துபாயில் இயக்கப்படும் பொது பேருந்துகளில் பயணம் செய்யும் அனுமதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கையானது நாளை செப்டம்பர் 1, புதன்கிழமை முதல் அதன் மொத்த திறனில் 80 சதவீதம் வரை அதிகரிக்கப்படும் என்று சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) அறிவித்துள்ளது.
அமீரகத்தில் கொரோனா வைரஸ் தொற்றுநோய் பரவ தொடங்கியதை தொடர்ந்து கடந்த ஆண்டு முதல் பொது பேருந்துகளில் பயணம் செய்யக்கூடிய பயணிகளின் எண்ணிக்கையை RTA குறைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து RTA கூறும் போது “அமீரக அரசு COVID-19 விதிகளை தளர்த்தியதால், RTA துபாய் முழுவதும் பொதுப் பேருந்துகளில் அனுமதிக்கப்படும் பயணிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க பரிசீலித்துள்ளது. செப்டம்பர் 1 முதல் பேருந்து திறன் 80 சதவிகிதம் வரை அதிகரிக்கப்படும்” என்று உறுதிப்படுத்தியுள்ளது.
மேலும் வரக்கூடிய அக்டோபர் 1 ஆம் தேதி துவங்கவிருக்கும் துபாய் எக்ஸ்போ 2020 க்கான பேருந்து சேவைகளுக்கான தேவை அதிகரிப்பை கருத்தில் கொண்டும் மற்றும் மக்களுக்கு அதிக போக்குவரத்து விருப்பங்களை வழங்குவதற்கு ஏற்பவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது வரையிலும் துபாய் எக்ஸ்போவிற்கு புதிதாக வாங்கிய பேருந்துகள் மற்றும் தேவை அதிகரிக்கும்போது பயன்படுத்துவதற்காக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பேருந்துகள் என மொத்தம் 1,698 பேருந்துகளுடன் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) இயங்கி வருவது குறிப்பிடத்தக்கது.
