ADVERTISEMENT

அமீரக தேசிய தினத்தை “உலக எதிர்கால தினம்” என அங்கீகரித்த யுனெஸ்கோ..!! துபாய் ஆட்சியாளர் பெருமிதம்..!!

Published: 27 Nov 2021, 4:31 AM |
Updated: 27 Nov 2021, 4:31 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் தேசிய தினமான டிசம்பர் 2 ம் தேதி இனிமேல் உலக எதிர்கால தினமாக (world futures day) அறியப்படும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா.. ஆம். ஐக்கிய அரபு அமீரகத்திற்கு பெருமை சேர்க்கும் விதமாக, அமீரகத்தின் தேசிய தினம் டிசம்பர் 2 ஐ உலக எதிர்கால தினமாக ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

ADVERTISEMENT

அமீரகத்தின் தேசிய தினத்தை உலக எதிர்கால தினமாக யுனெஸ்கோ ஏற்றுக்கொண்டது குறித்து ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும், பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் அவர்கள் டிசம்பர் 25 வியாழக்கிழமை அன்று தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார். அதில், எதிர்காலத்திற்கான ஒரு நாடாக ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இந்த சர்வதேச அங்கீகாரம் கிடைக்க காரணமாக அமைந்த அமீரகத்தின் தொலைநோக்கு மற்றும் திட்டமிடலுக்கு நன்றி என்று ஷேக் முகமது அவர்கள் கூறியுள்ளார்.

மேலும், “எங்கள் திறன்களை வளர்த்துக்கொள்வதற்கும், எதிர்காலத்தை எதிர்நோக்குவதற்கும், மாற்றங்களுடன் முன்னேறவும், வாய்ப்புகளிலிருந்து பயனடைவதற்கும் ஐக்கிய அரபு அமீரகம் உலகளாவிய மாதிரியாக இருப்பதற்கு இது ஒரு பெரிய பொறுப்பை அளிக்கிறது. ஒவ்வொரு ஆண்டும், நம் நாடு பெரியதாகவும், சிறப்பாகவும் முன்னேறி வருகிறது” என்று ஷேக் முகமது ட்வீட் செய்துள்ளார்.

ADVERTISEMENT

யுனெஸ்கோவின் டைரக்டர் ஜெனரல் ஆட்ரி அசோலே கூறும்போது, “நாம் போக்கை மாற்றலாம் மற்றும் மாற்ற வேண்டும் என்பதை கோவிட் தொற்றுநோய் நமக்கு நினைவூட்டியுள்ளது. புதிய அச்சுறுத்தல்கள் நமது நிகழ்காலத்தின் மீது இருண்ட நிழல்களை ஏற்படுத்துவதால், உலகின் நம்பமுடியாத பன்முகத்தன்மையை நாம் கற்பனை செய்து நமது எதிர்காலத்தை கூட்டாக உருவாக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இது உலக எதிர்கால தினத்தின் உந்துகோலாகும், இதன் மூலம் யுனெஸ்கோ ஐக்கிய நாடுகளின் அறிவுசார் மற்றும் வருங்கால நிறுவனமாக, நிகழ்காலத்தை மாற்றுவதற்காக, எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்க அனைவரையும் அழைக்கிறது” என்றும் தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

பாரிஸில் நவம்பர் 24 புதன்கிழமையன்று முடிவடைந்த யுனெஸ்கோவின் 41வது பொது மாநாட்டில் ஒருமனதாக முடிவெடுத்த பிறகு டிசம்பர் 2 ம் தேதி உலக எதிர்கால தினமாக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. அரசாங்கங்களின் தொலைநோக்கு திறன்களை வலுப்படுத்தவும், மனிதகுலத்திற்கு சிறந்த எதிர்காலத்தை அடைவதற்காக சர்வதேச ஒத்துழைப்பை அதிகரிக்கவும் யுனெஸ்கோ அமைப்பினர் மேற்கொள்ளும் முயற்சிகளின் ஒரு பகுதியாக இது அமைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

உலக எதிர்கால தினமானது, அழுத்தமான சவால்களை எதிர்கொள்வதிலும், புதிய வளர்ச்சித் தீர்வுகளைக் கண்டுபிடிப்பதிலும், புதுமை பற்றிய சர்வதேச உரையாடலை ஊக்குவிப்பதிலும் அரசாங்கங்களின் தயார்நிலையை அதிகரிக்க, “எதிர்கால சிந்தனையை” வளர்ப்பதன் முக்கியத்துவத்தைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் எதிர்காலத் தயார்நிலையின் முக்கியத்துவத்தை கவனத்தில் கொண்டு, நிலையான வளர்ச்சிக்கு வழிவகுக்கும் அறிவியல் கருவிகளை அரசாங்கங்கள் பின்பற்றுவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளதாகவும் யுனெஸ்கோ அமைப்பினரால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பை தொடர்ந்து இனி உலகெங்கிலும் உள்ள நாடுகள் டிசம்பர் 2 ம் நாளை தங்கள் நாட்டு எதிர்கால சந்ததியினருக்காக திட்டமிடுதலை குறிக்கும் நாளாக கொண்டாடும் என்பது சிறப்புக்குரியது. மேலும் வரும் டிசம்பர் 2 ம் தேதி அமீரகத்தின் 50 வது தேசிய தினம் கொண்டாடவிருக்கும் நிலையில் யுனெஸ்கோவின் இந்த அறிவிப்பு அமீரகத்தின் பெருமையை உலகளவில் மேலும் உயர்த்துவதாக அமைந்துள்ளது.

தனித்தனி எமிரேட்களாக பிரிந்திருந்த பகுதிகளை 1971 ஆம் ஆண்டு அமீரகத்தின் தந்தை என்று அழைக்கப்படும் மாண்புமிகு ஷேக் சையத் அவர்களால் ஒன்றிணைக்கப்பட்டு ஐக்கிய அரபு அமீரகம் என்று தனி ஒரு நாடக அறிவிக்கப்பட்ட நாளான டிசம்பர் 2 ம் தேதியே அமீரகத்தின் தேசிய தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும் இந்த ஆண்டு 50வது ஆண்டைக் குறிக்கும் என்பதால் அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் அவர்கள் 2021ஆம் ஆண்டை பொன்விழா ஆண்டாக அறிவித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.