இன்றைய நவீன காலகட்டத்தில் உலகளாவிய அளவில் அனைத்துத் துறைகளிலும் சிறந்து விளங்கி உலக நாடுகள் அனைத்தும் திரும்பிப் பார்க்கக்கூடிய ஒரு முக்கிய நாடாக இருக்கின்றது ஐக்கிய அரபு அமீரகம். கல்வி, பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மருத்துவம் என அனைத்திலும் நவீனங்களைப் புகுத்தி அனைத்து மக்களையும் வியப்பில் ஆழ்த்துகிறது அமீரகம்.
இத்தனைக்கும் சில வருடங்கள் பின்னோக்கி சென்றால் இந்தளவு வளர்ச்சியை அமீரகம் பெற்றிருக்கவில்லை. ஏன்.. இந்தியாவில் சாலை, மின்சாரம் என வசதிகள் இருந்தபோது கூட அமீரகத்தில் ஒழுங்கான தார்ச்சாலை, மின்சார வசதி போன்றவை இல்லை.
இப்படியான சூழ்நிலையில் இருந்த அமீரகம் தற்பொழுது அனைவரும் வியந்து பார்க்கும் உயரத்தில் இருப்பதற்கு காரணம் அமீரகத்தின் செயல்மிக்க மற்றும் தொலைநோக்கு சிந்தனை கொண்ட தலைவர்கள் தான். ஒரு நாட்டின் வளர்ச்சியானது அந்த நாட்டை ஆளும் ஆட்சியாளர்களிடமே உள்ளது என்பது நாம் அறிந்ததே. அந்த வகையில் அமீரகத்தின் வளர்ச்சிக்கு இத்தகைய தலைவர்கள் ஆற்றிய பங்கு மிகவும் முக்கியமானதாகும்.
அதிலும் குறிப்பாக துபாயின் தற்போதைய ஆட்சியாளரான மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் பல்வேறு திட்டங்களை திறம்பட செயலாற்றியதன் காரணமாக உலகின் நகரங்களிலேயே தனியொரு இடத்தை திறம்பட பிடித்துள்ளது துபாய்.
துபாயின் இத்தகைய பெருமைமிக்க வளர்ச்சிக்கு வித்திட்ட மாண்புமிகு ஷேக் முகம்மது அவர்கள் தனது 72 வது பிறந்த நாளை இன்று வியாழக்கிழமை (ஜூலை 15) கொண்டாடும் வேளையில் அவரை பற்றி தெரிந்திராத சில சுவாரசிய தகவல்களை நாம் உங்களுக்காக இங்கே தொகுத்து வழங்கியுள்ளோம்.
பிறப்பு
ஜூலை 15, 1949 இல், அல் ஷிண்டாகாவில் உள்ள அல் மக்தூம் இல்லத்தில் பிறந்த ஷேக் முகமது மறைந்த ஷேக் ரஷீத் பின் சயீத் அல் மக்தூமின் நான்கு மகன்களில் மூன்றாவது மகன் ஆவார்.
ஷேக் முகமதுவின் மற்ற சகோதரர்கள் ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம், ஷேக் ஹம்தான் பின் ரஷீத் அல் மக்தூம் மற்றும் ஷேக் அகமது பின் ரஷீத் அல் மக்தூம் ஆகும்.
அபுதாபியின் முன்னாள் ஆட்சியாளரான ஷேக் ஹம்தான் பின் சயீத் பின் கலீஃபா அல் நஹ்யானின் மகள் ஷேக்கா லத்திபா பின்த் ஹம்தான் அல் நஹ்யான் அவர்களே இவரின் தாயாராகும்.
படிப்பு
ஷேக் முகமது அவர்கள் அரபு மற்றும் இஸ்லாமிய படிப்புகளில் தனிப்பட்ட முறையில் வீட்டிலேயே பயிற்றுவிக்கப்பட்டார் மற்றும் 1955 ஆம் ஆண்டில் தேராவின் அல் அஹ்மதியா பள்ளியில் தனது முறையான பள்ளி கல்வியைத் தொடங்கினார்.
பத்து ஆண்டுகளுக்குப் பிறகு, ஷேக் முகமது கேம்பிரிட்ஜில் உள்ள பெல் ஸ்கூல் ஆஃப் லாங்குவேஜஸில் சேர்ந்தார். பின்னர் மோன்ஸ் ஆபீசர் கேடட் ஸ்கூல் ஆல்டர்ஷாட்டில் (இப்போது ராயல் மிலிட்டரி அகாடமி சாண்ட்ஹர்ஸ்ட் என்று அழைக்கப்படுகிறது) பயின்றார்.
