ஓமன் அருகே சென்று கொண்டிருந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில் இந்தியர் ஒருவர் உயிரிழந்த சோக சம்பவம் ஒன்று இன்று (புதன்கிழமை) நடந்துள்ளது. இந்தியா நோக்கிச் சென்று கொண்டிருந்த ‘எம்வி கேப் டாவோ’ (MV Cape Dao) என்ற வணிகக் கப்பல் தாக்கப்பட்டதில், இந்திய மாலுமி ஒருவர் உயிரிழந்ததாக ஓமனில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து இச்சம்பவத்தை உன்னிப்பாகக் கவனித்து வருவதாகவும், கப்பல் பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய ஓமன் நாட்டு அதிகாரிகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது. அத்துடன் இக்கப்பலில் 19 இந்தியர்கள் இருந்ததாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தெரிவிக்கையில் “இந்தத் தாக்குதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தது எங்களுக்கு ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது,” என்று கூறிய தூதரகம், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்தது. மேலும், பணியமர்த்தும் முகமையுடன் (RPSL) ஒருங்கிணைந்து செயல்படுவதாகவும், உயிரிழந்த மாலுமியின் குடும்பத்தினருடன் தொடர்பில் இருப்பதாகவும் அறிக்கையில் கூறியுள்ளது.
உயிரிழந்தவர் உத்தரப் பிரதேசத்தின் டியோரியாவைச் சேர்ந்த ‘வைப்பர்’ (wiper) பணியாளரான சூரஜ் யாதவ் என்று ‘இந்தியாவின் ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியன்’ (FSUI) அடையாளம் கண்டுள்ளது.
கடல்சார் அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் சங்கத்தின் தகவல்களின்படி, ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து இந்தியா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, ஆன்டிகுவா மற்றும் பார்புடா கொடியுடன் கூடிய இக்கப்பல் தாக்கப்பட்டது. கப்பலின் மீது இரண்டு டார்பிடோக்கள் (torpedoes) தாக்கியதில், தங்கும் பகுதி மற்றும் இயந்திர அறை உள்ளிட்ட பகுதிகள் சேதமடைந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இச்சம்பவத்தில் உயிர் பிழைத்த கப்பல் பணியாளர்கள் பாதுகாப்பாக ஓமனுக்கு வெளியேற்றப்பட்டதாகக் கூறப்படுகிறது. இருப்பினும், மற்றொரு இந்தியப் பணியாளருக்குச் சிறிய அளவில் காயம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடவடிக்கை எடுக்க மாலுமிகள் சங்கம் கோரிக்கை
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, அதிக ஆபத்துள்ள கடல் பகுதிகளில் பணியாற்றும் இந்திய மாலுமிகளுக்கு உடனடி பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு FSUI வலியுறுத்தியுள்ளது.
சிவிலியன் மாலுமிகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படக் கூடாது என்று கூறிய அச்சங்கம், ஹார்முஸ் நீரிணை, ஓமன் வளைகுடா, செங்கடல் மற்றும் கருங்கடல் பகுதிகளில் இந்தியப் பணியாளர்கள் சம்பந்தப்பட்ட முந்தைய சம்பவங்கள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளது.
தற்போது, இச்சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனிடையே, உயிர் பிழைத்த பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் கூடுதல் விவரங்கள் குறித்து அதிகாரிகளும் சம்பந்தப்பட்ட கடல்சார் அமைப்புகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel