ADVERTISEMENT

UAE: தொழிலாளியை கூடுதல் நேரம் வேலை செய்ய சொன்னால் என்ன செய்வது…?? அமீரக சட்டம் கூறுவது என்ன..??

Published: 29 Jan 2022, 8:33 AM |
Updated: 29 Jan 2022, 9:09 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்த ஆண்டு துவங்கியதில் இருந்து பொதுத்துறை முழுவதும் புதிய வார இறுதிநாட்கள் நடைமுறைக்கு வந்தாலும், சில தனியார் துறை ஊழியர்கள் கூடுதல் நேரம் வேலை செய்வதாக அறிவித்துள்ளனர். ஏனெனில் சில தனியார் நிறுவனங்கள் இன்னும் விடுமுறை நாட்களைத் தீர்மானிக்கவில்லை.

ADVERTISEMENT

அமீரகத்தில் பிப்ரவரி 2 முதல் நடைமுறைக்கு வரும் புதிய தொழிலாளர் சட்டம், வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை இருக்கும்படி, ஊழியர்களின் வார இறுதி நாட்களைத் தீர்மானிக்க தனியார் துறைக்கு நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது. இது நிறுவனத்தின் விருப்பப்படி அதிகரிக்கப்படும்.

துபாயில் உள்ள ஒரு ஆட்டோ மார்க்கெட்டில் உள்ள ஊழியர் ஒருவர், புதிய வார இறுதி விடுமுறை நாளை முதலாளி இன்னும் தீர்மானிக்காததால், நிறுவனத்தின் ஊழியர்கள் வாரத்தில் ஒரு நாள் கூட விடுமுறையின்றி தொடர்ந்து வேலை புரிவதாக கூறியுள்ளார். அவர் கூறுகையில் “புதிய வார இறுதிநாள் அமலுக்கு வருவதற்கு முன்பு, எங்களுக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை இருந்தது. இப்போது, ​​எங்களுக்கு அந்த ஒருநாள் கூட விடுமுறை இல்லை.” என தெரிவித்துள்ளார். வேலை இழக்க நேரிடும் என்ற அச்சத்தில், மனித வளங்கள் மற்றும் எமிரேடிசேஷன் அமைச்சகத்திடம் (MoHRE) புகார் செய்யவும் தயங்குவதாக அவர் கூறியுள்ளார்.

ADVERTISEMENT

துபாயில் கோல்ட் சூக் அருகே உள்ள ஒரு உணவகத்தில் பணிபுரியும் மற்றொரு ஊழியர் வெள்ளிக்கிழமை உட்பட ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் இரவு 10 மணி வரை வேலை செய்வதாக அறிவித்துள்ளார்.
அவர் கூறுகையில் “நிறுவனம் விடுமுறை நாளை சரிசெய்யும் வரை நாங்கள் காத்திருக்கிறோம், ஆனால் எப்போது என்பது எங்களுக்குத் தெரியவில்லை.” என கூறியுள்ளார். கையொப்பமிடப்பட்ட ஒப்பந்தத்தின்படி பணியாளருக்கு ஒரு நாள் விடுமுறைக்கு உரிமை உண்டு. 
அவர் தொடர்ந்து “எங்களுக்கு குடும்பங்கள் உள்ளன, நீண்ட நேரம் வேலை செய்வது எங்கள் குடும்ப நேரத்தையும் ஒட்டுமொத்த நல்வாழ்வையும் பாதிக்கிறது” என்று அந்த ஊழியர் கூறியுள்ளார்.

இது போன்ற பிரச்சனைகளை அமீரகத்தில் இன்னும் சில ஊழியர்கள் எதிர்கொண்டுதான் தங்களது வேலையை செய்து கொண்டிருக்கின்றனர். ஆனால் உண்மையில் இவ்வாறு நிறுவனமோ முதலாளியோ நடந்து கொள்ளலாமா..?? சட்டம் கூறுவது என்ன..?? உங்களுக்கான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ADVERTISEMENT

கூடுதல் நேரம் வேலை செய்வது பற்றி புதிய சட்டம் என்ன சொல்கிறது?

புதிய தொழிலாளர் சட்டம் தனியார் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு ஒவ்வொரு வாரமும் குறைந்தது ஒரு நாள் விடுமுறை அளிக்கிறது. இதன்படி தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு அதிகபட்சம் எட்டு மணிநேரம் அல்லது வாரத்திற்கு 48 மணிநேரம் வேலை செய்ய வேண்டும்.

