ADVERTISEMENT

துபாயில் சிகிச்சை பெற்ற இந்தியரின் ரூ. 1.13 கோடி மருத்துவ கட்டணம் தள்ளுபடி..!! மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதாபிமான செயல்..!!

Published: 1 Sep 2021, 4:52 PM |
Updated: 3 Sep 2021, 1:05 PM |
Posted By: admin

துபாயில் கடந்த நான்கு மாதங்களாக மருத்துவமனை படுக்கையில் சிகிச்சை பெற்று வந்த 55 வயதான இந்தியாவை சேர்ந்த வாகன ஓட்டுநர் ஒருவரின் மருத்துவ கட்டணமான 570,000 திர்ஹம்ஸை (இந்திய ரூபாய் மதிப்பில் 1.13 கோடி), மருத்துவமனை நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்திருக்கும் நெகிழ்ச்சியான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.

ADVERTISEMENT

துபாயில் கடந்த 26 ஆண்டுகளாக ஓட்டுநராக பணிபுரிந்து வந்த கேரளாவை சேர்ந்த மொய்தீன்குட்டி செருகவத் என்பருக்கு திடீரென ஏற்பட்ட நெஞ்சுவலி காரணமாக துபாய் மன்கூல் பகுதியில் உள்ள ஆஸ்டர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நான்கு மாதங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்போது ஆஸ்டர் மருத்துவமனை நிர்வாகத்தின் மனிதாபிமான செயலால் கருணை அடிப்படையில் சிகிச்சை கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டு இந்திய தூதரகம் உதவியுடன் அவர் கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.

நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மொய்தீன்குட்டிக்கு உயிர்காக்கும் அறுவை சிகிச்சையை மேற்கொண்ட ஆஸ்டர் மருத்துவமனையை சேர்ந்த டாக்டர் நவீத் அகமது இது குறித்து விவரிக்கையில், மொய்தீன்குட்டி சில காலமாக அவ்வப்போது நெஞ்சு வலியால் அவதிப்பட்டு வந்ததாகவும், சிகிச்சைக்காக இருதய மருத்துவ நிபுணரை அணுக அறிவுறுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

இருப்பினும், அவர் விடுப்பு எடுத்து கேரளாவுக்குச் சென்று இதற்கான சிகிச்சையை மேற்கொள்ள முடிவு செய்து, கடந்த மே மாதம் 2 ம் தேதி பயணத்திற்குத் தேவையான PCR சோதனையை மேற்கொள்ள அவர் மருத்துவமனைக்கு சென்று கொண்டிருந்தபோது, அல் குசைஸ் சாலையில் திடீரென சரிந்து விழுந்ததாகவும் உடனடியாக எங்கள் மருத்துவமனையின் எமர்ஜென்சி மெடிக்கல் டீம் அந்த இடத்திற்கு வந்து அவருக்கு டிஃபிப்ரிலேட்டர் உதவியுடன், அவருக்கு இதய துடிப்பு சீராகும் வரை கிட்டத்தட்ட 45 நிமிடங்களுக்கு கார்டியோ நுரையீரல் புத்துயிர் (Cardio Pulmonary Resuscitation – CPR) செயல்முறை மூலம் முதலுதவி சிகிச்சை மேற்கொண்டு உயிர்பித்ததாகவும், அதன் பிறகு மன்கூல் ஆஸ்டர் மருத்துவமனைக்கு அவரை கொண்டு வந்து சேர்த்ததாகவும் டாக்டர் நவீத் அகமது கூறியுள்ளார்.

மருத்துவமணையில் அவருக்கு நடத்தப்பட்ட சோதனைகளில் பெரும் மாரடைப்பு ஏற்பட்டது தெரியவந்ததாகவும், உடனடியாக அவருக்கு அவசர அறுவை சிகிச்சை செய்யப்பட்டு தமனி ஒன்றில் இருந்த 100 சதவிகிதம் அடைப்பு அகற்றப்பட்டதாகவும் டாக்டர் அகமது தெரிவித்துள்ளார். மேலும் அவர் சரிந்து விழுந்த இடத்தில் செய்யப்பட்ட CPR செயல்முறை அவரது மூளைக்கு இரத்த ஓட்டத்தை பராமரிக்க உதவியதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ADVERTISEMENT

