அரேபிய பிராந்தியத்தின் முதல் உலகக் கண்காட்சியான எக்ஸ்போ 2020 இறுதி மூன்று மாதங்களை தற்பொழுது நெருங்கியிருக்கும் நிலையில் பார்வையாளர்களுக்கு வரம்பில்லாத நுழைவை அனுமதிக்கும் ‘சீசன் பாஸ் ஃபைனலை’ அறிவித்துள்ளது.
195 திர்ஹம்ஸ் செலுத்தி வாங்கும் இந்த பாஸ் மார்ச் 31, 2022 வரை எக்ஸ்போவிற்குள் நுழைவதற்கு செல்லுபடியாகும் என கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் எத்தனை முறை வேண்டுமானாலும் எக்ஸ்போவிற்குள் நுழையலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஒரு நாளைக்கு 10 ‘ஸ்மார்ட் க்யூ புக்கிங்’களை இது வழங்குகிறது என்றும் இதனால் பெவிலியன்களில் பங்கேற்க நீண்ட வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.
18 முதல் 59 வயதுக்குட்பட்ட பார்வையாளர்கள் இந்த பாஸைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது முன்பு 495 திர்ஹம்களாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
“18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் மற்றும் சிறுவர்கள், உயர்கல்வி மாணவர்கள், 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு, 3 மாத எக்ஸ்போவில் வரம்பற்ற பதிவுகளுடன் இலவச அணுகல் கிடைக்கிறது. ஆறு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான டிக்கெட்டுகள் எக்ஸ்போ தளத்தின் நுழைவாயிலுக்கு வந்த பின்னர் மட்டுமே பார்வையாளர்களுக்கு வழங்கப்படும். ஆன்லைனில் இதனை முன்பதிவு செய்ய முடியாது” என்று எக்ஸ்போ 2020 இன் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று வார நாட்களுக்கான டிக்கெட்டுகள் 45 திர்ஹம்ஸிற்கு கிடைக்கின்றன. திங்கள் முதல் வெள்ளி வரை எக்ஸ்போ செல்ல இது செல்லுபடியாகும்.
ஆறு மாதம் நடைபெறும் இந்த பிரம்மாண்ட நிகழ்வானது அதன் முதல் மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட 9 மில்லியன் வருகைகளைப் பதிவு செய்துள்ளது. அனைத்து வருகைகளிலும் ஏறக்குறைய பாதியளவு (47 சதவீதம்) சீசன் பாஸ்கள் கொண்டதாக கூறப்பட்டுள்ளது.
அதே போல் முதல் மூன்று மாதங்களில் எக்ஸ்போவிற்கு மீண்டும் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை 3.5 மில்லியனை எட்டியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் எக்ஸ்போ 2020 கடுமையான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை அமல்படுத்துகிறது. இதில் பார்வையாளர்கள், ஊழியர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் முக கவசம் அணிவது, ஆன்-சைட் PCR சோதனை வசதிகள் ஆகியவை அடங்கும்.
அனைத்து எக்ஸ்போ மற்றும் சர்வதேச பங்கேற்பாளர்கள், ஊழியர்கள், தன்னார்வலர்கள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் சேவை வழங்குநர்கள் தடுப்பூசி போட்டிருப்பது கட்டாயமாகும். அதே நேரத்தில் 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பார்வையாளர்கள் கொரோனா தடுப்பூசி அல்லது எக்ஸ்போவிற்குள் நுழைவதற்கு முந்தைய 72 மணி நேரத்திற்குள் எடுக்கப்பட்ட PCR சோதனையின் எதிர்மறை முடிவை சமர்ப்பிக்க வேண்டும் என்பதும் குறிப்பிடத்தக்கது.