அமீரகத்தில் கொரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸினையும் போட்டுக்கொண்ட பின்னர் PCR சோதனையில் எதிர்மறை முடிவைப் பெறுபவர்களுக்கு அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் குறிப்பிட்ட காலத்திற்கு கிரீன் பாஸ் வழங்கப்பட்டு வருகிறது.
இது இருந்தால் மட்டுமே அபுதாபியின் பெரும்பாலான பொது இடங்களுக்குள் நுழைய அனுமதி வழங்கப்படுகிறது. இந்நிலையில் இதன் செல்லுபடி காலத்தை குறைக்கவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்பொழுது வரை எதிர்மறை PCR சோதனை முடிவைப் பெற்றவர்களுக்கு 30 நாட்களுக்கு கிரீன்பாஸ் வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் டிசம்பர் 5 முதல் எதிர்மறையான PCR சோதனை முடிவைப் பெறுபவர்களுக்கு AlHosn அப்ளிகேஷனில் 30க்கு பதிலாக 14 நாட்களுக்கு மட்டுமே கிரீன்பாஸ் தோன்றும் என கூறப்பட்டுள்ளது.
கோவிட்-19க்கு பிந்தைய மீட்பு உத்தி, முன்முயற்சிகள் மற்றும் திட்டங்களின் ஒரு பகுதியாக, அமீரகத்தில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை மேம்படுத்துவதற்கும், தொற்றுநோய் மாறுபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும், நாடு முழுவதும் பாதுகாப்பான நடமாட்டம் மற்றும் சுற்றுலாவை உறுதிசெய்வதற்கும் இந்த மேம்படுத்தல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.