ADVERTISEMENT

UAE: அரசு துறை போன்று தனியார் துறை ஊழியர்களுக்கும் ஒரே மாதிரியான வேலை நாட்களை வழங்க FNC உறுப்பினர் கோரிக்கை..!!

Published: 11 Jan 2022, 8:24 AM |
Updated: 11 Jan 2022, 8:26 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் அரசு துறை ஊழியர்களுக்கு அறிவிக்கப்பட்ட புதிய வார வேலை நாட்கள் அமலுக்கு வந்திருக்கும் நிலையில், அமீரகத்தின் ஃபெடரல் நேஷனல் கவுன்சிலை சேர்ந்த (FNC) உறுப்பினர் ஒருவர், அரசு துறையை போன்று தனியார் துறைகளில் பணிபுரியும் அமீரக குடிமக்களுக்கும் ஒரே மாதிரியான வாராந்திர வேலை நேரம் மற்றும் வார இறுதி நாட்களை அளிக்க முன்மொழிந்துள்ளார்.

ADVERTISEMENT

ஃபெடரல் நேஷனல் கவுன்சிலின் உறுப்பினரான சப்ரீன் ஹசன் அல் யமாஹி, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் வார இறுதி நாட்களை, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் குடிமக்களுக்கும் நீட்டிக்குமாறு மனிதவள மற்றும் குடியுரிமை துறை அமைச்சர் டாக்டர் அப்துல் ரஹ்மான் அல் அவாரிடம் தான் கேட்டுக் கொள்வதாக கூறியுள்ளார். இதனால் இரு துறைகளிலும் பணிபுரியும் குடிமக்களுக்கு சமமான பலன்கள் கிடைக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் கூறுகையில், “தனியார் துறையில் பணிபுரியும் குடிமக்கள் அரசு துறைகளில் பணிபுரியும் சக ஊழியர்களைப் போலவே நடத்தப்படுவது ஒரு நல்ல விஷயம். அமீரக அரசின் புதிய வார இறுதி முறையின் கீழ், தனியார் துறையில் பணிபுரியும் எமிராட்டிகளுக்கு வாரத்தில் நான்கரை நாள் வேலை மற்றும் இரண்டரை நாள் வார இறுதியும் வழங்கப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

ADVERTISEMENT

அதன் தொடர்ச்சியாக அவர் கூறுகையில், தனது முன்மொழிவு அமீரக தலைமை எதை அடைய விரும்புகிறதோ (தனியார் துறையில் பணிபுரியும் குடிமக்களுக்கு நிலைத்தன்மை மற்றும் வேலை திருப்தி) அவற்றுடன் ஒத்துப்போகிறது என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் தலைமையிலான அரசாங்கம், ஐக்கிய அரபு அமீரகத்தின் 50 திட்டங்களின் கீழ் தொடங்கப்பட்ட இரண்டாவது தொகுதி திட்டத்தில், தனியார் துறை வேலைகளில் எமிரேட்டியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, போட்டித்தன்மை வாய்ந்த, சமநிலையான மற்றும் சுறுசுறுப்பான தேசியப் பொருளாதாரத்தை ஒருங்கிணைப்பதே அரசின் குறிக்கோளாக இருந்தது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ADVERTISEMENT

அமீரகத்தில் ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ள புதிய வார வேலை நாட்களின் கீழ், அரசுத்துறை ஊழியர்களுக்கு நான்கரை நாள் வேலை நாட்களாகவும், இரண்டரை நாள் (வெள்ளிக்கிழமை அரைநாள், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை முழுநாள்) விடுமுறை நாட்களாகவும் வழங்கப்பட்டு வருகிறது. இருப்பினும் தனியார் துறையை பொறுத்தவரை சில நிறுவனங்கள் மட்டுமே அரசு துறையை போன்று இரண்டரை நாள் விடுமுறையும், பெரும்பாலான நிறுவனங்கள் ஒரு நாள் மட்டுமே விடுமுறையும் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.