ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிப்பவர்கள், பள்ளிகள், வணிக நிறுவனங்கள் மற்றும் அரசு அமைப்புகள், நவம்பர் 3 அன்று தேசியக் கொடியை ஏற்றி, ‘கொடி தினம் 2026’-ஐக் கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் துபாயின் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள், செவ்வாய்க்கிழமை அன்று விடுத்த அழைப்பில், குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அனைவரும் பெருமையுடன் தேசியக் கொடியை ஏற்றி, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை கொண்டாடுமாறு வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், நாட்டின் அனைத்து மக்களையும் ஐக்கிய அரபு அமீரகக் கொடியை “உயரமாகவும், பெருமையுடனும், கண்ணியத்துடனும், நம் நாட்டின் வானில் பறக்கவிடவும்” என்று கேட்டுக்கொண்டார்.
அமீரக கொடி தினம் ஏன் நவம்பர் 3 அன்று கொண்டாடப்படுகிறது?
ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது அதிபரான ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் அவர்கள் பதவியேற்ற நாளைக் குறிக்கும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 அன்று ‘கொடி தினம்’ கடைப்பிடிக்கப்படுகிறது.
ஷேக் முகமது, 2012-ஆம் ஆண்டு டிசம்பர் 11 அன்று இந்த வருடாந்திர நிகழ்வை அறிவித்தார். இதற்கான முதல் கொண்டாட்டம் 2013-இல் நடைபெற்றது. இந்த நாள், நாட்டின் மீதான விசுவாசம், தேசிய அடையாளம் மற்றும் நாட்டை ஒன்றிணைக்கும் விழுமியங்களுக்கான நன்றியுணர்வின் அடையாளமாகத் திகழ்கிறது.
தேசிய மாதத்தின் தொடக்கமாக அமையும் கொடி தினம்
அதுமட்டுமில்லாமல், கடந்த இரண்டு ஆண்டுகளாக, கொடி தினமானது ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘தேசிய மாதத்தின்’ (National Month) தொடக்கமாகவும் இருந்து வருகிறது. இது, டிசம்பர் 2 அன்று கொண்டாடப்படும் நாட்டின் தேசிய தினமான ‘ஈத் அல் எத்திஹாத்’ (Eid Al Etihad) வரை நீடிக்கும் கொண்டாட்டக் காலமாகும்.
இந்தக் காலக்கட்டத்தில், அமீரகம் முழுவதும் உள்ள முக்கிய அடையாளங்கள், கடற்கரைகள் மற்றும் பொது இடங்களில் அமீரகக் கொடியின் வண்ணங்களால் அலங்கரிக்கப்படுகின்றன. மேலும், வீடுகள், பள்ளிகள், அலுவலகங்கள் மற்றும் அரசு கட்டிடங்களில் தேசியக் கொடிகள் ஏற்றப்படுகின்றன.
இவ்வாறு, நாடு முழுவதும் தேசியக் கொண்டாட்டங்கள் நிறைந்த மாதம் தொடங்கவுள்ள நிலையில், குடியிருப்பாளர்களும் பல்வேறு அமைப்புகளும் ஐக்கிய அரபு அமீரகக் கொடியை ஏற்றி இந்தக் கொண்டாட்டங்களில் பங்கேற்குமாறு ஊக்குவிக்கப்படுகின்றனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel