ADVERTISEMENT

அமீரக பயணத்தடை: 5 வருட விசா பெற்றவர்களுக்கு தடையில் விலக்கு..!! சார்ட்டர் விமானங்களுக்கு புதிய விதிமுறைகள்..!!

Published: 15 Jun 2021, 11:48 AM |
Updated: 15 Jun 2021, 12:37 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து விலக்கு பெற்றவர்கள் வழக்கமான விமானங்கள் மற்றும் சார்ட்டர் விமானங்களில் பயணிப்பதற்கு
மிகவும் கடுமையான பாதுகாப்பு நெறிமுறைகளின் புதிய பட்டியலை பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GCAA) வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

கூடுதலாக, தடை விதிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் உள்ளவர்களில் “சில்வர் விசா” வைத்திருப்பவர்கள் இப்போது அமீரகத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் GCAA வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்வர் விசா வைத்திருப்பவர்கள் அமீரகத்தில் ஐந்து வருடங்களுக்கான ரெசிடென்ஸ் பெர்மிட் பெற்றவர்கள் என கூறப்படுகிறது.

முன்னதாக, 10 ஆண்டுகள் செல்லுபடியாக கூடிய கோல்டன் விசா வைத்திருப்பவர்கள் மட்டுமே அமீரகத்திற்கு பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. அத்துடன் தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து அமீரகத்திற்கு பயணிக்க அரசுப்பிரதிநிதிகள் மற்றும் ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள் ஆகியோருக்கும் விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

விலக்கு பெற்ற பயணிகளுக்கான புதிய பாதுகாப்பு நெறிமுறைகளை GCAA பட்டியலிட்டுள்ளது. இந்த சுற்றறிக்கையில் பயணிகள் கட்டாயம் கண்காணிப்பு சாதனம் அணிய வேண்டும் போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ், காங்கோ ஜனநாயக குடியரசு, நேபாளம், நைஜீரியா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா, வியட்நாம் மற்றும் சாம்பியா ஆகிய நாடுகளிலிருந்து விமானங்களை இயக்கும் அனைத்து விமான ஆபரேட்டர்களுக்கும் இந்த கடுமையான விதிமுறைகள் பொருந்தும்.

ADVERTISEMENT

புதிய சுற்றறிக்கையின் படி, விலக்கு பெற்ற பயணிகள் குறைந்தது 10 நாட்களுக்கு கண்காணிப்பு சாதனங்களை அணிய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

“தற்போது நிலவி வரும் கொரோனா தொற்றுநோயின் பாதிப்பானது ஐக்கிய அரபு அமீரகம் புதிதாக, விமானம் மற்றும் பயணிகளுக்கு கட்டுப்பாடுகளை விதிக்க காரணமாக அமைத்துள்ளது. அத்துடன் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. தேவைப்பட்டால் கூடுதலான வழிமுறைகளையும் தெரிவிக்கும்” என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

GCAA சம்பந்தப்பட்ட அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த சுற்றறிக்கையை வழங்கியுள்ளதாக அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார்.

ராஸ் அல் கைமா, அபுதாபி மற்றும் ஷார்ஜா ஆகிய இடங்களுக்கு வரும் பயணிகளுக்கு கண்காணிப்பு சாதனங்கள் (wristband) வழங்கப்பட்டுள்ளதாக பயண முகவர்கள் மற்றும் சார்ட்டர் விமான ஆபரேட்டர்கள் தெரிவித்துள்ளனர். இதற்கு முன்னர் கடந்த ஆண்டு செப்டம்பர் முதல், அபுதாபி அரசு அபுதாபிக்கு வரும் பயணிகளை தங்கள் 14 நாள் வீட்டு தனிமைப்படுத்தலின் போது இதுபோன்ற சாதனங்களை அணியுமாறு கேட்டுக் கொண்டிருக்கிறது.

துபாய்க்கு வரும் பயணிகள் 10 நாள் கட்டாய தனிமைப்படுத்தலை கடைபிடிக்க வேண்டும் மற்றும் தொடர்ச்சியான PCR சோதனைகளுக்கு உட்படுத்த வேண்டும் என்று இணைய பயண நிறுவனமான musafir.com குழுவைச் சேர்ந்த ரஹீஷ் பாபு தெரிவித்துள்ளார். மேலும் ராஸ் அல் கைமா மற்றும் ஷார்ஜாவுக்கு வந்த பயணிகள் கண்காணிப்பு சாதனம் (wristband) அணியுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டனர் என்றும் அவர் கூறியுள்ளார்.

GCAA சுற்றறிக்கையில், கண்காணிப்பு சாதனம் அணிதல் மற்றும் கட்டாய 10-நாள் தனிமைப்படுத்தல் தவிர, பயணிகள் வந்தவுடன் PCR பரிசோதனையும் அதனைத் தொடர்ந்து தங்களது தனிமைப்படுத்தப்பட்ட காலத்தின் போது நான்காவது மற்றும் எட்டாவது நாளில் என இரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தடை விதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து செயல்படும் விமானக் குழு உறுப்பினர்களுக்கும் இந்த விதிமுறைகள் பொருந்தும். கூடுதலாக, பயணிகள் முழு போக்குவரத்துக் காலத்திலும் உடனடியாக ஒரு ஹோட்டலில் தனிமைப்படுத்தப்பட வேண்டும், மேலும் அவர்களின் இயக்கமானது அமீரக மக்களைத் தொடர்பு கொள்ளாமல் ஹோட்டல் மற்றும் விமான நிலையத்திற்கு இடையிலான போக்குவரத்துக்கு மட்டுமே இருக்க வேண்டும் என்றும் சுற்றறிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வருகைகளும் ஐக்கிய அரபு அமீரகத்தின் குடியேற்ற நிலைமைகளுக்கு உட்பட்டவை என்றும், திட்டமிடப்படாத மற்றும் சார்ட்டர் விமானங்களுக்கு தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையத்தின் (NCEMA) ஒப்புதல் பெறப்பட வேண்டும் என்றும் அந்த சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் விமானம் பயணிப்பதற்கு குறைந்தது 5 நாட்களுக்கு முன்னர் NCEMA க்கு அறிவிக்கப்பட வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.