ஐக்கிய அரபு அமீரகத்தின் அபுதாபி நகரமானது உலகின் மிகவும் பாதுகாப்பான நகரங்களின் வரிசையில் முதலிடத்தைப் பிடித்தது போன்று உலகின் மிகவும் பிரபலமான இடங்களின் வரிசையில் துபாய் முதலிடத்தைப் பிடித்துள்ளது. டிரிப்அட்வைசர் (tripadvisor) தனது 2022 ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த இடங்களுக்கான டிராவலர்ஸ் சாய்ஸ் விருதுகளை வெளியிட்டது. இதில் லண்டன், ரோம் மற்றும் பாரிஸ் போன்ற உலக நகரங்களை எல்லாம் பின்னுக்கு தள்ளி துபாய் முதலிடத்தை பிடித்துள்ளது.
பயணிகளின் விருப்பமான இடங்கள், ஹோட்டல்கள், உணவகங்கள், செயல்பாடுகள் மற்றும் இது போன்ற பல்வேறு பிரிவின் கீழ் 12 மாத காலப்பகுதியில் சேகரிக்கப்பட்ட மதிப்புரைகள் மற்றும் கருத்துகளின் அடிப்படையில் விருதுகள் கௌரவிக்கப்படுகின்றன.
துபாயைப் பற்றி விவரிக்கும் இந்த பயண தளம் “துபாய் நவீன கலாச்சாரத்துடன் வரலாற்றையும், சாகசத்தையும் உலகத் தரம் வாய்ந்த ஷாப்பிங் மற்றும் பொழுதுபோக்குகளையும் கலந்த ஒரு இடமாகும். நீங்கள் துபாய் ஓபராவில் ஒரு நிகழ்ச்சியைப் பார்க்கவும், புர்ஜ் கலீஃபாவின் உச்சியிலிருந்து டவுன்டவுனைப் பார்க்கவும் மற்றும் துபாய் க்ரீக்கில் தங்கம், ஜவுளி மற்றும் மசாலா சூக்குகளை ஆராய்வதிலும் செலவிடுங்கள். நீங்கள் த்ரில்லான சாகசத்தை செய்ய விரும்பினால், பாலைவன குன்றுகளுக்கு மேலே ஹாட் ஏர் பலூனில் பயணிக்கலாம், IMG வேர்ல்ட்ஸ் ஆஃப் அட்வென்ச்சரில் அதிவேக சவாரி செய்யலாம் அல்லது பாம் ஜுமேரா மீது ஸ்கை டைவ் செய்யலாம்.” என குறிப்பிட்டுள்ளது.
கொரோனா பரவலுக்குப் பின் உலக நாடுகள் தனது அதன் எல்லைகளை மூடிய பின்னர் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் திறக்கப்பட்ட உலகின் முதல் நகரங்களில் துபாய் ஒன்றாகும். பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள், சாகச நடவடிக்கைகள், டெசெர்ட் கேம்பைய்ன் போன்ற பல்வேறு செயல்பாடுகளை துபாயில் அனுபவிக்க குளிர்காலம் சிறந்த நேரமாகும்.
அமீரகத்தின் ஆங்கில நாளிதழுக்கு அளித்த பேட்டியில், துபாய் கார்ப்பரேஷன் ஃபார் டூரிஸம் அண்ட் காமர்ஸ் மார்க்கெட்டிங் (DTCM) தலைமை நிர்வாக அதிகாரி இஸ்ஸாம் காசிம், உலகின் பாதுகாப்பான மற்றும் வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக துபாய் தனது நிலையை எவ்வாறு வலுப்படுத்தியுள்ளது என்பதை எடுத்துரைத்தார். அவர் கூறுகையில் “தொற்றுநோயை வெற்றிகரமாக நிர்வகிப்பதற்கான எங்களின் முனைப்பான அணுகுமுறை, மே 2020 இல் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கும், ஜூலை 2020 இல் சர்வதேச சுற்றுலாப் பயணிகளுக்கும் நகரத்தை மீண்டும் திறக்க அனுமதித்தது. அதன்பின்னர் நாங்கள் பயணத் துறையில் நிலையான வளர்ச்சியையும் சிறந்த வேகத்தையும் அடைந்துள்ளோம். ஜனவரி முதல் அக்டோபர் 2021 வரையிலான காலங்களில், துபாய் சுமார் 4.88 மில்லியன் சர்வதேச பார்வையாளர்களை வரவேற்றது, அக்டோபரில் மட்டும் துபாயில் சர்வதேச வருகை ஒரு மில்லியனை எட்டியது” என்று விவரித்துள்ளார்.