துபாய் சர்வதேச விமான நிலையமானது (DXB) உலகளவில் மிகவும் பரபரப்பான விமான நிலையமாக மீண்டும் பெயரெடுத்துள்ளது.
பயணிகள் போக்குவரத்தின் வளர்ச்சி மற்றும் விமானப் போக்குவரத்துத் துறையின் மீட்சியை பிரதிபலிக்கும் வகையில், துபாய் சர்வதேச விமான நிலையம் அக்டோபர் மாதத்தில் சர்வதேச பயணிகள் போக்குவரத்திற்கான உலகின் பரபரப்பான விமான நிலையமாக அதன் நிலையை மீட்டெடுத்தது என்று உலகளாவிய பயண தரவு வழங்குநரான OAG தெரிவித்துள்ளது.
இது வெளியிட்ட அறிக்கையில், “உலகின் பரபரப்பான சர்வதேச விமான நிலையமாக ஆம்ஸ்டர்டாம் ஷிபோல் விமான நிலையம் குறுகிய காலமே நீடித்தது, ஏனெனில் துபாய் மத்திய கிழக்கு மையத்தின் மூலம் திறனில் முதலிடத்தை மீண்டும் பெறுகிறது. இதனால் ஆம்ஸ்டர்டாம் இரண்டாவது இடத்திற்கு கீழிறங்கி ஐரோப்பாவின் மற்ற பெரிய விமான நிலையங்களான ஃபிராங்க்ஃபர்ட் (FRA) 3 வது இடத்திற்கும், லண்டன் ஹீத்ரோ (LHR) 4 வது இடத்திற்கும் முன்னேறுகிறது” என தெரிவித்துள்ளது.
2021 இன் முதல் ஏழு மாதங்களில் துபாய் விமான நிலையங்கள் 13 மில்லியன் பயணிகளைக் கையாண்டதைத் தொடர்ந்து, துபாய் விமான நிலையம் இயல்பு நிலைக்கு மீள சரியான பாதையில் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் எக்ஸ்போ 2020 நடைபெறுவதைத் தொடர்ந்து அடுத்து ஆறு மாதங்களில் பயணிகள் போக்குவரத்தில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைக் காண துபாய் மூத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
இந்த பரபரப்பான விமான நிலையங்களின் தரவரிசையில் துபாய், ஆம்ஸ்டெர்டாமை அடுத்து பிராங்பேர்ட், லண்டன் ஹீத்ரோ, இஸ்தான்புல், பாரிஸ் சார்லஸ் டி கோல், தோஹா, மாட்ரிட், அண்டால்யா மற்றும் வியன்னா விமான நிலையங்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளன.
இது குறித்து துபாய் விமான நிலையங்களின் தலைவரும், எமிரேட்ஸ் குழுமத்தின் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான துபாய் சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டியின் (DCAA) தலைவர் ஷேக் அகமது பின் சயீத் அல் மக்தூம் அவர்கள் கூறுகையில், “அரசாங்கம் மூலோபாய முடிவுகளை எடுத்தது மற்றும் தொற்றுநோயின் விளைவுகளை சமாளிக்கவும், உலகின் பொருளாதார மீட்சியை வழிநடத்தவும், உலகெங்கிலும் போக்குவரத்து இணைப்புகளை கட்டமைக்கவும், குறிப்பாக விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறையினை விரைவுபடுத்துவதற்கும் உதவும் வகையில் சரியான ஊக்குவிப்புகளை வழங்கியது” என்று கூறியுள்ளார்.
துபாய் விமானப் போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் முகமது அப்துல்லா அஹ்லி கூறுகையில், துபாய் விமான நிலையங்கள் 2021 ஆம் ஆண்டின் முதல் ஏழு மாதங்களில் கணிசமான அளவு சரக்கு போக்குவரத்தையும் மேற்கொண்டு கூடுதலாக 13 மில்லியன் பயணிகளைக் கையாண்டுள்ளன என தெரிவித்துள்ளார்.