ADVERTISEMENT

ஷார்ஜா, ஃபுஜைராவில் கொட்டித்தீர்த்த கனமழை: நிலையற்ற வானிலை தொடரும் என தேசிய வானிலை மையம் எச்சரிக்கை!!

Published: 11 Nov 2026, 8:21 PM |
Updated: 11 Nov 2026, 8:21 PM |
Posted By: Menaka

அமீரகத்தில் கோடைகாலம் முடிவடைந்து குளிர்காலத்தை நோக்கி நகரும் நிலையில் கடந்த சில நாட்களாக ஆங்காங்கே மழை பெய்தும் வருகின்றது. அதன் தொடர்ச்சியாக இன்றைய தினம் (நவம்பர் 11, புதன்கிழமை) ஷார்ஜா மற்றும் ஃபுஜைராவின் சில பகுதிகளில் வசிப்பவர்கள் கனமழையை எதிர்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் வரும் நாட்களில் ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் மேலும் நிலையற்ற வானிலை நிலவும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி ஏற்கெனவே, துபாய், அபுதாபி மற்றும் வடக்கு எமிரேட்கள் உட்பட பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை மற்றும் கனமழை பெய்யும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

அரபிக்கடலில் இருந்து வரும் ஈரப்பதம் நிறைந்த காற்று, நெருங்கி வரும் குறைந்த காற்றழுத்த அமைப்புடன் இணைவதால், இந்த நிலையற்ற வானிலை நவம்பர் 19, வியாழக்கிழமை வரை தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், மேகமூட்டம் அதிகரித்து, மழை பெய்து, நாட்டில் வெப்பநிலை படிப்படியாகக் குறையும் என்று கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM), திங்கள் முதல் வியாழன் வரை நிலையற்ற வானிலை நிலவும் என்றும், மழைப்பொழிவு மேலும் பரவலாகும் என்றும் முன்னறிவித்திருந்தது.

ADVERTISEMENT

இது குறித்து NCM வானிலை ஆய்வாளர் டாக்டர் அகமது ஹபீப் ஊடகங்களிடம் தெரிவிக்கையில், புதன்கிழமை பிற்பகலில் இருந்து குறைந்த காற்றழுத்த அமைப்பு மேலும் வலுப்பெற்று, வெப்பச்சலன மேகங்கள் உருவாகத் தூண்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறினார்.

சமீபத்திய அறிக்கைகளின் படி, ஷார்ஜாவில் உள்ள மிலெய்ஹா, அல் மடம், அல் பதாயர் மற்றும் ஷவ்கா உள்ளிட்ட பல பகுதிகளில் இன்று (புதன்கிழமை) மழை பெய்துள்ளது.

ADVERTISEMENT

வானிலை எச்சரிக்கை

இந்நிலையில், அமீரகத்தின் NCM, புதன்கிழமை இரவு 11 மணி வரை வெப்பச்சலன மேகங்கள் உருவாகக்கூடும் என ஆரஞ்சு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது. மேலும், சில பகுதிகளில் அபாயகரமான வானிலை நிலவக்கூடும் என்பதால், மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு அது அறிவுறுத்தியுள்ளது.

நாடு முழுவதும் நிலையற்ற வானிலை நிலவும் என்றும், பல்வேறு தீவிரத்தன்மை கொண்ட மழை மற்றும் காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது. சில பகுதிகளில் இடி, மின்னல், ஆலங்கட்டி மழை மற்றும் கிடைமட்டப் பார்வைக் குறைவு ஏற்படக்கூடும் என்றும் தெரிவித்துள்ளது.

குடியிருப்பாளர்களுக்கான பாதுகாப்பு அறிவுரை

மழைக்காலத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அதிகாரிகள் குடியிருப்பாளர்களை வலியுறுத்தியுள்ளனர்:

  • விழிப்புடன் இருங்கள் மற்றும் அதிகாரப்பூர்வ வானிலை அறிவிப்புகளைப் பின்பற்றுங்கள்.
  • வாகனம் ஓட்டும்போது வேகத்தைக் குறைத்து, மற்ற வாகனங்களிலிருந்து பாதுகாப்பான தூரத்தைப் பராமரிக்கவும்.
  • பள்ளத்தாக்குகள் மற்றும் மழைநீர் தேங்கக்கூடிய பகுதிகளைத் தவிர்க்கவும்.
  • நிலையற்ற வானிலை நிலவும் காலங்களில் கடற்பகுதிகளிலிருந்தும் கடற்கரைகளிலிருந்தும் விலகி இருங்கள்.

மேலும் மழை மற்றும் இடியுடன் கூடிய மழையை எதிர்பார்க்கலாம் என்பதால், பொதுமக்கள் தங்கள் பயணங்களைத் திட்டமிடும்போது கவனமாக இருக்குமாறும், அதிகாரிகள் வழங்கும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel