அபுதாபியின் குறிப்பிட்ட சாலையில் வேக வரம்பு குறைக்கப்படவுள்ளதாக அபுதாபி மொபிலிட்டி (Abu Dhabi Mobility) இன்று (வெள்ளிக்கிழமை) அறிவித்துள்ளது. அபுதாபியின் ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் சாலையில் (E311) இந்த வேக வரம்பு அமல்படுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது. இதன்படி வரும் செப்டம்பர் 14, திங்கட்கிழமை முதல், சாலையின் இரு திசைகளிலும் அனுமதிக்கப்பட்ட அதிகபட்ச வேகம் மணிக்கு 120 கி.மீ-லிருந்து 100 கி.மீ-ஆகக் குறைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சாலையானது துபாய் மற்றும் பிற எமிரேட்களில் ‘ஷேக் முகமது பின் சயீத் சாலை’ என்றும் அழைக்கப்படுகிறது. அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படி, இந்த மாற்றப்பட்ட வேக வரம்பு நெடுஞ்சாலையின் ஒரு முக்கியப் பகுதியை உள்ளடக்கியது; இப்பகுதியின் வடக்கே அல் ஷம்காவும் (Al Shamkhah), தெற்கே பனியாஸ் மயானத்தை ஒட்டியுள்ள மதீனத் அல் ரியாத்தும் (Madinat Al Riyad) அமைந்துள்ளன.
தற்பொழுது வேக வரம்பு குறைக்கப்பட்டுள்ள இந்தப் பகுதி அபுதாபி மற்றும் துபாய் ஆகிய இரு நகரங்களையும் நோக்கிய போக்குவரத்தை உள்ளடக்கியதாகும். இது ஒரு முனையில் ‘அட் துரூஷ் ஸ்ட்ரீட்/தவி அல் கய்மா ஸ்ட்ரீட்’ இண்டர்செக்ஷன்களுக்கும், மறுமுனையில் ‘அல் கைர் தெரு’ சந்திப்புக்கும் (interchange) இடைப்பட்ட பாதையை உள்ளடக்கியது.
இதே போல் கடந்த ஏப்ரல் 2025-ல், அபுதாபி மொபிலிட்டி E311 சாலையில் இருந்த மணிக்கு 120 கி.மீ என்ற குறைந்தபட்ச வேக வரம்பை நீக்கியது; இதன் மூலம் வாகன ஓட்டிகள் முந்தைய குறைந்தபட்ச வேகத்தை விடக் குறைவாக வாகனம் ஓட்ட அனுமதிக்கப்பட்டனர். போக்குவரத்து பாதுகாப்பை மேம்படுத்துவதும், கனரக வாகனங்களின் போக்குவரத்தை எளிதாக்குவதும் இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். அக்காலகட்டத்தில், அச்சாலையில் அதிகபட்ச வேக வரம்பு மணிக்கு 140 கி.மீ-ஆகவே இருந்தது.
சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் நோக்கில் அபுதாபி அதிகாரிகள் சமீபத்திய ஆண்டுகளில் அறிமுகப்படுத்திய பரந்த அளவிலான வேக வரம்பு மாற்றங்களின் ஒரு பகுதியாகவே இந்த மாற்றங்கள் அமைந்துள்ளன.
மேலும் கடந்த பிப்ரவரி 2026-ல் மேலும் சில வேக வரம்பு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன; அப்போது அபுதாபி போக்குவரத்து ஆணையம் மூன்று முக்கிய சாலைகளில் வேக வரம்பைக் குறைப்பதாக அறிவித்தது. சாலைப் பாதுகாப்பை மேம்படுத்துவதே இந்த மாற்றங்களின் நோக்கம் என்று கூட்டுப் போக்குவரத்து பாதுகாப்புக் குழு (Joint Traffic Safety Committee) தெரிவித்ததுடன், வாகன ஓட்டிகள் புதுப்பிக்கப்பட்ட வேக வரம்புகளைப் பின்பற்றுமாறும் வலியுறுத்தியது.
பிப்ரவரி மாத மாற்றங்களின்படி, அபுதாபி – அல் அய்ன் சாலையில் (E22), அல் நஹ்தா இன்டர்செக்ஷன் முதல் பனியாஸ் இன்டர்செக்ஷன் வரையிலான இரு திசைகளிலும் வேக வரம்பு மணிக்கு 160 கி.மீ-லிருந்து 140 கி.மீ-ஆகக் குறைக்கப்பட்டது.
பனியாஸ் இண்டர்செக்ஷன் முதல் பாலம் வளாகம் (Bridge Complex) வரையிலான பகுதியில், இரு திசைகளிலும் வேக வரம்பு மணிக்கு 140 கி.மீ-லிருந்து 120 கி.மீ-ஆகக் குறைக்கப்பட்டது.
அல் ரவ்தா சாலையில் (E30), இரு திசைகளிலும் வேக வரம்பு மணிக்கு 120 கி.மீ-லிருந்து 100 கி.மீ-ஆகக் குறைக்கப்பட்டது. மேலும் கடந்த அக்டோபர் 2025-இல், ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையில் அதிகாரிகள் மாறுபடும் வேகக் கட்டுப்பாட்டு முறையை அறிமுகப்படுத்தினர். இம்முறை, போக்குவரத்து நெரிசல், விபத்துகள், சாலைப் பணிகள் மற்றும் வானிலை உள்ளிட்ட நிகழ்நேரச் சாலைச் சூழல்களுக்கு ஏற்ப வேக வரம்புகளை மாற்றியமைக்க அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.