சவூதி அரேபியாவின் கிழக்கு மாகாணம் மற்றும் தம்மாம் ஆகிய இடங்களில் நடந்த இருவேறு சம்பவங்களில், மூன்று வெளிநாட்டவர்கள் மற்றும் ஒரு சவூதி குடிமகன் உட்பட மொத்தம் நான்கு பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அந்நாட்டின் மீது தாக்குதல்கள் தீவிரமடைந்து வரும் சூழலில் இந்தச் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.
இந்தச் சம்பவங்கள் புதன்கிழமை, அக்டோபர் 21 அன்று, சவூதி அரம்கோவின் (Saudi Aramco) ஷைபா எண்ணெய் வயல் மற்றும் தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் நிகழ்ந்தன. இந்த சம்பவத்தில் இந்தியர்கள் உட்பட பலர் காயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. அதேவேளையில், விமான நிலையத்தின் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கிவிட்டதாக சவூதி அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஏமனின் ஹூதி குழுவினருக்கு எதிராகப் போரிடும் சவூதி தலைமையிலான கூட்டணி, கிழக்கு மாகாணத்தில் நான்கு ட்ரோன்களை இடைமறித்து அழித்ததாக அறிவித்ததைத் தொடர்ந்து இந்த நிகழ்வுகள் நடந்துள்ளன.
சவூதி எரிசக்தி அமைச்சகத்தின் தகவல்படி, புதன்கிழமை காலை ஷைபா எண்ணெய் வயலில் உள்ள ஒரு செயலாக்க நிலையத்தை (processing facility) குறிவைத்து வந்த ட்ரோன் ஒன்றை, சவூதி வான் பாதுகாப்புப் படை இடைமறித்து அழித்தது தெரிய வந்துள்ளது.
இந்த இடைமறிப்பு நடவடிக்கையின் போது சிதறி விழுந்த பாகங்களால், பிலிப்பைன்ஸ் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த இருவர் உயிரிழந்ததாகவும், பாகிஸ்தான் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த தலா ஒருவர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டதாக அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்த இடைமறிப்பு நடவடிக்கையைத் தொடர்ந்து, எண்ணெய் வயலில் பணியாற்றும் ஒப்பந்ததாரர் ஒருவருக்குச் சொந்தமான வாகனம், அந்த வளாகத்திற்கு வெளியே தீப்பிடித்து எரிந்ததாகக் கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவத்தால் எண்ணெய் வயலின் செயல்பாடுகளில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சவூதி அரேபியாவில் உள்ள இந்தியத் தூதரகம், இந்தியர் ஒருவர் காயமடைந்ததை உறுதிப்படுத்தியது. மேலும், இது குறித்து சவூதி அதிகாரிகளுடன் தொடர்பில் இருப்பதாகவும், கூடுதல் விவரங்களுக்காகக் காத்திருப்பதாகவும் தூதரகம் தெரிவித்துள்ளது.
“காயமடைந்த இந்தியருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் நாங்கள் வழங்குவோம்” என்று தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.
இந்தியர் மற்றும் சவூதி குடிமகன் பலி
இதற்கிடையில், தம்மாமில் உள்ள மன்னர் ஃபஹத் சர்வதேச விமான நிலையமும் புதன்கிழமை மாலை தாக்குதலுக்கு உள்ளானதாக, சவூதியின் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) வியாழக்கிழமை (அக்டோபர் 22) அதிகாலை தெரிவித்துள்ளது.
இந்தச் சம்பவத்தில் இந்தியர் ஒருவர் மற்றும் சவூதி குடிமகன் ஒருவர் கொல்லப்பட்டதாக அறிக்கைகள் கூறுகின்றன. மேலும், ஒரு சவூதி நாட்டவர், ஒரு நேபாள நாட்டவர், மற்றும் இந்தியா, ஏமன், வங்கதேசம் ஆகிய நாடுகளைச் சேர்ந்த தலா இருவர் உட்பட எட்டு பேர் காயமடைந்தததாகக் கூறப்படுகிறது.
காயமடைந்தவர்களில் சிலருக்கு லேசான காயங்களும், சிலருக்குக் கடுமையான காயங்களும் ஏற்பட்டுள்ளதாக GACA தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலால் சொத்து சேதமும் ஏற்பட்டது, அதன் அளவு இன்னும் மதிப்பிடப்பட்டு வருகிறது. இதைத் தொடர்ந்து, கிங் ஃபஹத் சர்வதேச விமான நிலையத்தில் செயல்பாடுகள் மீண்டும் தொடங்கப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தீவிரமடையும் தாக்குதல்கள்
அண்டை நாடான ஏமனில் ஈரான் ஆதரவு ஹூதி குழுவினருடன் அதிகரித்து வரும் மோதல்களுக்கு மத்தியில், சவூதி அரேபியா இந்த மாதம் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்டுள்ளது.
சமீபத்திய சம்பவங்கள், ரியாத்தின் சர்வதேச விமான நிலையத்தில் நடந்த தாக்குதலைத் தொடர்ந்து நிகழ்ந்துள்ளன. இது பல ஆண்டுகளில் சவூதி அரேபியா சந்தித்த மிகக் கொடூரமான தாக்குதல்களில் ஒன்றாகக் கூறப்படுகிறது.
ஏமனில் மோதல் 2014-ஆம் ஆண்டு தொடங்கியது, அப்போது ஹூதிகள் தலைநகர் சனாவைக் கைப்பற்றினர். ஏமனின் சர்வதேச அங்கீகாரம் பெற்ற அரசாங்கத்திற்கு ஆதரவாக 2015-ஆம் ஆண்டில் சவூதி தலைமையிலான கூட்டணி தலையிட்டது.
சவூதி அதிகாரிகள் இந்த அச்சுறுத்தல்களுக்கு தொடர்ந்து பதிலளித்து வருவதாலும், தாக்குதல்களால் ஏற்பட்ட சேதங்களை மதிப்பிட்டு வருவதாலும், சமீபத்திய சம்பவங்கள் பாதுகாப்பு குறித்த கவலைகளை அதிகரித்துள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel