ஐக்கிய அரபு அமீரகத்தில் தனிப்பட்ட நபர்கள் பயன்படுத்தும் ட்ரோன்கள் மற்றும் இலகுரக விளையாட்டு விமானங்களின் அனைத்து பறக்கும் நடவடிக்கைகளையும் உடனே நிறுத்துமாறு அதன் உரிமையாளர்கள், பயிற்சியாளர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு உள்துறை அமைச்சகம் (MoI) உத்தரவிட்டுள்ளது. மேலும் இந்த உத்தரவானது அமீரகத்தில் நேற்று சனிக்கிழமை (ஜனவரி 22) முதல் அமலுக்கு வந்துள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையத்தின் ஒருங்கிணைப்பு மற்றும் பறக்கும் நடவடிக்கைகள் தொடர்புடைய வழிகாட்டுதல்களுக்கு இணங்க பிறப்பிக்கப்பட்டுள்ள இந்த உத்தரவில் வான்வெளி மற்றும் பாய்மர விளையாட்டுகளும் அடங்கும் என்றும் உள்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
அமீரகத்தில் ட்ரோன்களை தவறாகப் பயன்படுத்துவதை அதிகாரிகள் சமீபத்தில் கண்டறிந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சகம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பறக்கும் நடவடிக்கைகளுக்கு வழங்கப்படும் அனுமதிக்கப்பட்ட பகுதிகளுக்குள் தங்களின் செயல்பாடுகளை மட்டுப்படுத்தாமல், தடைசெய்யப்பட்ட பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைவதை அதிகாரிகள் கண்டறிந்தனர் எனவும் கூறப்பட்டுள்ளது.
அமீரகத்தில் வசிக்கக்கூடிய பொதுமக்களின் உயிர்கள் மற்றும் உடைமைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகவும், பாதுகாப்பற்ற மோசமான நடைமுறைகளிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்காகவும், உள்துறை அமைச்சகம் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துக்கான பொது ஆணையம் உள்ளிட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்டுள்ள இந்த உத்தரவுகளை மதிக்குமாறு தனிநபர்களையும், சமூகத்தையும் அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.
வேலை ஒப்பந்தங்கள் அல்லது வணிகம் அல்லது விளம்பரம் போன்ற தேவைகளுக்கு ட்ரோன்களைப் பயன்படுத்தி படப்பிடிப்பை நடத்த திட்டங்களைக் கொண்ட நிறுவனங்கள் இந்த காலகட்டத்தில் தங்கள் வேலை மற்றும் திட்டங்களைச் செயல்படுத்த தேவையான விதிவிலக்குகள் மற்றும் அனுமதிகளைப் பெற பெர்மிட் அதிகாரிகளுடன் கட்டாயம் தொடர்பு கொள்ள வேண்டும் எனவும் அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.
மேலும் அமைச்சகத்தின் உத்தரவை மீறி இந்த செயல்பாடுகளைச் செய்யும் மற்றும் வழிகாட்டுதல்களைப் புறக்கணிக்கும் எவரும் சட்டப்பூர்வ பொறுப்புகளுக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் அமைச்சகம் ட்ரோன்களை பயன்படுத்தும் எச்சரித்துளளது.