ADVERTISEMENT

UAE: அனைத்து நாட்டவர்களுக்கான சுற்றுலா விசா சேவையை மீண்டும் தொடங்கிய அமீரகம்..!!

Published: 29 Aug 2021, 4:51 AM |
Updated: 29 Aug 2021, 5:04 AM |
Posted By: admin

கொரோனாவால் விதிக்கப்பட்டிருந்த பயணத்தடையின் காரணமாக வெளிநாடுகளிலிருந்து பயணிகள் சுற்றுலா அல்லது விசிட் விசாவில் அமீரகத்திற்கு வர தடை செய்யப்பட்டிருந்த நிலையில், நாளை ஆகஸ்ட் 30, 2021 முதல் அனைத்து நாடுகளிலிருந்தும் முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட மக்களுக்கு சுற்றுலா விசா வழங்குவதை மீண்டும் தொடங்குவதாக ஐக்கிய அரபு அமீரக அரசின் செய்தித்தளமான WAM அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் அடையாளம் மற்றும் குடியுரிமைக்கான மத்திய ஆணையம் (ICA) மற்றும் தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் (NCEMA) கூட்டாக இனைந்து நேற்று சனிக்கிழமை ஆகஸ்ட் 28 ம் தேதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வெளிநாட்டவர்களுக்கு சுற்றுலா விசா வழங்கும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குவது குறித்து வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், சுற்றுலா விசா விண்ணப்பதாரர்கள் உலக சுகாதார நிறுவனத்தால் (WHO) அங்கீகரிக்கப்பட்ட ஏதேனும் தடுப்பூசி ஒன்றில் முழுமையாக அதாவது இரண்டு டோஸ் தடுப்பூசி போடப்பட்டிருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அரசின் இந்த முடிவானது, இதற்கு முன்னர் நுழைவு தடை செய்யப்பட்ட நாடுகளுக்கும் பொருந்தும் எனவும், சுற்றுலாப் பயணிகள் விமான நிலையத்தில் கட்டாய விரைவான PCR சோதனை செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. எனினும், தடுப்பூசி போடாதவர்களுக்கு ஏற்கனவே அமலில் இருக்கும் விதிமுறைகள் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கூடுதலாக, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் தங்களின் தடுப்பூசி சான்றிதழ்களை ICA வலைத்தளம் அல்லது அல் ஹோஸ்ன் ஆப்பில் பதிவு செய்வதன் மூலம் தடுப்பூசி போட்டவர்களுக்கான சிறப்புகளை சுற்றுலா விசாவில் வருபவர்களும் பெற முடியும் எனவும் ICA தெரிவித்துள்ளது. அமீரகத்தில் குறிப்பிட்ட சில நிகழ்வுகளுக்கு மற்றும் பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பொது சுகாதாரம் மற்றும் பல்வேறு முக்கிய துறைகளுக்கு இடையே ஒரு சமநிலையை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட ஐக்கிய அரபு அமீரகத்தின் மூலோபாய நடவடிக்கைக்கு ஏற்பவும் மற்றும் நிலையான மீட்பு மற்றும் பொருளாதாரத் துறையை புதுப்பிக்கவும் அரசின் தேசிய முயற்சிகளை ஆதரிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுலா விசா 30 நாட்கள் அல்லது 90 நாட்களுக்கு என இரு வகையான விசாக்கள் வழங்கப்படுகிறது, மேலும் கடந்த மார்ச் 21 அன்று, ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை அனைத்து நாட்டவர்களுக்கும் பலமுறை அமீரகத்திற்கு வந்து செல்லும் ஐந்து வருட மல்டிபிள் சுற்றுலா விசாவை அங்கீகரித்ததும் குறிப்பிடத்தக்கது.

WAM ல் வெளியிடப்பட்டுள்ள செய்தியின் லிங்கை காண இங்கே கிளிக் செய்யவும்.