உலகெங்கிலும் ஒமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் அமீரகத்திலும் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று அதிகரித்து காணப்படுகிறது.
இருந்தபோதிலும் ஓமிக்ரான் அல்லது கொரோனா வைரஸ் பரவல் காரணத்தால் அமீரகத்தில் லாக்டவுன் அமல்படுத்தப்படாது என்று வெளிநாட்டு வர்த்தகத் துறை அமைச்சர் டாக்டர் தானி அல் சியோடி வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில், “டெல்டாவை விட ஒமிக்ரான் குறைவான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. டெல்டா பரவலின் போது கூட, நாங்கள் அமீரகத்தில் லாக்டவுனை அமல்படுத்தவில்லை. ஏனென்றால் அமீரகத்தில் பொருளாதாரம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கு இடையில் சமநிலை இருந்தது. எதிர்காலத்தில் கொரோனா வைரஸில் புதிய மாறுபாடுகள் வந்தால் கூட, நாடு முழுவதுமாக லாக்டவுன் அமல்படுத்தப்படாது” என்று தெரிவித்துள்ளார்.
2020 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கொரோனா பரவல் ஆரம்பித்த பிறகு அமீரகம் லாக்டவுன் மற்றும் பயணக் கட்டுப்பாடுகளை அறிவித்தது. ஆனால் நாடு முழுவதும் கடுமையான பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றி கட்டுப்பாடுகளை நீக்கிய பின், கட்டுப்பாடுகளை நீக்கிய முதல் நாடு அமீரகம் என்ற பெயரெடுத்தது.
அவர் தொடர்ந்து கூறுகையில் “நாங்கள் 2021 இல் எங்கள் பொன்விழாவைக் கொண்டாடினோம், எக்ஸ்போ 2020 க்கு உலகை வரவேற்றோம். லாக்டவுனை தொடரப் போவதில்லை என்பதை நாங்கள் உலகுக்குக் காட்டினோம். விரைவில் நாம் இயல்பிற்கு திரும்ப வேண்டும், மேலும் ஆரோக்கியத்திற்கும் பொருளாதாரத்திற்கும் இடையில் சமநிலை உறுதி செய்யப்பட வேண்டும்” என்று புளூம்பெர்க்கிற்கு (bloomberg) வியாழக்கிழமை அளித்த பேட்டியில் அல் ஸீயோடி கூறியுள்ளார்.
மேலும் “இதனால், நாங்கள் எங்கள் ஒழுங்குமுறை அமைப்பு மற்றும் வணிகங்களை நடத்தும் விதத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளோம். கடந்த சில மாதங்களில், நாங்கள் 100 சதவீத வெளிநாட்டு உரிமையை அறிவித்தோம். வேலை நாட்களை உலகின் பிற நாடுகளுடன் பொருந்துமாறு மாற்றினோம், அதிக நெகிழ்வுத்தன்மையை உருவாக்க வேலைவாய்ப்பு சட்டங்களை மேம்படுத்தினோம் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு உலகை வரவேற்கிறோம் என்று எங்கள் அர்ப்பணிப்புகளை காட்டுகிறோம்,” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.