துபாய், ஷார்ஜா போன்ற பிற எமிரேட்டிலிருந்து வரும் குடிமக்கள், குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாவாசிகள் அபுதாபிக்குள் நுழைவதற்கான நடைமுறையை மேம்படுத்தி புதிய அறிவிப்பு ஒன்றை அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு இன்று வியாழக்கிழமை மாலையில் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த புதுப்பிக்கப்பட்ட விதிகள் நாளை ஆகஸ்ட் 20 முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அது தெரிவித்துள்ளது.
அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட அமீரக குடிமக்கள், அமீரக குடியிருப்பாளர்கள் மற்றும் வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலாவாசிகளுக்கு அபுதாபிக்குள் நுழைய விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுப்பிக்கப்பட்ட நடைமுறைகளின்படி, தடுப்பூசிக்கான மருத்துவ பரிசோதனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் மற்றும் செயல்பாட்டிற்கு வந்த பின்பு தடுப்பூசி போடப்பட்டவர்கள் தங்களின் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸ் மற்றும் ‘E’ அல்லது ‘ஸ்டார்’ ஐகான் இருந்தால் அவர்கள் அபுதாபியில் நுழையலாம் என்றும், இதற்காக ஒரு முறை மட்டும் PCR சோதனை தேவை என்றும் கூறப்பட்டுள்ளது. இந்த ‘E’ மற்றும் ஸ்டார் ஐகான் ஏழு நாட்கள் மட்டுமே செயலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அவர்கள் அபுதாபியில் நுழைந்த பிறகு தொடர்ந்து அபுதாபியில் தங்கியிருந்தால் மேற்கொண்டு PCR சோதனை எதுவும் மேற்கொள்ள தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வெளிநாட்டிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளும் அபுதாபிக்குள் நுழைவதற்கு இதே பயண நெறிமுறையைப் பின்பற்ற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இருப்பினும், தடுப்பூசி போட்டுக்கொள்ளாத குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கு தற்போதைய சோதனை நடைமுறைகள் தொடர்ந்து அமலில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அமலில் இருக்கும் நுழைவு விதிகளின் படி, தடுப்பூசி போடப்படாதவர்கள் அபுதாபிக்குள் நுழைய 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனை அல்லது 24 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட DPI சோதனை தேவை என்பதும், அத்துடன் அவர்கள் அபுதாபியில் தொடர்ந்து தங்கினால் அவர்களுக்கு கூடுதல் PCR சோதனைகள் தேவை என்பதும் குறிப்பிடத்தக்கது.