) பெரும் விளம்பர வாய்ப்பை வழங்குகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் மெட்ரோவில் எத்தனை நிலையங்கள் உள்ளன?
துபாய் மெட்ரோ உலகின் மிக நீண்ட, ஓட்டுநர் இல்லாத மற்றும் முழுமையாக தானியங்கி முறையில் இயங்கும் மெட்ரோ ரயில் வலையமைப்பாகும். இது இரண்டு வழித்தடங்களைக் கொண்டுள்ளது: ‘ரெட் லைன்’ (Red Line) 35 நிலையங்களையும், ‘கிரீன் லைன்’ (Green Line) 20 நிலையங்களையும் கொண்டுள்ளது.
துபாய் மெட்ரோவின் எதிர்கால விரிவாக்கம்
ப்ளூ லைன் (Blue Line)
2029-க்குள் செயல்பாட்டிற்கு வரவுள்ள துபாய் மெட்ரோவின் ப்ளூ லைன், 30 கி.மீ வழித்தடத்தில் 14 புதிய நிலையங்களுடன் இந்த மெட்ரோ இணைப்பை விரிவுபடுத்தும். இந்த வழித்தடம், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கும், மிர்டிஃப், அல் வர்கா, இன்டர்நேஷனல் சிட்டி, துபாய் சிலிக்கான் ஓயாசிஸ், அகாடமிக் சிட்டி, ராஸ் அல் கோர் தொழில்துறை பகுதி, துபாய் க்ரீக் ஹார்பர் மற்றும் துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கும் இடையே நேரடி இணைப்பை வழங்கும் என கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகள் ஏப்ரல் 2025-ல் தொடங்கி, கட்டங்களாக முடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோல்ட் லைன்
துபாய் மெட்ரோவின் ப்ளூ லைன் போன்றே துபாய் மெட்ரோ கோல்ட் லைன் என்பது ஐக்கிய அரபு அமீரகத்தில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு முக்கிய அதிவேகப் போக்குவரத்து இரயில் திட்டமாகும். இது அமீரகத்தின் முதல் முழுமையான சுரங்கப்பாதை மெட்ரோ வழித்தடமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 42 கிலோமீட்டர் (26 மைல்) நீளமுள்ள இந்த வழித்தடத்தில் 15 முக்கியப் பகுதிகளுக்குச் சேவை செய்யும் 18 நிலையங்கள் இருக்கும். இதன் மதிப்பிடப்பட்ட செலவு 34 பில்லியன் திர்ஹாம் ஆகும். இது செப்டம்பர் 9, 2032 அன்று திறக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
இது பர் துபாயில் உள்ள அல் குபைபாவிலிருந்து ஜுமைரா கோல்ஃப் எஸ்டேட்ஸ் வரை செல்லும். இது ஏற்கனவே உள்ள ரெட் மற்றும் க்ரீன் மெட்ரோ வழித்தடங்களுடன் இணைக்கப்பட்டு, எதிஹாட் இரயிலுடன் ஒருங்கிணைக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.