இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் விமான சேவை மறு அறிவிப்பு வரும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளதால், அமீரகத்திற்கு பயணிக்கவிருக்கும் பயணிகள் அதிக காலம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்று பொது சிவில் விமான போக்குவரத்து ஆணையத்தின் (GCAA) அதிகாரி ஒருவர் தெளிவுபடுத்தியுள்ளார்.
சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை மனதில் வைத்து இந்த நிலை தொடர்ந்து நீடிக்கின்றது என அவர் கூறியுள்ளார்.
“இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் போக்குவரத்தைப் பொருத்தவரை, நிலைமை தொடர்ந்து நீடிக்கிறது. இந்தியாவில் நிலைமையை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம், உள்வரும் பயணிகள் மீதான இடைநீக்கத்தை எப்போது நீக்குவது என்பது குறித்து சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் பாதுகாப்பை மனதில் வைத்து ஒரு முடிவு எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சில நேரங்களில் ஜூலை 7 மற்றும் 8 ஆம் தேதிகளில் இருந்து இந்தியாவின் பல்வேறு நகரங்களில் இருந்து விமானங்களில் இருக்கைகளை விமான நிறுவனங்கள் தங்கள் வலைத்தளங்களில் கிடைக்கச் செய்துள்ளன. இந்த தேதிகள் பயணத்தடை முடிவைக் குறிக்கின்றன என்பது உறுதியில்லை.
சில ஊடக அறிக்கைகள் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத்தால் வெளியிடப்பட்ட ஏர்மேன்களுக்கான நோட்டீஸ் (Notam) ஐ மேற்கோள் காட்டி, இது ‘ஜூலை 21 அன்று பயணக் கட்டுப்பாடுகளின் காலம் முடிவடைவதைக் குறிக்கிறது’ என்று தெரிவிக்கின்றன.
எவ்வாறாயினும், சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் ஒரு நோட்டம் அறிக்கை வெளியிடப்படுவதாக விமான வட்டாரங்களும் GCAA வட்டாரங்களும் தெரிவித்துள்ளன.
“விமான போக்குவரத்துக்கு வழக்கப்படி, நோட்டம்களுக்கு (Notam) ஒரு குறிப்பிட்ட விதிமுறைகள் பொருந்தும் காலத்திற்கான தொடக்க தேதி மற்றும் இறுதி தேதி இருக்க வேண்டும்” என்று விமான நிறுவன வட்டாரங்கள் விளக்கியுள்ளது. மேலும் “அவை எந்த நேரத்திலும் மாற்றப்படலாம்,” என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு உள்வரும் பயணிகளை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதை தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA) மற்றும் GCAA ஏப்ரல் 24 அன்று 10 நாட்களுக்கு நீட்டிக்க அறிவித்தது. இதைத் தொடர்ந்து, மே 5 ம் தேதி இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு வர விதிக்கப்பட்ட தடை மறு அறிவிப்பு வரும் வரையிலும் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டு தற்பொழுது வரை நடைமுறையில் உள்ளது.
அத்துடன் ஜூன் 19 அன்று, துபாய் நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை குழு இந்தியாவில் இருந்து துபாய் வருவதற்கான புதிய நெறிமுறைகளை அறிவித்தது.
இதற்கிடையில், இந்தியாவுடன் பயண தொடர்புகளை முறித்துக் கொண்ட நாடுகளை மீண்டும் விமான சேவைகளைத் தொடங்குமாறு இந்தியா வலியுறுத்தியுள்ளதாக வெளிவிவகார அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி தெரிவித்துள்ளார்.
பயணத்தடை விதித்துள்ள நாடுகளுடன் ஆரம்பகட்ட பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதோடு, இந்த நடவடிக்கைக்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.