சிகிச்சைக்கு முன்னர் நோயாளிக்கு மிகக் குறைந்த இரத்த அழுத்தம் இருந்ததெனவும், ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது உடல் நிலை சீராகி விட்டதாகவும் தெரிவித்த டாக்டர் அகமது, மொய்தீன்குட்டி மூளை ஹைபோக்ஸியா (மூளைக்கு செல்லும் ஆக்ஸிஜன் ஓட்டத்தில் இடையூறு காரணமாக மூளை செல்களில் ஏற்படும் பாதிப்பு) நோயால் பாதிக்கப்பட்டதால் கிட்டத்தட்ட நான்கு மாதங்கள் ஐசியுவில் மருத்துவமனை படுக்கையிலேயே சிகிச்சையில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், அவர் சிகிச்சை முடிந்து மருத்துவமனையில் இருந்து வெளியேறும் நேரத்தில் அவருக்கு மேற்கொண்ட அறுவை சிகிச்சைக்கான செலவு மற்றும் நான்கு மாதங்களாக மருத்துவமனையில் கொடுக்கப்பட்ட சிகிச்சைக்கான செலவு என கட்டணமாக மொத்தம் 570,000 திர்ஹம் வந்துவிட்டதாகவும், இது மருத்துவமனை நிர்வாகத்திற்கு பெரிய சவாலாக இருந்ததாகவும் கூறியுள்ளார். எனினும், தொண்டு நிறுவனங்களின் உதவியுடன் 200,000 திர்ஹம் வரை சரிசெய்யப்பட்டு மீதமுள்ள தொகையை ஆஸ்டர் மருத்துவமனை நிர்வாகம் மனிதாபிமான அடிப்படையில் தள்ளுபடி செய்ததாகவும் அவர் விவரித்துள்ளார்.

மொய்தீன்குட்டியின் மருத்துவ செலவிற்கான கட்டணத்தை செலுத்த முடியாததற்கான காரணம் அவருக்கு இன்சூரன்ஸ் அதாவது மருத்துவக் காப்பீடு இல்லை என்பதே காரணம் என்று ஆஸ்டர் மருத்துவமனைகள் மற்றும் மருத்துவமனைகளின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் ஷெர்பாஸ் பிச்சு தெரிவித்துள்ளார்.

மேலும் மொய்தீன்குட்டிக்கு மருத்துவக் காப்பீடு இல்லை என்றாலும், ஆஸ்டர் மருத்துவமனையும் நோயாளிக்கு நிதி ஆதரவளித்து, ஒரு உயிரைக் காப்பாற்றுவதற்கும் பாதுகாப்பதற்கும் சிறப்பான முறையில் அவருக்கு சிகிச்சை தொடர்ந்தது எனவும் கூறியுள்ளார். பல இன்னல்களுக்கு மத்தியிலும் அவர் பாதுகாப்பாக அவரது வீட்டை அடைவதைக் கண்டு நான் ஆசீர்வதிக்கப்பட்டதை போன்றும், மன நிறைவு பெற்றதை போன்றும் உணர்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

துபாயில் சிகிச்சையில் இருந்த மொய்தீன்குட்டியின் மனைவி தனது கணவரை திருப்பி அனுப்ப இந்திய துணை தூதரகத்திற்கு கோரிக்கை வைத்ததன் மூலம், இந்திய சமூக சேவகர் நாசர் வாடன்பள்ளி உதவியுடன் அவர் பத்திரமாக கேரளாவிற்கு மருத்துவ ஊழியர்களின் துணையோடு இந்திய துணை தூதரகத்தால் அனுப்பி வைக்கப்பட்டுளளார். மேலும் அவர் இந்தியாவிற்கு செல்வதற்கான நோயாளியின் ஸ்ட்ரெச்சர் டிக்கெட் மற்றும் உடன் சென்ற மருத்துவ ஊழியர்களின் விமான பயண டிக்கெட் என பயணதிற்கான செலவுகளை இந்திய துணை தூதரகம் ஏற்பாடு செய்ததாக துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தாது மாமு கூறியுள்ளார்.

மேலும் மருத்துவமனை மற்றும் மொய்தீன்குட்டி குடும்பத்தினருடன் தொடர்புகொள்வது மற்றும் இந்த நடைமுறையை எளிதாக்குவது போன்ற அனைத்தையும் சிறப்பாக கையாண்ட நாசர் வாடன்பள்ளியுடன் இணைந்து பணியாற்றுவதில் நாங்கள் மகிழ்ச்சியடைந்தோம் என்றும் இந்திய துணைத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் டாக்டர் அகமது, இதய நோயின் ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகளை யாரும் புறக்கணிக்கக் கூடாது என்று அமீரக குடியிருப்பாளர்களை எச்சரித்துள்ளார். மேலும் இந்திய நாட்டவர்களிடையே மாரடைப்பு ஏற்படும் ஆபத்து மற்ற நாட்டவர்களை விட குறைந்தது 20 வருடங்களுக்கு முன்னதாகவே வருகிறது. எனவே நீங்கள் 35 வயதிற்கு மேல் இருந்தால், உங்கள் குடும்பத்தில் வேறு பிறருக்கு இதய நோய் பின்னணி இருந்தால், புகைப்பிடிப்பவராக இருந்தால் அல்லது நீரிழிவு, உயர் இரத்த அழுத்தம் அல்லது உடல் பருமன் இருந்தால், இதய நிபுணரை அணுகி தொடர்ச்சியாக மருத்துவ சோதனை செய்து கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.