இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு விமான சேவையானது ஜூலை 6 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஏர் இந்தியா பயணிகளிடம் தெரிவித்துள்ளது.
“ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் அறிவித்த பயணக் கட்டுப்பாடுகளின் அடிப்படையில், இந்தியாவுக்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான விமானங்கள் ஜூலை 6 ஆம் தேதி, 2021 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் தகவல்களுக்கு எங்கள் ட்விட்டர் மற்றும் இணையதளத்தை கண்காணிக்கவும்” என்று இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம் பயணியின் ஒரு கேள்விக்கு பதிலளித்துள்ளது.
Dear Mr. Gursehaj, In view of travel restrictions announced by UAE government, flights between India and UAE are suspended till 06th Jul'21. Please keep a watch on our Twitter handle and website for further updates.
— Air India (@airindiain) June 23, 2021
அதே நேரம், விமான நிறுவனம் துபாய் ஏர்போர்ட்டில் தனது விமான சேவையை ஜூன் 24 முதல் டெர்மினல் 1 க்கு மாற்றம் செய்துள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவில் இருந்து துபாய் பயணிப்பதற்கு செல்லுபடியாகும் அமீரக ரெசிடென்ஸ் விசா வைத்திருப்பவர்கள் பயணிக்கலாம் உள்ளிட்ட புதிய பயண வழிமுறைகள் அறிவிக்கப்பட்டு அது ஜூன் 23 முதல் நடைமுறைக்கு வரும் என துபாயின் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு முன்னர் அறிவித்திருந்தது. அதனைத் தொடர்ந்து இந்தியாவில் இருந்து துபாய்க்கு விமான சேவையை ஜூன் 23 முதல் மீண்டும் இயக்குவதாக எமிரேட்ஸ் விமான நிறுவனமும் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.
இருப்பினும், துபாய்க்கு பயணிக்க GDRFA ஒப்புதல் வேண்டுமா? தடுப்பூசி போடாத குழந்தைகள், கர்ப்பிணி பெண்கள் எவ்வாறு பயணிப்பது? பயணத்திற்கு 4 மணி நேரத்திற்கு முன் எடுக்கப்பட வேண்டிய ரேபிட் PCR சோதனை வசதி இந்திய விமான நிலையங்களில் கிடைக்குமா? உள்ளிட்ட பல சந்தேகங்கள் பயணிகளிடையே நிலவியது.
மேலும், பயண முகவர்களும் இது குறித்த தெளிவு இல்லாத காரணத்தினாலும் விமான நிறுவனங்கள் முன்பதிவை தொடங்காததாலும் பயணிகளுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.