ADVERTISEMENT

எல் நினோ தாக்கம்.. அமீரகத்தில் இந்த ஆண்டு வழக்கத்தை விட அதிக மழைக்கு வாய்ப்பு!

Published: 11 Sep 2026, 8:33 PM |
Updated: 11 Sep 2026, 8:36 PM |
Posted By: admin

உலகெங்கிலும் உள்ள வானிலை அமைப்புகளில் வலுவான ‘எல் நினோ’ (El Niño) தாக்கம் நீடித்து வருவதால், ஐக்கிய அரபு அமீரகத்தில் சராசரிக்கும் அதிகமான மழைப்பொழிவு ஏற்படக்கூடும் என்று அமீரகத்தின் தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) தெரிவித்துள்ளது. இருப்பினும், தற்போது நாட்டில் வானிலை சீராகவே உள்ளது என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

எல் நினோ என்பது ஒரு இயற்கையான காலநிலை நிகழ்வு என்றும், இதன் நேரடி விளைவுகள் பசிபிக் பெருங்கடல் பகுதியில் அதிகம் காணப்பட்டாலும், ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான இதன் தாக்கம் மறைமுகமானதே என்றும் வானிலை மையம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் இந்த நிகழ்வு உலகம் முழுவதும் முற்றிலும் மாறுபட்ட வானிலை சூழல்களை உருவாக்கக்கூடியது; சில பகுதிகளில் வறட்சியையும், வேறு சில பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழையையும் இது ஏற்படுத்தக்கூடும். மழைப்பொழிவு அதிகரிக்க வாய்ப்புள்ள பகுதிகளில் ஐக்கிய அரபு அமீரகமும் ஒன்று என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

எனவே இந்த ஆண்டு எல் நினோ வலுவாக இருந்தாலும், இது நாட்டில் அதிக மழைப்பொழிவிற்கான அறிகுறியாக அமையலாம் என்றும், அமீரகத்தின் மீது அதற்கான வளிமண்டலச் சூழல்கள் உருவாகும்போது சில சமயங்களில் பலத்த மழையும் பெய்யக்கூடும் என்றும் வானிலை மையம் கூறியுள்ளது.

அத்துடன் தற்போதைய வானிலை சீராக இருப்பதாகவும், அது தொடர்ந்து உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பொதுமக்களுக்கு அந்த மையம் உறுதியளித்துள்ளது.
தொடர்ந்து பிராந்திய மற்றும் உலகளாவிய வானிலை மாற்றங்களை வானிலை ஆய்வாளர்கள் 24 மணி நேரமும் கண்காணித்து வருவதாகவும், நாட்டைப் பாதிக்கக்கூடிய குறிப்பிடத்தக்க வானிலை மாற்றங்கள் ஏதேனும் ஏற்பட்டால் அவை அதிகாரப்பூர்வ வழிகள் மூலம் முன்கூட்டியே அறிவிக்கப்படும் என்றும், போதுமான கால அவகாசத்துடன் முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும், தகவல்களைப் பரப்புவதற்கு முன் அவற்றைச் சரிபார்க்குமாறும், வதந்திகளைப் பரப்புவதையோ அல்லது மறுபதிவு செய்வதையோ தவிர்க்குமாறும், வானிலை குறித்த தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ ஆதாரங்களை மட்டுமே நம்புமாறும் பொதுமக்களையும் ஊடக நிறுவனங்களையும் NCM கேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.