ஷார்ஜா ஆட்சியாளரின் உத்தரவுகளின் அடிப்படையில், குடிமக்கள் அல்லாத வெளிநாட்டவர்களுக்கு குடியிருப்புப் பகுதிகளுக்குள் வீடுகளை வாடகைக்கு எடுப்பது கண்டிப்பாக தடைசெய்யப்பட்டுள்ளது என்பதை ஷார்ஜாவில் உள்ள அல் தைத் (Al Dhaid) பகுதியின் முனிசிபாலிட்டி உறுதிப்படுத்தியுள்ளது.
சுப்ரீம் கவுன்சில் உறுப்பினர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகமது அல் காசிமி அவர்களின் இந்த முடிவானது குடிமக்களின் தனியுரிமை மற்றும் அவர்களின் பழக்கவழக்கங்கள் மற்றும் மரபுகளைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. அல் தைத் நகர மக்களை பலமுறை சந்தித்துப் பேசிய பிறகு அவர் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
அல் தைத் நகராட்சியின் இயக்குனர் அலி முஸாபா அல் துனைஜி, குடிமக்கள் அல்லாதவர்கள் நகரத்தின் எட்டு குடியிருப்புப் பகுதிகளிலும் வீடுகளை வாடகைக்கு எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். இந்த விதியை அமல்படுத்துவதற்கு நகராட்சி மன்றங்கள், புறநகர் மற்றும் கிராம சபைகள் பொறுப்பு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்த பகுதிகளில் வெளிநாட்டவர் வசிப்பதாக குறித்து புகார் வந்தால், ஷேக் சுல்தான் அவர்களின் இந்த உத்தரவு குறித்து முனிசிபாலிட்டியானது வீட்டு உரிமையாளருக்கு தெரிவிக்கும் என்று கூறியதோடு நகரத்தில் வாடகை வீடுகளை நிறுவுவதற்கான திட்டத்தை தொடங்குவதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகளையும் வலியுறுத்தியுள்ளார்.