கொரோனா தொற்றுநோய்க்கு எதிராக ஓமான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வந்த தேசிய அளவிலான நோய் தடுப்பு பிரச்சாரத்தின் முதல் கட்டத்தை தொடர்ந்து தற்போது ஓமான் அரசு இரண்டாம் கட்ட நோய் தடுப்பு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது.
ஓமான் அரசால் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான தேசிய நோய்த்தடுப்பு பிரச்சாரத்தின் இந்த இரண்டாம் கட்டத்தில் தற்போது கர்ப்பிணி பெண்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக ஓமான் நாட்டின் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஓமான் நாட்டில் வசிக்கும் கர்ப்பிணி பெண்களின் பாதுகாப்பினை கவனத்தில் கொண்டு அரசால் இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், கர்ப்பம் தரித்து மூன்று மாதங்கள் நிறைவடைந்து நான்காவது மாதத்தை அடைந்த அனைத்து கர்ப்பிணிப் பெண்களும் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள தடுப்பூசி மையங்களை அணுகுமாறும் சுகாதார அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
மேலும் கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான இரண்டாம் கட்ட தேசிய நோய்த்தடுப்பு பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக ஓமானின் அனைத்து பகுதிகளிலும் கொரோனா வைரஸிற்கு எதிராக 45 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடுவதை சுகாதார அமைச்சகம் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அரசின் தற்போதைய நடவடிக்கையின் மூலமாக நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள தடுப்பூசி மையங்களில் தடுப்பூசி போட்டுக்கொள்பவர்களின் எண்ணிக்கை உயர்ந்து வருவதாகவும், மேலும் இது கொரோனாவிற்கு எதிரான நோய்த்தடுப்பு பற்றிய பெரும் சமூக விழிப்புணர்வை பிரதிபலிப்பதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.