தலைமை
1968 ஆம் ஆண்டில், ஷேக் முகமது துபாய் திரும்பியதன் பின்னர், துபாய் காவல்துறை மற்றும் பொது பாதுகாப்புத் தலைவராக நியமிக்கப்பட்டார். பின்னர், அவர் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டு, உலகின் இளைய பாதுகாப்பு அமைச்சராக பதவியேற்றார்.
அதன் பின்னர் 1995-ம் ஆண்டு, ஷேக் முகமது துபாயின் மகுட இளவரசராக ஜனவரி 3, 1995 அன்று துபாயின் அப்போதைய ஆட்சியாளரான ஷேக் மக்தூம் பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் அறிவிக்கப்பட்டார். ஜனவரி 4, 2006 அன்று, ஷேக் முகமது தனது சகோதரர் ஷேக் மக்தூமின் மரணத்தைத் தொடர்ந்து துபாயின் ஆட்சியாளராகப் பொறுப்பேற்றார்.
அது மட்டுமல்லாமல் ஜனவரி 5, 2006 அன்று, ஐக்கிய அரபு அமீரக உச்ச கவுன்சிலால் நாட்டின் துணைத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பிப்ரவரி 11 அன்று, ஜனாதிபதி மாண்புமிகு ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் ஷேக் முகமதுவை ஐக்கிய அரபு அமீரக பிரதமராக நியமித்தார்.
திட்டங்கள்
ஷேக் முகமதுவின் தலைமையின் கீழ், ஒரு சிறிய நகரமாக இருந்த துபாய் இன்று உலகின் சிறந்த வர்த்தகம், நிதி, சுற்றுலா, விருந்தோம்பல் மற்றும் விமான மையங்களில் ஒன்றாக வளர்ச்சி அடைந்துள்ளது. துபாயின் அதிநவீன உள்கட்டமைப்பு உலகின் மற்ற நாடுகளின் சிறந்த உள்கட்டமைப்பிற்கு கடும் சவாலாக இருக்கிறது.
அதற்கு எடுத்துக்காட்டாக அனைவரது மனதிலும் முதலில் நினைவுக்கு வருவது துபாயின் புர்ஜ் அல் அரப் மற்றும் உலகின் மிக உயர்ந்த கட்டிடமான புர்ஜ் கலீஃபா ஆகும்.
அவரது தலைமையின் கீழ், பல்வேறு புதிய விசாக்கள், குடியுரிமை, ஃப்ரீஹோல்ட் சொத்துக்கள் மற்றும் 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு சட்டம் போன்ற பல சீர்திருத்தங்கள் தொடங்கப்பட்டன. வெளிநாட்டவர்கள் வாழவும் வேலை செய்யவும் மிகவும் கவர்ச்சிகரமான நாடுகளில் ஐக்கிய அரபு அமீரகத்தை கொண்டு வந்து நிறுத்தியதற்கு அவரின் கடும் உழைப்பு பெரும் பங்காற்றியிருப்பதை யாராலும் மறுக்க முடியாது.
விண்வெளித்துறையில் ஐக்கிய அரபு அமீரகம் சிறந்து விளங்குவதை உறுதி செய்வதற்காக, முகமது பின் ரஷீத் விண்வெளி மையம் நிறுவப்பட்டது. இதன் விளைவாக, பிப்ரவரி 2021 இல் செவ்வாய் கிரகத்தை அடைந்த முதல் அரபு நாடாக ஐக்கிய அரபு அமீரகம் உருவெடுத்துள்ளது.
பொருளாதாரம், விஞ்ஞானம் அல்லது தலைமை எதுவாக இருந்தாலும், துபாய் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் இதுவரை சிறந்து விளங்கிய ஒவ்வொரு துறையிலும் ஷேக் முகமது அவர்களின் தடம் பதிந்துள்ளது. மேலும் தனது நாட்டு மக்களின் மீதான அன்பையும், தனது செயல்பாடுகளையும் வளர்ச்சித்திட்டங்களையும் அவர் அவ்வப்போது சமூக ஊடகங்கள் வழியாகவும் மக்களுடன் பகிர்ந்து கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
தனது 53 ஆண்டு கால உழைப்பில், துபாயை மட்டும் இல்லாமல் உலகளாவிய அளவில் ஐக்கிய அரபு அமீரகத்தின் மதிப்பையும் சேர்த்து உயர்த்திய பெருமைக்குரிய துபாய் ஆட்சியாளர் மாண்புமிகு ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களின் 72 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரை வாழ்த்துவதில் பெருமிதம் கொள்கிறது கலீஜ் தமிழ்.