ஆர்டிகிள் 19 ன் படி, ஒரு நாளின் அதிகபட்ச கூடுதல் நேரம் ஒரு நாளில் இரண்டு மணிநேரம் ஆகும். வேலையின் தன்மைக்கு இரண்டு மணிநேரத்திற்கு மேல் கூடுதல் நேரம் தேவைப்பட்டால், ஊழியர்கள் வழக்கமான மணிநேர ஊதியத்திற்கு சமமான கூடுதல் நேர ஊதியத்தை 25 சதவீத அதிகரிப்புடன் பெற வேண்டும்.

இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை கூடுதல் நேரம் வேலை செய்ய வேண்டும் என்று நிபந்தனைகள் தேவைப்பட்டால், 50 சதவீத அதிகரிப்புடன் வழக்கமான மணிநேர ஊதியத்திற்கு இணையான கூடுதல் நேர ஊதியம் பெற அவர்களுக்கு உரிமை உண்டு. இருப்பினும் ஷிப்ட் அடிப்படையில் உள்ளவர்களுக்கு இந்த விதியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.

ஒரு நாள் விடுமுறையில் வேலை செய்யும்படி தொழிலாளர்கள் கேட்கப்பட்டால், அவர்கள் ஒரு நாள் விடுப்பு அல்லது வழக்கமான நாள் ஊதியத்திற்கு இணையான கூடுதல் நேர ஊதியத்தை 50 சதவீத அதிகரிப்புடன் பெற வேண்டும். தொடர்ந்து இரண்டு நாட்கள் விடுமுறை இல்லாமல் ஊழியர்கள் பணிபுரியக் கூடாது.

எனது முதலாளி எனது உரிமைகளை மீறினால் என்ன செய்வது?

Kaden Boriss Legal Consulting இன் சட்ட ஆலோசகரான முகம்மது கமால் தவ்ஃபீக் கூறும் போது, ஊழியர்கள் முதலில் தங்கள் முதலாளிகளிடம் இருந்து தங்கள் நிலுவைத் தொகையை சட்டத்தின்படி கேட்டு, பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யலாம் என்று கூறியுள்ளார்.

முதலாளிகள் அதற்கு உரிய பதிலளிக்கவில்லை என்றால், வேலையை விட்டு நீங்காமல், MoHRE-யில் ஊழியர்கள் புகார் அளிக்க வேண்டும். தொழிலாளர்கள் கூட்டாகவும் ஒன்று சேர்ந்து புகார் அளிக்கலாம்.

நான் கூடுதல் நேரம் வேலை செய்கிறேன் என்பதை எப்படி நிரூபிப்பது?

அதிகாரப்பூர்வ வேலை நேரத்திற்குப் பிறகு அல்லது விடுமுறை நாட்களில் வேலை செய்ய முதலாளியிடமிருந்து வெளிப்படையான மற்றும் நேரடியான அறிவுறுத்தலின் ஆதாரத்துடன் கூடுதல் நேரம் வேலை செய்யும் நேரத்தைக் கணக்கிட வேண்டும் என்று தவ்பிக் கூறியுள்ளார்.

நான் எனது வேலையை இழக்கும் அபாயம் இருக்குமா?

பிரிவு எண் 47 ன் படி, அமைச்சகத்திற்கு செல்லுபடியாகும் புகாரை பதிவு செய்ததற்காக, முதலாளிகள் ஒரு ஊழியரை பணிநீக்கம் செய்வது சட்டவிரோதமானது என்று தெளிவாகக் கூறுகிறது. அவர்கள் சட்டவிரோதமாக பணிநீக்கம் செய்யப்பட்டதாக ஊழியர்கள் நம்பினால், அவர்கள் அமைச்சகத்திடம் புகார் செய்யலாம், அது பிரச்சினையை சுமுகமாக தீர்க்க முயற்சிக்கும். சுமுக தீர்வு எட்டப்படாவிட்டால், வழக்கு அந்தந்த நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்.

ஊழியரின் பணிநீக்கம் நிரூபிக்கப்பட்டால், ஊழியருக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் முதலாளிக்கு உத்தரவிடும். பணியின் வகை, பணியாளருக்கு ஏற்பட்ட சேதத்தின் அளவு மற்றும் வேலையின் காலம் ஆகியவற்றின் அடிப்படையில் இழப்பீட்டின் மதிப்பை நீதிமன்றம் மதிப்பிடும். எல்லா சந்தர்ப்பங்களிலும், இழப்பீட்டுத் தொகை மூன்று மாத கால தொழிலாளரின் ஊதியத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது, இது தொழிலாளிக்கு கடைசி ஊதியத்தின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது.

இழப்பீட்டுடன் சேர்த்து கூடுதலாக, பணியாளர்கள் தங்களின் கிரேஜூட்டி (gratuity), நோட்டீஸ் பீரியட் நிலுவைகள் அல்லது வேறு ஏதேனும் செலுத்தப்படாத நிலுவைத் தொகைகளை கோரலாம்.