துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB), 2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் மட்டுமே சுமார் 50.4 மில்லியன் பயணிகளை வரவேற்றுள்ளதாக புதிய அறிக்கைகள் கூறுகின்றன. பிராந்திய ராணுவ மோதலால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஏற்பட்ட தடங்கல்களிலிருந்து, விமான நிலையம் தொடர்ந்து மீண்டு வருகிறது என்பதை இந்த எண்ணிக்கைகள் பிரதிபலிக்கின்றன.
துபாய் ஏர்போர்ட்ஸ் (Dubai Airports) நிறுவனம் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட தகவலின்படி, மூன்றாவது காலாண்டில் மட்டும் 18.8 மில்லியன் பயணிகள் இந்த விமான நிலையத்தைப் பயன்படுத்தியுள்ளனர். இதில் ஆகஸ்ட் மாதம் அதிகபட்சமாக 6.6 மில்லியன் பயணிகளுடன் பரபரப்பான மாதமாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
நிலைமை முன்னேற்றம் அடைந்திருந்தாலும், பயணிகள் எண்ணிக்கை கடந்த ஆண்டை விடக் குறைவாகவே உள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர். கடந்த ஆண்டின் தரவுகளுடன் ஒப்பிடுகையில், முதல் ஒன்பது மாதங்களில் பயணிகள் எண்ணிக்கை முந்தைய ஆண்டைக் காட்டிலும் 28.1 சதவீதம் குறைந்துள்ளது. மேலும், மூன்றாவது காலாண்டில் இந்த சரிவு 22.1 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், விமான நிறுவனங்களின் வருகை அதிகரிப்பதாலும், போக்குவரத்துத் தொடர்புகள் வலுவடைந்து வருவதாலும், 2026-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 70 மில்லியனுக்கும் அதிகமான பயணிகளை வரவேற்க முடியும் என்று துபாய் ஏர்போர்ட்ஸ் எதிர்பார்க்கிறது.
இது குறித்த துபாய் ஏர்போர்ட்ஸ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி பால் கிரிஃபித்ஸ் அவர்கள் பேசுகையில், “இந்த அணுகுமுறையில் புத்தாக்கம் மிக முக்கியமானது. நாங்கள் எளிமைப்படுத்தும் ஒவ்வொரு செயல்முறையும், நீக்கும் ஒவ்வொரு தடையும்கூட, ஏற்கனவே உள்ள வசதிகளை இன்னும் திறம்படப் பயன்படுத்த உதவுகிறது” என்று தெரிவித்துள்ளார்.
தொழில்நுட்பம் மற்றும் மேம்படுத்தப்பட்ட செயல்பாடுகள் மூலம், விமான நிலையத்தின் பரப்பளவை விரிவுபடுத்தாமலேயே அதன் கொள்ளளவை அதிகரிக்க முடியும் என்றும், அதே சமயம் பயணிகளின் பயண அனுபவத்தை மேலும் மென்மையாக்க முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
வேகமெடுக்கும் மீட்சி
வெளியான தரவுகளின் படி, மூன்றாவது காலாண்டில் ஏற்பட்ட சரிவு, ஆண்டின் முதல் பாதியில் பதிவான சரிவை விடக் குறைவாக உள்ளது. இது விமானப் போக்குவரத்தில் படிப்படியான மீட்சி ஏற்பட்டுள்ளதைக் காட்டுகிறது.
DXB விமான நிலையம் இரண்டாவது காலாண்டில் 13 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. இதன் மூலம், ஆண்டின் முதல் பாதியில் மொத்தம் 31.5 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இது 2025-ஆம் ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.3 சதவீத சரிவாகும்.
அக்காலகட்டத்தில், சர்வதேச விமான நிறுவனங்களின் வருகை, மேம்பட்ட போக்குவரத்துத் தொடர்புகள் மற்றும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு ஆகியவை, தேவை இன்னும் வலுவாக இருப்பதற்கான அறிகுறிகளாக இருந்தன என்று துபாய் ஏர்போர்ட்ஸ் குறிப்பிட்டிருந்தது.
தற்போது, இந்த விமான நிலையம் 57 விமான நிறுவனங்கள் மூலம் 101 நாடுகளில் உள்ள 235 இடங்களுடன் இணைக்கப்பட்டுள்ளது. முதல் பாதியின் இறுதியில், சுமார் 50 சர்வதேச விமான நிறுவனங்கள் இங்கு சேவைகளை வழங்கிக் கொண்டிருந்தன.
