துபாயில் இருக்கும் வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கான கட்டணத்தை இனிமேல் தங்களின் வாட்ஸ்அப் மூலமே செலுத்தும் புதிய வசதி கூடிய விரைவில் நடைமுறைக்கு வரவுள்ளது.
துபாயில் உள்ள சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் (RTA) பார்க்கிங் நிர்வாக இயக்குனர் அகமது மஹ்பூப் தெரிவிக்கையில், இந்த புதிய கட்டண முறை உள்நாட்டில் சோதனை கட்டத்தில் உள்ளதாகவும், அடுத்த இரண்டு வாரங்களுக்குள் பயன்பாட்டிற்கு அறிமுகப்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் மேலும் விவரிக்கையில், “தற்போது நடைமுறையில் இருக்கும் SMS பார்க்கிங்கிற்கு மக்கள் பயன்படுத்தும் அதே முறைதான் இதிலும் பின்பற்றப்படும். பார்க்கிங் போடுவதற்கான தகவல் வாட்ஸ்அப் செய்யப்படும், பின்னர் அது பார்க்கிங் போட தகவலை அனுப்பிய வாகன ஓட்டிகளின் உறுதிப்படுத்தலைப் பெறும். இதற்கான கட்டணம் டிஜிட்டல் வேலட்டில் இருந்து கழிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டிகள் இந்த புதிய வாட்ஸ்அப் பயன்பாட்டின் மூலம் பார்க்கிங் கட்டணத்தை செலுத்தும் போது, SMS ஐ பயன்படுத்தி பார்க்கிங் டிக்கெட்டுகளுக்கு பணம் செலுத்துவதற்காக ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு செலுத்தும் சேவை கட்டணம் (30 fills) செலுத்த வேண்டியதில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் வாகன ஓட்டிகள் தங்களை வாகனத்தை நிறுத்த பார்க்கிங் டிக்கெட்டுக்கான சரியான இடத்தைக் கண்டறிய RTA அதன் ஸ்மார்ட் மேப் வரைபடத்தை மேம்படுத்தியுள்ளதாகவும் RTA பார்க்கிங் நிர்வாக இயக்குனர் அகமது மஹ்பூப் தெரிவித்துள்ளார்.