2027-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள புதிய கூட்டாட்சி போக்குவரத்து விதிகளின்படி, ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநர்கள் 24 மணிநேர கால இடைவெளியில் ஒன்பது மணிநேரத்திற்கு மேல் வாகனம் ஓட்டக்கூடாது என கூறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், ஓட்டுநர்கள் மிகுந்த சோர்வு அல்லது களைப்புடன் இருக்கும்போது, பாதுகாப்பாக வாகனம் ஓட்டும் திறன் பாதிக்கப்படும் என்பதால், அத்தகைய சூழலில் அவர்கள் வாகனம் ஓட்டக்கூடாது என்றும் இந்த விதிகள் தெளிவாகக் குறிப்பிடுகின்றன. இந்த கட்டுப்பாடு லாரி ஓட்டுநர்கள் அல்லது தொழில்முறை ஓட்டுநர்களுக்கு மட்டுமல்ல, அனைத்து வாகன ஓட்டிகளுக்கும் பொருந்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறை, போக்குவரத்து ஒழுங்குமுறை குறித்த 2024-ஆம் ஆண்டின் கூட்டாட்சி ஆணைச் சட்ட எண் 14-க்கான நிர்வாக ஒழுங்குமுறைகளை உள்ளடக்கிய, 2026-ஆம் ஆண்டின் அமைச்சரவை முடிவெண் 174-ன் பிரிவு 7, பத்தி 2-இல் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல், இந்த ஒன்பது மணிநேர வாகன ஓட்டுதல் வரம்பில் மாற்றங்களைச் செய்வதற்கான அதிகாரம் கூட்டாட்சி போக்குவரத்து கவுன்சிலுக்கு (Federal Traffic Council) வழங்கப்பட்டுள்ளது.
முக்கியமாக, ஒன்பது மணிநேர வரம்பு என்பது, அந்த நேரம் முடியும் வரை தொடர்ந்து வாகனம் ஓட்டலாம் என்று அர்த்தமல்ல. ஒரு ஓட்டுநர் தான் மிகவும் சோர்வாக உணர்ந்தால், ஒன்பது மணிநேரத்தை எட்டுவதற்கு முன்பாகவே வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் என்று கூறப்படுகிறது.
அமீரகத்தில் சோர்வினால் ஏற்பட்ட 20 விபத்துகள்
உள்துறை அமைச்சகத்தின் புள்ளிவிவரங்களின்படி, 2025-ஆம் ஆண்டில் ஐக்கிய அரபு அமீரகத்தில் ஓட்டுநர்களின் சோர்வு மற்றும் தூக்கமின்மையால் 20 போக்குவரத்து விபத்துகள் நிகழ்ந்துள்ளன.
அக்டோபர் 29 அன்று, எமிரேட்ஸ் சாலையில் (E611) அபுதாபி நோக்கிச் சென்ற லாரி ஓட்டுநர் ஒருவர், வாகனம் ஓட்டிக்கொண்டிருக்கும்போதே தூங்கிவிட்டதால், சாலையோரத்தில் இருந்த உலோகத் தடுப்புச் சுவரில் மோதி விபத்துக்குள்ளானார். இதனைத் தொடர்ந்து துபாய் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஓட்டுநருக்குத் தூக்கம் வந்ததால், வாகனத்தின் மீதான கட்டுப்பாட்டை இழந்து, அது பாதையிலிருந்து விலகிச் சென்றதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. அவர் லேசான காயங்களுடன் சம்பவ இடத்திலேயே சிகிச்சை பெற்றார்.
இச்சம்பவத்தைத் தொடர்ந்து, துபாய் காவல்துறையின் பொது போக்குவரத்துத் துறையின் இயக்குநர் பிரிகேடியர் ஜுமா சலீம் பின் சுவைதான் வெளியிட்ட அறிக்கையில், வாகன ஓட்டிகள் வாகனம் ஓட்டுவதற்கு முன்பு போதுமான ஓய்வு எடுக்க வேண்டும் என்றும், சோர்வாகவோ அல்லது தூக்க உணர்வுடன்வோ இருக்கும்போது உடனடியாக வாகனத்தை நிறுத்திவிட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
ஓட்டுநர்களின் சோர்வைக் குறிக்கும் எச்சரிக்கை அறிகுறிகள்
‘ரோட்சேஃப்டி யுஏஇ’ (RoadSafetyUAE) அமைப்பின் கூற்றுப்படி, சோர்வு மிகவும் ஆபத்தானது. ஏனெனில், ஓட்டுநர்கள் தாங்கள் எவ்வளவு சோர்வாக இருக்கிறோம் என்பதை உணரும் திறனையே இது பாதிக்கக்கூடும்.
போதிய தூக்கம் இல்லாமை மற்றும் நீண்ட நேரம் தொடர்ந்து வாகனம் ஓட்டுதல் ஆகியவை இதற்கு முக்கிய காரணங்களாகும். வாகன ஓட்டிகள் பின்வரும் எச்சரிக்கை அறிகுறிகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்:
- அடிக்கடி கொட்டாவி விடுதல்.
- கண்கள் வலித்தல் அல்லது சோர்வடைதல்.
- எதிர்வினையாற்றுவதில் தாமதம் ஏற்படுதல்.
- தலையை நேராக வைத்திருக்க சிரமப்படுதல்.
- வாகனம் பாதையை விட்டு விலகிச் செல்லுதல்.
- வாகன வேகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்படுதல்.
- கடந்த சில கிலோமீட்டர்களில் பயணித்தது குறித்து நினைவுகூர முடியாமல் போகுதல்.
ஓட்டுநர்கள் சோர்வைத் தவிர்ப்பது எப்படி?
பயணத்தைத் தொடங்குவதற்கு முன், ஏழு முதல் எட்டு மணிநேரம் வரை இடையூறின்றி உறங்க வேண்டும் என்று ‘RoadSafetyUAE’ பரிந்துரைக்கிறது.
மேலும், ஓட்டுநர்களுக்குப் பின்வரும் அறிவுரைகளை வழங்குகிறது:
- குறைந்தது ஒவ்வொரு இரண்டு மணிநேரத்திற்கும் ஒருமுறை 15 நிமிட இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.
- சோர்வாக உணரும்போது, வாகனத்தை பாதுகாப்பாக ஓரமாக நிறுத்தி ஓய்வெடுங்கள்.
- விழிப்புடன் இருக்க இசை அல்லது காற்றோட்டத்தை மட்டும் நம்பியிருக்க வேண்டாம். இவை தற்காலிக நிவாரணத்தை மட்டுமே தரும்.
- போதுமான அளவு உறங்குங்கள், சோர்வைப் போக்குவதற்கான ஒரே சிறந்த வழி இதுதான்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel