அபுதாபியில் உள்ள குடியிருப்பு பகுதிகளான, மதினத் அல் ரியாத் மற்றும் ஷக்பூத் சிட்டியில், குடுயிருப்பாளர்களின் வசதிக்காக மொத்தம் 150 மில்லியன் திர்ஹமிற்கும் அதிகமான முதலீட்டில் 12 புதிய பூங்காக்களை அபுதாபி முனிசிபாலிட்டி திறந்துள்ளது. இவை அப்பகுதி மக்களுக்குப் புதிய பொழுதுபோக்கு இடங்களையும் விளையாட்டு வசதிகளையும் வழங்கும் எனவும் கூறியுள்ளது.
சுமார் 135,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவைக் கொண்ட இந்தப் பூங்காக்கள் சமூக நலனை மேம்படுத்தவும், மக்கள் வெளிப்புற நடவடிக்கைகளில் எளிதாக ஈடுபடவும் உதவுவதாக அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
இதில், மதினத் அல் ரியாத் சிட்டியில் 100,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஏழு பூங்காக்களும், ஷக்பூத் சிட்டியில் 37,000 சதுர மீட்டர் பரப்பளவில் ஐந்து பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, இங்கு 3,129-க்கும் மேற்பட்ட உள்நாட்டு மரங்கள் நடப்பட்டுள்ளன. மேலும், 87,200 சதுர மீட்டர் பரப்பளவில் பசுமையான நிலப்பரப்புகள் உருவாக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
விளையாட்டு மற்றும் குடும்பங்களுக்கான வசதிகள்
இந்தப் பூங்காக்களில் பல்வேறு வசதிகள் உள்ளன, அவற்றுள் சில:
- பேடல் (Padel) மற்றும் பல பயன்பாட்டு விளையாட்டு மைதானங்கள்.
- கைப்பந்து (Volleyball) மற்றும் பூப்பந்து (Badminton) விளையாடுவதற்கான இடங்கள்.
- சைக்கிளிங் பாதைகள் மற்றும் உடற்பயிற்சி நிலையங்கள்.
- குழந்தைகளுக்கான விளையாட்டு இடங்கள்.
- பிக்னிக் மேஜைகள் மற்றும் குடிநீர் வசதிகள்.
மேலும், சூரிய ஆற்றல் திறன் கொண்ட மின்விளக்குகள் மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த நீர்ப்பாசன அமைப்புகளும் இந்த பூங்காக்களில் நிறுவப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்த அபுதாபி சிட்டி முனிசிபாலிட்டியின் இயக்குநர் ஜெனரல் அகமது ஃபதேல் அல் மெஹைர்பி, ‘குடும்ப ஆண்டு’ (Year of the Family) கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகத் திறக்கப்பட்டுள்ள இந்தப் பூங்காக்கள், குடும்ப நலன் மற்றும் வலுவான சமூகங்களை உருவாக்குவதில் அபுதாபியின் அர்ப்பணிப்பைக் காட்டுகின்றன என்று வலியுறுத்தியுள்ளார். மேலும், பூங்காக்களைப் பராமரிப்பதில் நகராட்சிக்கும் குடியிருப்பாளர்களுக்கும் கூட்டுப் பொறுப்பு இருப்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
அபுதாபியின் பசுமை இடங்கள் விரிவாக்கம்
இந்த புதிய பூங்காக்கள், அபுதாபியின் விரிவான பூங்கா மேம்பாட்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாகும். நகராட்சி மற்றும் போக்குவரத்துத் துறை (DMT) அளித்த தகவல்படி, 2026-ஆம் ஆண்டின் முதல் பாதியில் மட்டும் 66 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, 2024-ஆம் ஆண்டு முதல் இதுவரை மொத்தம் 279 பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel