ADVERTISEMENT

UAE: கடும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் ஈத் சிறப்பு தொழுகை நடத்த மசூதிகளுக்கு அனுமதி..!!

Published: 14 Jul 2021, 3:21 AM |
Updated: 14 Jul 2021, 3:22 AM |
Posted By: admin

அமீரகத்தில் வரவிருக்கும் ஈத் அல் அத்ஹாவிற்கு மசூதிகள் மற்றும் திறந்தவெளி இடங்களில் (முசல்லாக்கள்) சிறப்பு தொழுகையினை நடத்த ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகள் அனுமதி அளித்துள்ளனர்.

ADVERTISEMENT

இந்த சிறப்பு தொழுகையில் பிரசங்கம் உட்பட பிரார்த்தனையின் மொத்த காலம் 15 நிமிடங்களாக வரையறுக்கப்பட்டுள்ளது என்று அமீரகத்தின் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரழிவுகள் மேலாண்மை ஆணையம் (NCEMA) செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

மசூதிகளில் தற்போது நடைமுறையில் உள்ள கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை வழிபாட்டாளர்கள் கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் எனவும் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

  • தொழுகைக்கு 15 நிமிடங்களுக்கு முன்பு மசூதிகள் மற்றும் முஸல்லாக்கள் திறக்கப்பட்டு தொழுகை முடிந்தவுடன் உடனடியாக மூடப்படும்.
  • தொழுகைக்குப் பிறகு ஒருவருக்கொருவர் கைகுலுக்குதல் போன்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.
  • வழிபாட்டாளர்கள் வழிபாட்டுத் தலங்களில் தொழுகைக்கு முன்பாகவோ அல்லது அதற்கு பின்னரோ கூடுவதற்கு அனுமதி இல்லை.
  • சமூக இடைவெளியைக் குறிக்க ஒட்டப்படும் ஸ்டிக்கர்கள் மசூதிகள், அதன் வெளிப்புற பகுதிகள் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் ஒட்டப்படும்.
  • 12 வயதிற்குட்பட்டவர்கள் மற்றும் 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் வீட்டிலேயே தொழுது கொள்ள  அறிவுறுத்தப்படுகிறார்கள்.
  • கொரோனா பாதித்த நபர்கள் மற்றும் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பவர்கள் தொழுகையில் கலந்து கொள்ள கண்டிப்பாக தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதிப்பின் காரணமாக கடந்த வருடம் ஈத் சிறப்பு தொழுகைகளை குடியிருப்பாளர்கள் அனைவரும் வீட்டிலேயே தொழுது கொள்ள அறிவுறுத்தப்பட்டது. அதன் பின்னர் இந்த வருட ஈத் அல் பித்ர் தொழுகையை கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் மசூதிகளில் நடத்த அரசு அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்களுக்கு ஜூலை 19 முதல் ஜூலை 22 வரை இந்த வருட ஈத் அல் அத்ஹாவை முன்னிட்டு நான்கு நாட்கள் ஊதிய விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து வெள்ளி, சனிக்கிழமை வார இறுதி நாட்கள் வருவதால், குடியிருப்பாளர்கள் ஆறு நாட்கள் ஈத் விடுமுறையைப் பெறுவார்கள்.

ADVERTISEMENT