கொரோனா பாதிப்பிற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஓமானில் விதிக்கப்பட்டிருக்கும் பயணத்தடையானது விரைவில் நீக்கப்படும் என்று குடியிருப்பாளர்கள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
முஹம்மது ஆரிஃப் எனும் ஒரு விமான நிறுவன அதிகாரி கூறுகையில், மக்கள் பலர் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொண்ட நிலையில், ஓமான் அதிகாரிகள் நிலைமையை மறுபரிசீலனை செய்து தடை செய்யப்பட்ட நாடுகளில் இருந்து பயணிக்கும் குடியிருப்பாளர்களை ஓமானுக்குள் நுழைய அனுமதிப்பார்கள் என்று நம்புவதாக கூறுகின்றார்.
மேலும் தடை நீக்கப்பட்டாலும், PCR சோதனைகள் மற்றும் தடுப்பூசி சான்றிதழ் போன்றவை ஓமான் நுழைவதற்கான நிபந்தனையாக இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
பயணத்தடை நீக்கப்பட்ட போதிலும் கட்டாயநிறுவனத் தனிமைப்படுத்தல் பயணிகளுக்கு நிதிச்சுமையை ஏற்படுத்துவதால் தடுப்பூசி போடப்பட்டவர்கள் வீட்டு தனிமைப்படுத்தலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டால் நன்றாக இருக்கும் என்று பயணிகள் எதிர்பார்க்கின்றனர்.
தொற்றுநோய் பயண மற்றும் விமானத் தொழில்களை மிகவும் கடுமையாகப் பாதித்திருப்பதால், பயணத்தடை நீக்கப்பட்ட பின்னர் வரும் நாட்களில் நிலைமை மேம்படும் என்று கூறப்படுகிறது.
ஏர்லைன்ஸ் மற்றும் ஏவியேஷன் துறை நிபுணர் சலாம் அல் கிண்டி கூறுகையில், இந்தியாவில் நடைமுறையில் இருக்கும் தடுப்பூசி திட்டம் மற்றும் குறைந்து வரும் தொற்றுகளின் காரணமாக, இந்தியாவிலிருந்து ஓமான் திரும்புவதற்கான இயல்பான விமான சேவைகள் மிக விரைவில் மீண்டும் தொடங்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
மேலும் “கடுமையான நடவடிக்கைகள் நோய்த்தொற்று பரவலை ஒழிப்பதில் ஓமான் அரசின் கடுமையான நிலைப்பாட்டைக் காட்டுகிறது. நிறுவன தனிமைப்படுத்தல் இன்னும் நடைமுறையில் இருப்பதால், தற்போது தடைசெய்யப்பட்ட பட்டியலில் உள்ள நாடுகளுடன் இயல்பான விமான செயல்பாடுகள் மீண்டும் தொடங்க வேண்டிய நேரம் வந்துவிட்டது. அடுத்த மாதத்திற்குள் ஓமான் மற்றும் இந்தியா நாடுகளுக்கு இடையே விமான சேவைகள் மீண்டும் தொடங்கும் என்று நான் எதிர்பார்க்கிறேன்” எனவும் கூறியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல், ஆள் பற்றாக்குறையால் சில வேலை திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதால், பல தனியார் வணிக நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்தின் செல்லுபடியாகும் விசா வைத்திருக்கும் வெளிநாடுகளில் உள்ள தொழிலாளர்களை ஓமான் திரும்ப அனுமதிக்குமாறு அதிகாரிகளை வலியுறுத்தி வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.