ADVERTISEMENT

UAE: பயண தடையால் சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்களை குறி வைக்கும் மோசடி கும்பல்கள்..!! உஷார்..!!

Published: 2 Aug 2021, 5:21 PM |
Updated: 2 Aug 2021, 5:31 PM |
Posted By: admin

இந்தியா, இலங்கை உள்ளிட்ட அமீரகத்திற்கு வர பயணத்தடை விதிக்கப்பட்ட நாடுகளில் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக குடியிருப்பாளர்கள் சில மோசடி கும்பல்களால் குறிவைக்கப்பட்டு, அமீரகத்திற்கு திருப்பி அனுப்புவதாக உறுதியளித்து பின்னர் அவர்களை ஏமாற்றும் செயல் தற்போது தொடர்கதையாகி வருவது அமீரக குடியிருப்பாளர்களுக்கு புதிய பிரச்சனையை ஏற்படுத்தியுள்ளது.

ADVERTISEMENT

சில நாட்களுக்கு முன்பு இந்தியாவில் சிக்கித் தவிக்கும் அமீரக குடியிருப்பாளர்கள் நாடு திரும்ப இந்தியாவிற்கான அமீரக தூதரகம் அனுமதி சான்று வழங்குவதாக போலியாக உருவாக்கப்பட்ட அமீரக தூதரக வலைத்தளத்தை பயன்படுத்தி ஒரு போலி பயண அனுமதியை கட்டணமாக வழங்கியது, நோய்த்தொற்றால் பாதிக்கப்படாதவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று தவறான நேர்மறை கோவிட் -19 முடிவுகள் வந்தது, மேலும் விரைவாக பணம் சம்பாதிக்க ஒரு ஹோட்டல் அறையில் எட்டு பேருக்கு மேல் தங்கலாம் என்ற போலி அறிவிப்பை வெளியிட்டது போன்ற பலவிதமான மோசடிகளிலிருந்தும் குடியிருப்பாளர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று அதிகாரிகளும் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை மற்றும் நேபாளம் ஆகிய நாடுகளிலிருந்து நேரடியாக ஐக்கிய அரபு அமீரகம் வருவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தாலும், இந்த நாட்டிலிருந்து வரும் அமீரக குடியிருப்பாளர்கள் பயண தடை விதிக்கப்படாத வேறொரு நாட்டில் 14 நாட்கள் தங்கி பின்பு அங்கிருந்து கொரோனா எதிர்மறை சான்றுடன் அமீரகம் வர அனுமதி உண்டு. இதனை பயன்படுத்தி சில மோடி கும்பல்கள் சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்களை மோசடி வலையில் சிக்க வைத்து பணம் பறிக்கும் செயலில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இந்த மோசடி செயல்கள் பற்றி ஒரு பயண முகவர் கூறுகையில், மாலத்தீவு வழியாக பயணம் செய்த பயணிகளுக்கு சில மோசடி கும்பல்களால் ஏற்பட்ட பாதிப்புகளை கேட்டதும் மாலத்தீவு போன்ற பசுமைப்பட்டியல் நாடுகளின் வழியாக இந்தியாவில் சிக்கித் தவிக்கும் ஐக்கிய அரபு அமீரக பயணிகளுக்கான முன்பதிவுகளை ஏற்றுக்கொள்வதை நான் நிறுத்திவிட்டேன் என்று தெரிவித்துள்ளார்.

அவர் இந்த சம்பவம் குறித்து விவரிக்கையில், “நான் சமீபத்தில் இரண்டு அமீரகத்தை வசிப்பிடமாக கொண்ட தலா நான்கு பேர் அடங்கிய இரு இந்திய குடும்பங்களுக்கு மாலி வழியாக துபாய்க்கு பயண ஏற்பாடுகளைச் செய்திருந்தேன். மும்பை மற்றும் டெல்லியிலிருந்து வந்த அந்த பயணிகள் மாலி வந்திறங்கி சில நாட்களுக்குப் பிறகு பிரச்சனை தொடங்கியது. துபாய்க்கு திரும்பிச் செல்ல கட்டாய 14 நாள் தனிமைப்படுத்தப்பட்ட காலத்திற்குப் பிறகு அவர்கள் பிசிஆர் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டனர். இரு குடும்ப உறுப்பினர்களில் தலா ஒருவருக்கு கோவிட் -19 பாசிட்டிவ் என்று ‘அறிக்கை’ செய்யப்பட்டது என்று கூறியுள்ளார்.

ADVERTISEMENT

மேலும் கூறுகையில், நோய்க்கான அறிகுறிகள் ஏதும் இல்லாத அப்பயணிகளுக்கு இது சந்தேகத்தை எழுப்பியது. பின்னர், அவர்கள் உண்மையை வெளிக்கொணர முடிவுசெய்து, மாலி பகுதியில் உள்ள மற்றொரு சுகாதார நிலையத்திலிருந்து தாங்களாகவே கொரோனா சோதனைகளை மேற்கொண்டனர், அங்கு அவர்கள் எதிர்பார்த்தபடி கொரோனா இல்லை என்று எதிர்மறையான முடிவுகளைப் பெற்றனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதே போன்று கத்தார் வழியாக அமீரகம் செல்லலாம் என்பதையும் தங்களுக்கு சாதகமாக மாற்றி இந்தியாவிலிருந்து சிக்கி தவிக்கும் குடியிருப்பாளர்களை கத்தார் நாட்டிற்கு அழைத்து சென்று அங்கு ஒரு அறையில் எட்டு நபர்களை சில பயண முகவர்கள் தங்கவைப்பதாகவும், இது கொரோனா பரவ மேலும் வழிவகுக்கும் என்றும் தோஹா வழியாக பயணித்த ஒரு பயணி கூறியதாகவும் அந்த பயண முகவர் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பிற நாடுகளிலிருந்து அமீரகம் வர பயண தடை அமலில் இருப்பதை தங்களுக்கு சாதகமாக்கி கொள்ள சில மோசடி கும்பல்கள் பரப்பும் பொய்யான தகவல்களை நம்பி பெரும் பணத்தை கட்டணமாக செலுத்தி யாரும் ஏமாற வேண்டாம் என்றும் அதிகாரிகள் தொடர்ந்து வலியுறுத்தியும் வருகின்றனர். எனினும், சூழ்நிலை காரணமாக உடனடியாக அமீரகம் செல்ல முனைப்பு காட்டும் சில குடியிருப்பாளர்கள் இவர்களின் வலையில் சிக்கி இது போன்ற இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.