ADVERTISEMENT

UAE: செப்டம்பர் 5 முதல் ஊழியர்கள் அலுவலகங்களில் நுழைய கிரீன் பாஸ் கட்டாயம்..!! தவறினால் மாத சம்பளத்தில் பிடித்தம்..!!

Published: 26 Aug 2021, 3:34 PM |
Updated: 26 Aug 2021, 3:40 PM |
Posted By: admin

அபுதாபியில் உள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் தங்களின் பணியிடங்களில் 100% பணியாளர்கள் திறனில் இயங்கலாம் என்று அபுதாபி அரசு அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா தொற்றுநோய் வைரஸ் பரவ ஆரம்பித்ததை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் குறிப்பிட்ட திறனில் மட்டுமே அலுவலங்களில் ஊழியர்கள் பணிபுரிய வேண்டும் என்று அபுதாபி பேரிடர் மேலாண்மை குழுவால் அறிவிக்கப்பட்டு தற்பொழுது வரையிலும் நடைமுறையில் இருந்து வரும் நிலையில், அடுத்த வாரம் முதல் 100% சதவீத பணியாளர்கள் திறனில் அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்கள் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையானது அமலுக்கு வந்தது முதல் தடுப்பூசி போடப்பட்ட அனைத்து ஊழியர்களும், தடுப்பூசியிலிருந்து விலக்கு பெற்றவர்களும் தங்களின் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் ஸ்டேடஸைக் காண்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தடுப்பூசி போடப்படாத ஊழியர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒருமுறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் அனைத்து ஊழியர்களும் அமீரக அரசு அறிவித்திருக்கும் கொரோனாவிற்கான சோதனைத் தேவைகளைப் பின்பற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் கீழ், மேற்கூறிய சோதனைகளுக்கு இணங்கத் தவறும் ஊழியர்கள் வேலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்றும், அவர்கள் அனுமதிக்கப்படாத நாட்களுக்கான ஊதியம் அவர்களின் வருடாந்திர விடுப்பு அல்லது மாத ஊதியத்திலிருந்து கழிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

அதே போல் அரசு நிறுவனங்களுக்கு வரும் தடுப்பூசி போடப்பட்ட பார்வையாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாஸைக் காட்ட வேண்டும் என்பதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாதவர்கள் அரசு அலுவலகங்களுக்குள் நுழைய 48 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை காட்ட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் மருத்துவ அங்கீகாரம் மற்றும் கல்வி நிறுவனத்தின் அறிக்கையின் அடிப்படையில் பள்ளிக்கு செல்வதில் விலக்கு அளிக்கப்பட்ட 10 ஆம் வகுப்பு மற்றும் அதற்கு கீழ் உள்ள வகுப்புகளில் படிக்கும் ஒரு குழந்தையின் பெற்றோருக்கு தொலைதூர முறையில் அதாவது வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி அறிவித்துள்ள கிரீன் பாஸ் என்பது, PCR சோதனை மேற்கொள்ளும் ஒரு நபர் சோதனை முடிவில் கொரோனாவிற்கு எதிர்மறையான முடிவை பெற்றால் அந்த நபரின் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் நிற நிலையை அடைவதாகும். கொரோனா சோதனை மேற்கொள்ளும் நபர் முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவராக இருந்தால் அவருக்கு கிரீன் பாஸ் நிலையானது ஒரு மாத காலத்திற்கு செயலில் இருக்கும்.

அபுதாபியில் செயல்படுத்தப்பட்டுள்ள இந்த கிரீன் பாஸ் அமைப்பு, அபுதாபியில் உள்ள பொது இடங்களில் தடுப்பூசி போடப்பட்ட குடியிருப்பாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளை மட்டும் அனுமதிப்பதன் மூலம் கொரோனா பரவலை கட்டுப்படுத்துகிறது.

கடந்த ஆகஸ்ட் 20 ம் தேதி முதல் அபுதாபியில் உள்ள ஷாப்பிங் மால்கள், உணவகங்கள், கஃபேக்கள், சில்லறை விற்பனை நிலையங்கள், ஜிம்கள், பொழுதுபோக்கு வசதிகள் மற்றும் விளையாட்டு நடவடிக்கைகள், சுகாதார கிளப்புகள், ரிசார்ட்ஸ் மற்றும் கல்வி நிறுவனங்களுக்குள் நுழைய கிரீன் பாஸ் உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.