ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய், ஷார்ஜா உள்ளிட்ட பிற எமிரேட்டுகளிலிருந்து குடியிருப்பாளர்கள் அபுதாபிக்குள் நுழைவதற்கான நடைமுறையை அபுதாபியில் உள்ள அதிகாரிகள் புதுப்பித்து புதிய கட்டுப்பாடை அறிவித்துள்ளனர்.
இந்த கட்டுப்பாடானது வரும் டிசம்பர் 19 ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என்றும் அபுதாபிக்குள் நுழையும் என்ட்ரி பகுதிகளில் மக்களை ஸ்கேன் செய்ய EDE ஸ்கேனர்கள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபுதாபியை சேர்ந்த அதிகாரிகள் அறிவித்துள்ள இந்த புதிய நடைமுறைக்கு பயன்படுத்தவுள்ள EDE ஸ்கேனர்கள், மேம்பட்ட தொழில்நுட்பத்துடன் சாத்தியமான கொரோனா தொற்றுநோய் பாதிப்புகளை விரைவாகக் கண்டறிய பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதில் சாத்தியமான நேர்மறை கொரோனா பாதிப்புகள் கண்டறியப்படும் நபரை ஆன்-சைட் சோதனை மையத்திற்கு பரிந்துரைக்கப்பட்டு, அங்கு அவர்களுக்கு இலவச ஆன்டிஜென் சோதனை மேற்கொள்ளப்படும். மேலும் இந்த சோதனை முடிவுகள் 20 நிமிடங்களில் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரு வேளை மற்ற எமிரேட்டில் இருந்து அபுதாபி பயணித்தவர்களில் ஆன்டிஜென் சோதனைக்கு பரிந்துரைக்கப்பட்டு அதில் பாஸிட்டிவ் வந்தால் என்ன செய்வது என்பதற்கான விளக்கங்களும் கொடுக்கப்பட்டுள்ளன.
அபுதாபி குடியிருப்பாளர்கள்
மற்ற எமிரேட்டில் இருந்து அபுதாபிக்கு வந்தவர்கள் அபுதாபி குடியிருப்பாளர்களாக இருந்து சோதனையில் பாஸிட்டிவ் வந்தால் அவர்கள் அபுதாபியில் இருக்கும் நடைமுறைகளை பின்பற்ற பரிந்துரைக்கப்படும்.
அதன்படி அவர்கள் கைப்பட்டை (wristband) அணிவிக்கப்பட்டு தங்களது வீட்டிலோ அல்லது தங்கும் இடத்திலோ தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்படும்.
மற்ற எமிரேட்டுகளின் குடியிருப்பாளர்கள்
அபுதாபி அல்லாமல் மற்ற எமிரேட்டுகளில் வசிப்பவர்களுக்கு ஆன்டிஜென் சோதனையில் பாஸிட்டிவ் வந்தால், அவர்கள் எந்த எமிரேட்டில் இருந்து அபுதாபி பயணித்தார்களோ அதே எமிரேட்டிற்கு திருப்பி அனுப்பப்படும். அங்கு சென்ற பின்னர் அவர்கள் சோதனை முடிவை சுகாதார அதிகாரிகளுக்கு தெரியப்படுத்த வேண்டும்.