அமீரகத்தில் 5-11 வயதுக்குட்பட்டவர்களுக்கு Pfizer-BioNtech கொரோனா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு உபயோகப்படுத்த சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
இந்த நடவடிக்கையானது மருத்துவ ஆய்வுகள் மற்றும் கடுமையான மதிப்பீட்டின் முடிவுகளின் அடிப்படையிலும், உள்ளூர் மதிப்பீடு மற்றும் அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் (FDA) ஒப்புதலுக்குப் பிறகும் அவசரகால பயன்பாட்டு அங்கீகாரம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட விதிமுறைகளுக்கு இணங்க எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மருத்துவ ஆய்வுகளின் முடிவுகள் இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்றும் உண்மையில் 5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கு வலுவான நோயெதிர்ப்பு சக்தியைக் கொடுத்துள்ளது என்றும் அமைச்சகம் கூறியுள்ளது.
அத்துடன் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டவர்களில் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் ஸ்புட்னிக் தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு கூடுதல் நோயெதிர்ப்பு திறனை வழங்கும் வகையில் கூடுதல் டோஸ் வழங்கப்படும் என்றும் அமைச்சகம் அறிவித்துள்ளது.
இதற்கு முன்னர் சினோஃபார்ம் தடுப்பூசி மட்டுமே சிறுவர்களுக்கு வழங்க அமீரக அரசு ஒப்புதல் அளித்திருந்தது. 12 வயதுக்கு மேற்பட்டவர்களே ஃபைசர் தடுப்பூசியினை போட்டுக்கொண்டிருக்கின்றனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபைசர் தடுப்பூசியை 5 முதல் 11 வயதிற்குட்பட்டவர்களுக்கு வழங்குவது மற்றும துணை டோஸ் வழங்குவதற்கும் உண்டான முடிவானது அமீரக தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையிலும் சமூகத்தின் ஆரோக்கியத்தை முக்கியமாக கருதியும் எடுக்கப்பட்டது என்பதை பொது சுகாதாரத் துறையின் உதவி துணைச் செயலர் டாக்டர் ஹுசைன் அப்துல் ரஹ்மான் அல் ராண்ட் உறுதிப்படுத்தியுள்ளார்.
5 முதல் 11 வயது வரையிலான குழந்தைகளுக்கான ஃபைசரின் கொரோனா தடுப்பூசிக்கான அவசரகால பயன்பாட்டு அங்கீகாரத்தை அமெரிக்கா வெள்ளிக்கிழமை வழங்கியதைத் தொடர்ந்து தற்பொழுது அமீரகமும் அங்கீகாரம் வழங்கியுள்ளது. அமெரிக்காவில் சிறிய குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி அங்கீகரிக்கப்படுவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.