ADVERTISEMENT

UAE: சாலை விதியை மீறிய 2,850 வாகன ஓட்டிகள்.. 50,000 திர்ஹம்ஸ் அபராதம்.. எச்சரிக்கும் காவல்துறை..!!

Published: 11 Feb 2022, 8:38 PM |
Updated: 11 Feb 2022, 8:41 PM |
Posted By: admin

அமீரகத்தின் தலைநகரான அபுதாபியில் உள்ள பல்வேறு சாலைகளில் போக்குவரத்து விதிகளை மீறி சிக்னலில் சிவப்பு விளக்கை தாண்டியதற்காக கிட்டத்தட்ட 2,850 வாகன ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டதாக அபுதாபியின் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அபுதாபியின் பெரும்பாலான சாலைகளில் பொருத்தப்பட்டிருந்த உயர் தொழில்நுட்ப கேமராக்கள் மூலம் இந்த விதி மீறலில் ஈடுபட்டவர்கள் சிக்கியதாகவும் அதிகாரிகள் கூறியுள்ளனர். .

ADVERTISEMENT

பெரும்பாலான வாகனங்கள் அதிவேகமாகச் சென்றதாலோ அல்லது வாகன ஓட்டிகள் சாலையில் கவனம் செலுத்தாத காரணத்தினாலோ சிக்னலில் சிவப்பு விளக்கு எரியும்போது வாகனத்தை நிறுத்தாமல் சிக்னலை கடந்ததாக காவல்துறையின் விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேலும் ரெட் சிக்னலை கடப்பது என்பது மிகவும் ஆபத்தான போக்குவரத்து மீறல்களில் ஒன்றாகும் என வாகன ஓட்டிகளுக்கு காவல்துறையினரால் எச்சரிக்கப்பட்டுளளது.

இது ரெட் சிக்னல் விதிகளை மீறியதால் நடந்த வாகன விபத்தினால் ஏற்பட்ட மரணங்கள் மற்றும் கடுமையான காயங்களால் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும், சிக்கனலில் வாகனத்தை நிறுத்தாமல் தொடர்ந்து செல்வது மற்ற திசைகளில் இருந்து வரும் வாகனங்களுக்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர். இத்தகைய விதிமீறல் பெரும்பாலும் நேருக்குநேர் அல்லது செங்குத்தாக மற்ற வாகனங்களுடன் மோதுவதற்கு வழிவகுக்கிறது என்றும் போக்குவரத்து அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

ADVERTISEMENT

இது குறித்து அபுதாபி காவல்துறையை சார்ந்த அதிகாரி ஒருவர் கூறுகையில், “வாகன ஓட்டுனர்கள் பொதுவாக சிக்னலை நெருங்கும் போது சிவப்பு விளக்கிற்கு முன் சிக்னலை கடப்பதற்காக வேகத்தை அதிகரிக்கிறார்கள், ஆனால் அவர்கள் மற்ற பக்கங்களில் இருந்து வரும் வாகனங்களை கவனிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

அமீரகத்தில் வாகன ஓட்டி ஒருவர் ரெட் சிக்னலை கடந்தால் அவருக்கு 1,000 திர்ஹம் அபராதம் மற்றும் ஓட்டுநர் உரிமத்தில் 12 கருப்பு புள்ளிகள் வழங்கப்படும். மேலும் விதிமீறலில் ஈடுபட்ட வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு 30 நாட்களுக்கு ஜெயிலில் போடப்படும். அபுதாபியில் வாகனம் பறிமுதல் தொடர்பான சட்ட எண் (5) 2020 இன் படி, ஓட்டுநர் தனது காரை விடுவிக்க 50,000 திர்ஹம்ஸ் பணம் செலுத்த வேண்டும் மற்றும் அவர்களின் ஓட்டுநர் உரிமம் ஆறு மாதங்களுக்கு தற்காலிகமாக ரத்து செய்யப்படும்.

ADVERTISEMENT

ரெட் சிக்னலை கடப்பது மற்ற வாகனங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்பதால், சிக்னல் விளக்கானது பச்சை நிறத்திலிருந்து மஞ்சள் நிறமாக மாறும்போதே சிக்னலை கடப்பதை தவிர்க்குமாறு அபுதாபி காவல்துறையினர் வாகன ஓட்டுனர்களை வலியுறுத்தியுள்ளனர். மேலும் ட்ராஃபிக் கேமராக்கள் மற்றும் ரேடார்கள் 24 மணி நேரமும் செயல்படுவதாகவும், இது சட்டத்தை மீறுபவர்களைப் பிடிக்கும் என்றும் காவல்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.