ADVERTISEMENT

அடுத்தடுத்து நீட்டிக்கப்படும் விமான பயண தடை.. தீர்வு காண நடவடிக்கையை தொடங்கிய இந்தியா..!!

Published: 17 Jul 2021, 1:35 PM |
Updated: 17 Jul 2021, 1:35 PM |
Posted By: admin

இந்தியாவிற்கும் வளைகுடா நாடுகள் மற்றும் பிற அரபு நாடுகளுக்கும் இடையேயான விமானப் பயணத்தடையை நீக்குவது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் வி.முரளீதரன், வளைகுடா நாடுகளில் உள்ள இந்திய தூதர்களுடன் ஒரு சந்திப்பை நடத்தியுள்ளதாகவும் அதில் பயணத்தடையை நீக்குவது தொடர்பாக பேச்சுவார்த்தைகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.

ADVERTISEMENT

“இந்த சந்திப்பில் குறிப்பிட்ட நாடுகளுக்கான இந்திய தூதர்கள் இந்தியாவுடன் விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து நடவடிக்கை மேற்கொள்ள கேட்டுக் கொள்ளப்பட்டனர்” என்று வெளியுறவுத்துறை அமைச்சின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாகி ஒரு மாநாட்டில் தெரிவித்துள்ளார்.

“இந்தியாவில் கொரோனா பாதிப்பு குறைந்துள்ளதால், பயணத்தடை விதித்த நாடுகள் இந்தியாவில் இருந்து பயணம் செய்வதற்கான கட்டுப்பாடுகளை நீக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இத்தாலியில் சமீபத்தில் முடிவடைந்த G -20 அமைச்சகர் கூட்டத்தின் போது இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் தனது சவுதி பிரதிநிதியுடன் இருதரப்பு சந்திப்பின் போது இந்தியாவுடனான பயணத்தடை நீக்குவது தொடர்பான விஷயத்தை குறிப்பாக எழுப்பியுள்ளார் என்று பாகி கூறியுள்ளார்.

மேலும், வெளியுறவு செயலாளர் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்க்லா, பயணத்தடை காரணமாக சிக்கித்தவிக்கும் மாணவர்கள் மற்றும் தொழில் வல்லுநர்கள் ஆகியோரின் பயணத்தை இயல்பாக்குதல் மற்றும் பயணத்தடையால் பிரிந்துள்ள குடும்பங்களை ஒன்றிணைத்தல் போன்ற பிரச்சினைகள் குறித்து தெரிவித்து பயணத்தடையை நீக்கக் கேட்டுக்கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அத்துடன் “உலகெங்கிலும் உள்ள பல்வேறு நாடுகளுக்கு திரும்பிச் செல்ல வேண்டிய இந்தியர்களுக்கு உதவ நாங்கள் தீவிரமாக முயற்சிக்கிறோம்” எனவும் கூறியுள்ளார்.

தொற்றுநோயின் இரண்டாவது அலைகளால் இந்தியா பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து இரண்டாவது முறையாக பயணத்தடை குறித்த பிரச்சனையை நீக்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

”இது தொடர்பாக சில ஆரம்ப கட்ட நடவடிக்கைகளை நாங்கள் கண்டிருக்கிறோம்,” என்று அவர் முந்தைய மாநாட்டில் கூறினார். மேலும் இந்த பிரச்சினைக்கு அரசாங்கம் தொடர்ந்து முன்னுரிமை அளிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மீண்டும் விமானப் போக்குவரத்தைத் துவங்குவது பல்லாயிரக்கணக்கான நபர்களுக்கு பேருதவியாக இருக்கும் என்பது மிகையல்ல. அதே நேரத்தில் பயணத்தடையை  நீக்குவது குறித்து அந்தந்த நாட்டு அரசே இறுதி முடிவு வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.