கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கான தடுப்பூசி போட்டுகொண்டு உலகின் எந்த இடத்திலிருந்தும் அபுதாபிக்கு வரும் சுற்றுலா பயணிகள் நாளை செப்டம்பர் 5 ஞாயிற்றுக்கிழமை முதல் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை என்று கடந்த வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது.
அதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட கோவிட் தடுப்பூசியின் இரண்டு டோஸும் பெற்ற சுற்றுலாப் பயணிகளுக்கான சிறப்பு நெறிமுறையை அபுதாபியில் அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பானது 16 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட அணைத்து நாட்டு பயணிகளுக்கும் பொருந்தும் என்றும் கூறியுள்ளனர்.
மேற்கூறிய அறிவிப்பின்படி, தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலா பயணிகள் அபுதாபிக்கு பயணம் செய்வதற்கு முன், தங்களின் கொரோனா தடுப்பூசி சான்றிதழை அடையாள மற்றும் குடியுரிமைக்கான பெடரல் ஆணையம் (ICA) இணையதளம் அல்லது ஆப் மூலம் சரிபார்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் அபுதாபியில் உள்ள பொது இடங்களுக்குள் நுழைவது அல்ஹோஸ்ன் ஆப் ‘கிரீன் பாஸ்’ மூலம் தடுப்பூசி போடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே என்பதால், இரண்டு டோஸ்களையும் பெற்ற சுற்றுலா பயணிகள் மால்கள் மற்றும் பிற இடங்களை அணுக பின்வரும் இரு வழிகளை பின்பற்றவும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
> ஒன்று: பயணிகளின் தடுப்பூசி நிலை மற்றும் அமீரகத்திற்குள் செய்யப்பட்ட PCR சோதனைகளின் முடிவுகளைக் காட்ட அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் பதிவு செய்ய வேண்டும்
> இரண்டு: பயணிகளின் தடுப்பூசி சான்று மற்றும் சோதனை முடிவுகளைக் காண்பிப்பதற்காக அவர்கள் வசிக்கும் நாட்டின் அதிகாரப்பூர்வ அப்ளிகேஷனை பயன்படுத்த வேண்டும்.
அபுதாபி அரசு அறிவித்திருக்கும் கிரீன் பாஸ் நடைமுறையின்கீழ், தடுப்பூசி போடப்பட்ட சுற்றுலாப் பயணிகள் அமீரகத்தில் PCR பரிசோதனையை மேற்கொண்ட பிறகு 30 நாட்களுக்கு தங்களின் அப்ளிகேசனில் “கிரீன் பாஸ்” நிலையை கொண்டிருப்பார்கள். அதன் பிறகு மீண்டும் PCR சோதனை மேற்கொள்வதன் மூலம் அடுத்த ஒரு மாதத்திற்கான கிரீன் பாஸ் நிலையை பெறுவார்கள்.
அபுதாபிக்கு வரும் பயணிகளுக்கான நடைமுறைகள்..
விமான பயணத்திற்கு முன், சுற்றுலாப் பயணிகள் புறப்படும் நேரத்திலிருந்து 48 மணி நேரத்திற்குள் பெறப்பட்ட எதிர்மறை PCR சோதனை முடிவை அளிக்க வேண்டும்.
அபுதாபி அரசு பட்டியலிட்டுள்ள ‘பசுமை பட்டியல்’ நாடுகளிலிருந்து வரும் தடுப்பூசி போட்டுக்கொண்ட சுற்றுலாப் பயணிகள், விமான நிலையம் வந்ததும் ஒரு PCR சோதனையையும், அபுதாபியில் தொடர்ந்து தங்கியிருந்தால் ஆறாவது நாளில் மற்றொரு PCR சோதனையும் எடுக்க வேண்டும்.
பசுமை பட்டியலில் அல்லாத மற்ற இடங்களிலிருந்து வரும் சுற்றுலா பயணிகள் விமான நிலையம் வந்ததும் ஒரு PCR சோதனையையும், அபுதாபியில் தொடர்ந்து தங்கியிருந்தால் நான்கு மற்றும் எட்டாவது நாள் என மேலும் இரு PCR சோதனைகள் எடுக்க வேண்டும்.
அபுதாபியில் ஏற்கனவே அமலில் இருந்த பயண கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தற்போது அனைத்து நாட்டினரும் அபுதாபி வர அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில், அபுதாபிக்கு வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் விசிட்டர்கள் அமீரகத்தில் செயல்படுத்தப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தவறாமல் பின்பற்றுமாறு அபுதாபி அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரழிவுக் குழு கேட்டுக்கொண்டுள்ளது.