இந்திய பட்ஜெட் விமான நிறுவனமான ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ், துபாய் எக்ஸ்போ 2020 பார்வையாளர்களுக்கு, இந்தியாவில் உள்ள எந்த இடத்திற்கும் இரண்டு இலவச இரு வழி பயண டிக்கெட்டுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த விமான நிறுவனம் 15 இந்திய நகரங்களிலிருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு தினசரி 16 விமானங்களை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.
துபாய் எக்ஸ்போ 2020 இல் இந்தியா பெவிலியனைப் பார்வையிடுபவர்கள் இந்த டிராவில் பங்கேற்க தகுதியுடையவர்கள் என்று ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஏர் இந்தியா அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இந்த டிராவில் வெற்றி பெறும் இரண்டு அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்கள் தங்கள் விருப்பப்படி ஒரு இலவச இரு வழி-பயணத்திற்கான சர்வதேச டிக்கெட்டைப் பெறுவார்கள் என கூறப்பட்டுள்ளது.
மேலும் டிரா மாதத்திற்கு ஒரு முறை என டிசம்பர் 2, ஜனவரி 1 மற்றும் பிப்ரவரி 1 ஆகிய தேதிகளில் மூன்று மாதங்களுக்கு நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளைகுடா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்காவின் பிராந்திய மேலாளர் பிபி சிங் கூறுகையில், “வெற்றியாளர்கள் இந்தியாவில் உள்ள எந்த நகரத்திற்கும் செல்வதற்கான டிக்கெட்டுகளை வெல்லலாம்” என்று கூறியுள்ளார். மேலும் “இதில் அமீரக குடியிருப்பாளர்கள், சுற்றுலாப் பயணிகள் என அனைவரும் கலந்து கொள்ளலாம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
சிங்கின் கூற்றுப்படி, பங்கேற்பாளர்கள் சமீபத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் செய்திருக்க வேண்டும், மேலும் அவர்கள் இந்தியா பெவிலியனில் உள்ள ஏர் இந்தியா கியோஸ்கில் தங்கள் போர்டிங் பாஸை வழங்குவதன் மூலம் இந்த டிராவில் பங்கேற்கலாம் என கூறப்பட்டுள்ளது.
எக்ஸ்போ 2020 இல் இந்தியா பெவிலியனின் அதிகாரப்பூர்வ டிராவல் பார்ட்னராக ஏர் இந்தியா உள்ளது. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணித்து துபாய் எக்ஸ்போவைப் பார்வையிடும் அனைத்து பயணிகளும் இந்த டிராவில் பங்கேற்க தகுதியுடையவர்கள். இந்தியா பெவிலியனில் உள்ள விமானப் பிரதிநிதிகள், வெளிப்படையான செயல்முறை மூலம் இந்த அதிர்ஷ்டக் குலுக்கலை நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் வழங்கப்படும் இலவச டிக்கெட்டுகள் மாற்ற முடியாதவை என்றும் அவை ஆகஸ்ட் 31, 2022 வரை செல்லுபடியாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.