ஐக்கிய அரபு அமீரகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் பாதிப்புகள் அதிகரித்து வருவதன் எதிரொலியாக அபுதாபியில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் பணியாளர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒருமுறை கட்டாய PCR பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளதாக அபுதாபி ஊடக அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது.
அமீரகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக வரையிலும் 50 க்கும் குறைவாக பதிவாகி வந்த தினசரி கொரோனா பாதிப்புகள் சில நாட்களாகவே தினமும் உயர்ந்து கொண்டே வருவதை தொடர்ந்து அமீரக அரசு கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை கடுமையாக்க மீண்டும் முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதன் ஒரு பகுதியாக ஐக்கிய அரபு அமீரகத்தின் அனைத்து எமிரேட்களிலும் உள்ள மத்திய அரசு அலுவலகங்களுக்குள் நுழைய ஜனவரி 3 முதல் ஊழியர்கள் மற்றும் விசிட்டர்களுக்கு கிரீன் பாஸ் கட்டாயம் என்று நேற்று அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கு ஒவ்வொரு 14 நாட்களுக்கும் ஒருமுறை PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இந்நிலையில் அபுதாபியில் உள்ள அரசு நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் பணியாளர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒருமுறை கட்டாய PCR பரிசோதனை செய்ய வேண்டும் என்றும், இந்த நடைமுறை டிசம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை முதல் அமலுக்கு வருவதாகவும் அபுதாபி அரசு ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்கும் அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து அபுதாபி ஊடக அலுவலகம் தனது ட்விட்டர் பக்கத்தில் வெயிட்டிருக்கும் அறிவிப்பில், “அபுதாபி அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் குழுவுடன் ஒருங்கிணைந்து, அரசாங்க உதவித் துறையானது, அபுதாபியில் உள்ள அனைத்து அரசு நிறுவனங்கள் மற்றும் கம்பெனிகளின் ஊழியர்களுக்கு ஒவ்வொரு 7 நாட்களுக்கும் PCR சோதனை செய்யவேண்டும் என்ற கட்டாயத் தேவையை அமல்படுத்துகிறது” என்று தெரிவித்துள்ளது.
மேலும் இந்த நடவடிக்கையானது அரசு நிறுவனங்களில் தற்போதுள்ள செயலூக்கமான நடவடிக்கைகளை மேம்படுத்தும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனினும் அல் ஹோஸ்ன் அப்ளிகேஷனில் கிரீன் பாசை தக்கவைத்து கொள்ள 14 நாட்களுக்கு ஒருமுறை PCR சோதனை செய்ய வேண்டுமா அல்லது 7 நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டுமா என்ற விபரம் ஏதும் தெரிவிக்கப்படவில்லை. இது குறித்த தகவல் பின்னர் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
In coordination with Abu Dhabi Emergency Crisis and Disasters Committee, the Department of Government Support will implement a mandatory requirement for PCR tests every 7 days for all employees of government entities and companies in the emirate, from Sunday, 26 December 2021. pic.twitter.com/qv9aKzakjh
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) December 21, 2021