துபாயின் மிகப்பெரிய பயணிகள் சந்தையாக நீடிக்கும் இந்தியா
மூன்றாவது காலாண்டில், துபாய் சர்வதேச விமான நிலையத்திற்கு (DXB) அதிக எண்ணிக்கையிலான பயணிகள் வந்த நாடாக இந்தியா முதலிடத்தில் உள்ளது. சமீபத்திய தரவுகளின் படி, இந்தியாவிலிருந்து மொத்தம் 2.6 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். இதர முக்கிய நாட்டுச் சந்தைகள் பின்வருமாறு:
- சவூதி அரேபியா: 1.4 மில்லியன் பயணிகள்
- UK: 1.3 மில்லியன்
- பாகிஸ்தான்: 800,000
- USA: 640,000
- ஜெர்மனி: 480,000
இதேபோல், லண்டன் அதிக பயணிகள் வருகை தந்த நகரமாக முதலிடத்தில் இருந்தது (784,000 பயணிகள்). அதனைத் தொடர்ந்து பின்வரும் நகரங்கள் உள்ளன:
- மும்பை: 528,000
- புது தில்லி: 525,000
- ரியாத்: 500,000
- ஜித்தா: 490,000
அதுமட்டுமில்லாமல், சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த இடங்களுக்கும் இந்த காலாண்டில் பயணிகள் வருகை அதிகரித்தது. மிலன் நகருக்கான போக்குவரத்து 20 சதவீதமும், புக்கெட் (17 சதவீதம்), கேப் டவுன் (14 சதவீதம்), பார்சிலோனா (13 சதவீதம்) மற்றும் டென்பசார் (11 சதவீதம்) ஆகிய இடங்களுக்கான போக்குவரத்து முறையே அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.
செப்டம்பர் மாதத்தில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் (DXB) மொத்தப் பயணிகளில் 51 சதவீதம் பேர் இணைப்புப் பயணிகளாகவும் (connecting passengers), 49 சதவீதம் பேர் நேரடிப் பயணிகளாகவும் (direct passengers) இருந்தனர். இந்த விகிதம் பருவ காலத்திற்கு ஏற்ப மாறுபடும். துபாயில் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் குளிர்காலங்களில், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பதால், நேரடிப் பயணிகளின் எண்ணிக்கை பொதுவாக உயரும்.
பயணிகள் போக்குவரத்து, சரக்கு மற்றும் விமான நிலையச் செயல்பாடு
2026-ஆம் ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில், துபாய் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாட்டு விவரங்கள் பின்வருமாறு கொடுக்கப்பட்டுள்ளது:
- விமான இயக்கங்கள்: 243,000; இது முந்தைய ஆண்டைக் காட்டிலும் 27.6 சதவீதம் குறைவு. இதில் மூன்றாவது காலாண்டில் மட்டும் 92,800 விமான இயக்கங்கள் இடம்பெற்றன.
- சரக்கு போக்குவரத்து: 1.215 மில்லியன் டன்கள் கையாளப்பட்டுள்ளது. இது 23.2 சதவீதம் குறைவு. இதில் மூன்றாவது காலாண்டில் 464,000 டன்கள் கையாளப்பட்டன.
- சராசரி இருக்கை நிரப்பு திறன் (Load factor): 74 சதவீதம்; இது முந்தைய ஆண்டை விட 3 சதவீத புள்ளிகள் குறைவு.
- ஒரு விமான இயக்கத்திற்கான பயணிகள் எண்ணிக்கை: சராசரியாக 211 பேர்; இது 0.8 சதவீத சரிவாகும்.
இவ்வாறு பயணிகளின் எண்ணிக்கை குறைவாக இருந்தபோதிலும், மூன்றாவது காலாண்டில் விமான நிலையம் தனது சேவையைச் சிறப்பாகவே வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
- வருகையின் போது பாஸ்போர்ட் சோதனை: 99.9 சதவீத பயணிகள் 15 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே காத்திருந்தனர்.
- புறப்பாட்டின் போது பாஸ்போர்ட் சோதனை: 99.9 சதவீத பயணிகள் 10 நிமிடங்களுக்கும் குறைவான நேரமே காத்திருந்தனர்.
- பாதுகாப்புச் சோதனைகள்: 99.7 சதவீத பயணிகள் ஐந்து நிமிடங்களுக்கும் குறைவான நேரமே காத்திருந்தனர்.
- பேக்கேஜ் கையாளுதல்: விமான நிலையம் 48 மில்லியன் பைகளைக் கையாண்டது; இதில் 91 சதவீதப் பொதிகள் விமானம் வந்தடைந்த 45 நிமிடங்களுக்குள் ஒப்படைக்கப்பட்டன.
- பயணப் பை கையாளுதல் துல்லியம்: பைகளைக் கையாள்வதில் 99.73 சதவீத துல்லியம் எட்டப்பட்டது. அதே சமயம், தவறாகக் கையாளப்பட்ட பைகளின் விகிதம், 1,000 பயணிகளுக்கு 2.67 என்ற அளவில் இருந்தது.
இதற்கு முன்பு, 2025-ஆம் ஆண்டில், துபாய் சர்வதேச விமான நிலையம் (DXB) சாதனை அளவாக 95.2 மில்லியன் பயணிகளைக் கையாண்டது. இது அதன் வரலாற்றிலேயே மிகவும் பரபரப்பான ஆண்டாகும்.
துபாய் விமான நிலையங்கள் நிறுவனம் (Dubai Airports), அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்தையும் (DWC) நிர்வகித்து வருகிறது. 2024-ஆம் ஆண்டு மே மாதம் அறிவிக்கப்பட்ட இந்த விமான நிலையத்தின் விரிவாக்கத் திட்டங்களுக்கு, 35 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீடு செய்யப்படவுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel