அமீரகத்தில் நடத்தப்பட்ட ஹவுதி தாக்குதலில் பலியான அபுதாபி நேஷனல் ஆயில் நிறுவன ஊழியர்களின் (ADNOC) குடும்ப உறுப்பினர்களுக்கு இழப்பீடு மற்றும் வேலைகள் வழங்கப்படும் மேலும் தாக்குதலில் கொல்லப்பட்ட இரண்டு இந்தியர்களின் குழந்தைகளின் கல்விக்கு நிதியளிக்கப்படும் என்று Adnoc அறிவித்துள்ளதாக இந்திய தூதர் கூறியுள்ளார்.
ADNOC இல் பணிபுரிந்து வந்த ஹர்தீப் சிங் மற்றும் ஹர்தேவ் சிங் ஆகிய இரண்டு இந்திய ஓட்டுநர்கள், ஜனவரி 17 அன்று முசாஃபாவின் தொழிற்துறை பகுதியில் ADNOC பெட்ரோலியம் டேங்கர்கள் வெடித்ததில் உயிரிழந்தனர். இவர்களுடன் சேர்த்து ஒரு பாகிஸ்தானியரும் உயிரிழந்தார்.
இந்த சம்பவத்தையடுத்து ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதர் சுஞ்சய் சுதிர், ADNOC மற்றும் அமீரக அரசாங்கம் குடும்ப உறுப்பினரை இழந்து துயரத்தில் இருக்கும் இந்த குடும்பங்களுக்கு தொடர்ந்து ஆதரவை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், “இறந்தவரின் உடலை தாயகத்திற்கு கொண்டு செல்வதற்கான செலவுகளையும் உயிரிழந்த குடும்ப உறுப்பினர்களுக்கான பயணச் செலவுகளையும் ADNOC ஈடு செய்துள்ளது. ADNOC ஆனது இறந்தவர்களின் சேவைப் பலன்களை அவர்களது குடும்பங்களுக்கு விநியோகிப்பதை விரைவுபடுத்தியுள்ளது மற்றும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஊதிய இழப்பீடு வழங்கவும் முடிவு செய்துள்ளது.
மேலும், ADNOC ஆனது இறந்தவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேலை வாய்ப்புகளையும், இறந்தவர்களின் குழந்தைகளின் கல்விக்கான நிதியுதவியையும் வழங்கியுள்ளது. இதன் மூலம் அவர்கள் தாங்கள் தேர்ந்தெடுத்த வாழ்க்கைப் பாதைகளில் செல்ல முடியும், ”என்று இந்திய தூதரகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தூதர் செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.
மேலும் காயமடைந்த Adnoc -ல் பணிபுரியும் இரண்டு இந்திய ஊழியர்களான ரமலான் முகமது ராத் மற்றும் ராம் சிங் சர்வணன் ஆகியோருக்கு தொடர்ந்து மருத்துவ உதவியை வழங்குவதில் ADNOC இன் முயற்சிகளை சுதிர் பாராட்டியுள்ளார்.
மேலும் உலகிலேயே பாதுகாப்பான நாடுகளில் ஒன்றாக தொடர்ந்து இடம்பெறும் அமீரகத்தில் இந்தியர்கள் அனைவரும் கடந்த காலத்தைப் போலவே, பாதுகாப்பைப் பற்றி கவலைப்படாமல் தொடர்ந்து பணியாற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.