ஷார்ஜாவில் வசித்து வந்த இந்திய பெண்மணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சார்ஜாவின் அல் காசிமியா (Al Qasimia) பகுதியில் வசித்து வந்த கேரளாவை சேர்ந்த 32 வயதான இந்தியப் பெண் பல் மருத்துவர் ஒருவர், திங்கள்கிழமை காலை அவரது வீட்டின் சமையலறையில் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். உயிரிழந்த டாக்டர் அஃபீனா ரஹீம் என்ற பெண்மணி தனது மூன்றரை வயது மட்டும் ஒன்றரை வயதுள்ள தனது இரண்டு குழந்தைகளைப் பராமரிப்பதற்காக பல் மருத்துவப் பணியிலிருந்து தற்காலிகமாக விலகியிருந்த நிலையில் இத்துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.
சமையலறையில் மயங்கிய பெண்
ஆசிரியராகப் பணிபுரியும் அவரது கணவர் யாசர் வேலைக்குச் சென்றிருந்த நிலையில், அஃபீனா மயங்கி விழுந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், அச்சமயம் அவரது கணவரின் சகோதரி ரம்ஷீனா, தனது மகனுடன் அந்த வீட்டில் இருந்ததாகக் கூறப்படுகிறது. அன்றைக்கு ரம்ஷீனா, தனது மகனைப் பள்ளிக்கு அனுப்பிவிட்டு மீண்டும் தூங்கச் சென்றதாக அவரது கணவர் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
பின்னர், அஃபீனாவின் இளைய குழந்தை அழுத சத்தம் கேட்டு எழுந்த அவர், சமையலறையில் அஃபீனா மயங்கி விழுந்து கிடப்பதைக் கண்டதாகவும் கூறியுள்ளார்.
CPR சிகிச்சை முயற்சி
ரம்ஷீனா உடனடியாக CPR (இதய-நுரையீரல் மீளுயிர் சிகிச்சை) அளிக்க முயன்றதுடன், ஆம்புலன்ஸுக்கும் அழைப்பு விடுத்ததாக ஹக்கீம் கூறியுள்ளார். அதன் பிறகு, அஃபீனா தனியார் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டாலும், அவரைக் காப்பாற்ற முடியவில்லை.
அவரது இறப்புக்கான சரியான காரணம் இன்னும் தெரியவில்லை என்றும், கூடுதல் தகவல்களுக்காகக் காத்திருப்பதாகவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். அவரது கணவரின் கூற்றுப்படி, அஃபீனா நல்ல உடல்நலத்துடன் இருந்திருக்கிறார். அவருக்குத் தெரிந்தவரை வேறு எந்த உடல்நலப் பிரச்சினைகளும் இருக்கவில்லை.
இதனை தொடர்ந்து அவரது உடலை கேரளாவில் உள்ள சொந்த ஊருக்குக் கொண்டு செல்வதற்கு முன்னதாக, இறப்புச் சான்றிதழ் மற்றும் பிற தேவையான ஆவணங்களுக்காகக் குடும்பத்தினர் காத்திருக்கின்றனர்.
மேலும், இறப்புக்கான காரணம் குறித்த தகவல்களைப் பெற அதிகாரிகளைத் தொடர்பு கொண்டுள்ள நிலையில், அதற்கான பதில் எதிர்பார்க்கப்படுகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel