இந்தியாவின் தேசிய விமான நிறுவனமான ஏர் இந்தியா துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 க்கு விமான சேவையை இயக்கும் என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து விமான நிறுவனம், “இந்தியாவில் இருந்து துபாய்க்கு வரும் மற்றும் துபாயில் இருந்து இந்தியா செல்லும் ஏர் இந்தியாவின் அனைத்து விமானங்களும் ஜூன் 24, 2021 (காலை 10 மணி முதல்), துபாய் சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல் 1 இலிருந்து புறப்படும்” என்று தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுநோயால் 15 மாதங்கள் மூடப்பட்ட பின்னர் ஜூன் 24 முதல் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் டெர்மினல் 1 ஐ மீண்டும் திறக்கப்போவதாக துபாய் விமான நிலையங்கள் தெரிவித்துள்ளன.
40 க்கும் மேற்பட்ட சர்வதேச விமான நிறுவனங்கள் இப்போது படிப்படியாக மீண்டும் டெர்மினல் 2 மற்றும் 3 இலிருந்து டெர்மினல் 1 க்கு மாற்றப்படும்.
விமான நிலையத்தின் டெர்மினல் 1 பகுதி, ஆண்டுக்கு 18 மில்லியன் பயணிகள் பயணிக்கும் திறன் கொண்டது. ஒரு முக்கிய சர்வதேச போக்குவரத்து மையமான விமான நிலையமானது ஆண்டுக்கு 100 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது குறிப்பிடத்தக்கது.