இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உள்வரும் பயணிகள் விமானங்களுக்கான தடையானது குறைந்தபட்சம் ஜூலை 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று துபாயை தளமாகக் கொண்டு இயங்கும் விமான நிறுவனம் எமிரேட்ஸ் தனது இணையதளத்தில் தெரிவித்துள்ளது.
“ஐக்கிய அரபு அமீரக அரசாங்க உத்தரவுகளுக்கு இணங்க, எமிரேட்ஸ் நிறுவனம் இந்தியா, பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் இலங்கையிலிருந்து துபாய் செல்லும் பயணிகள் விமான சேவையை ஜூலை 21 வரை நிறுத்தி வைக்கும். மேலும், இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், பங்களாதேஷ் வழியாக கடந்த 14 நாட்களில் டிரான்ஸிட்டில் பயணித்த பயணிகளுக்கும் வேறு எந்த இடத்திலிருந்தும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பயணிக்க ஏற்றுக்கொள்ளப்படாது ”என்று விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரக குடிமக்கள், கோல்டன் விசாக்கள் வைத்திருப்பவர்கள் மற்றும் அரசுப்பிரதிநிதிகளுக்கு இதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது என விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
கொரோனாவின் இரண்டாவது அலை பரவலினால் ஐக்கிய அரபு அமீரகம் ஏப்ரல் 24 முதல் இந்தியாவில் இருந்து விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. அதேபோல், மே 13 முதல், இலங்கையில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் பயணிகள் விமான சேவையும் இடைநிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.