ADVERTISEMENT

ஒரு மாதத்திற்கும் மேலாக நீடிக்கும் பயணத்தடை..!! வாழ்வாதாரத்திற்காக அமீரகம் திரும்ப முடியாமல் தவிக்கும் இந்தியர்கள்..!!

Published: 11 Jun 2021, 3:08 AM |
Updated: 11 Jun 2021, 5:41 AM |
Posted By: admin

இந்தியாவில் நிலவி வரும் கொரோனா இரண்டாம் அலையின் பாதிப்பால், இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையானது கடந்த ஏப்ரல் மாதம் 25 ம் தேதியில் இருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஒரு மாதத்திற்கும் மேலாக இந்த தடை நீடித்து வரும் பட்சத்தில் ஜூலை 6 ம் தேதி வரையிலும் இத்தடையை நீக்க வாய்ப்பே இல்லை எனும் விதமாக இந்திய மற்றும் அமீரக விமான நிறுவனங்கள் தகவல் தெரிவித்துள்ளன. இதனால் அமீரகத்தில் வேலை பார்த்து விடுமுறைக்குச் சென்ற பல இந்தியர்களும் அமீரகம் திரும்பி வர முடியாமல் தவித்து வருகின்றனர்.

எப்போதுதான் விமான சேவைகள் மீண்டும் இயக்கப்படும் என நினைத்துக் கொண்டிருக்கும் வேளையில், தடையை நீட்டிக்கொண்டே போவது பலரையும் கவலைக்குள்ளாக்கி உள்ளது. மேலும், அமீரகத்தில் இருந்து விடுப்பில் இந்தியா சென்று வர நினைப்பவர்களும் தங்களின் விடுமுறைக்காலத்தை தள்ளி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ADVERTISEMENT

இந்த தடையானது கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்களுக்கு பொருந்தாது என்பதால், கோல்டன் விசாக்களை வைத்திருக்கும் இந்தியர்கள் எவ்வித பிரச்சனையுமின்றி அமீரகத்திற்கு பயணிக்கின்றனர்.

மேலும், சிலர் அமீரகத்திற்கு திரும்பி வேலை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால் எப்படியாவது அமீரகம் சென்று விட வேண்டும் என எண்ணி இந்தியாவில் இருந்து வேறு நாட்டிற்கு பயணப்பட்டு அங்கு 14 நாட்கள் முடிந்த பின்னர் அமீரகத்திற்கு திரும்புகின்றனர்.  இந்த பயணத்தில் இரு நாடுகளுக்கு பயணிப்பதற்கான டிக்கெட் விலை, தனிமைப்படுத்துதல் மற்றும் இதர செலவினங்கள் காரணமாக அதிக சம்பளம் பெறும் இந்தியர்களுக்கே இது சாத்தியமாகும் அன்றி குறைவான சம்பளம் பெறுபவர்களுக்கு இது சாத்தியமில்லை.

ADVERTISEMENT

தங்களின் வாழ்வாதாரத்திற்காக அமீரகத்திற்கு வந்து வேலை பார்க்க வேண்டிய கட்டாயம் ஒருபுறமும், நீண்ட நாட்கள் வேலைக்கு செல்லாததால் தனது வேலை பறிபோய்விடுமோ என்ற அச்சம் மறுபுறமும் என என்ன செய்வதென்று தெரியாமல் இந்தியாவில் இருப்பவர்கள் குழப்பத்துடனும் கவலையுடனும் நாட்களைப் போக்கிக் கொண்டிருக்கின்றனர்.

இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவிற்கான தடுப்பூசி போடப்படுவதையொட்டி பல பேர் தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர். அவர்களில் அமீரகத்திற்கு திரும்ப வேண்டிய சூழலில் இருப்பவர்கள் தடுப்பூசி போட்டவர்களையாவது அமீரகத்திற்கு பயணிக்க அனுமதிக்குமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

இப்படிப்பட்ட சூழ்நிலையில், விமான சேவைக்கான தடையை விரைவில் நீக்குவதே பல இந்தியர்களின் வாழ்வாதாரத்திற்கு வழிவகுக்கும். மேலும் இந்தியாவில் கொரோனா பாதிப்பு தற்பொழுது குறைந்திருப்பதால், அமீரக அரசு இதனை கருத்தில் கொண்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மீண்டும் இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு விமான சேவையை இயக்க வேண்டும் என்பதே அமீரக வாழ் இந்தியர்கள் அனைவரின் ஒருமித்த குரலாக இருக்கின்றது.