ஃபுஜைராவில் இருக்ககூடிய முர்பா பகுதியில் உள்ள உள் சாலையில் ஒரு ஆசிய நாட்டைச் சேர்ந்த நபர் மீது தனது வாகனத்தை மோதியது மட்டுமல்லாமல், பலத்த காயங்களை ஏற்படுத்தியதும் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிய ஓட்டுநரை ஃபுஜைரா காவல் துறையினர் கைது செய்துள்ளனர். இந்த விபத்து நடந்து 12 மணி நேரத்திற்குள் தப்பியோடிய டிரைவரை ஃபுஜைரா காவல்துறை கைது செய்துள்ளது.
ஃபுஜைரா காவல்துறையின் போக்குவரத்து மற்றும் ரோந்து துறையின் இயக்குனர், கர்னல் சலே முகமது அல்-தானி கூறுகையில், “வெள்ளிக்கிழமை இரவு 11 மணியளவில் செயல்பாட்டு அறைக்கு ஒரு அறிக்கை வந்தது. அதில் வாகனம் ஒருவர் மீது மோதி பலத்த காயங்களை ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் காயமடைந்தவரை மீட்டு சிகிச்சைக்காக ஃபுஜைரா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்”.
“விபத்தை ஏற்படுத்திய டிரைவரைக் கைது செய்ய முர்பா காவல் நிலையத்தின் (அதிகாரப் பகுதி) ஒத்துழைப்புடன் புலனாய்வு மற்றும் போக்குவரத்துத் துறையிலிருந்து ஒரு தேடல் மற்றும் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது” என கூறியுள்ளார்.
இதனைத்தொடர்ந்து விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநரை 12 மணி நேரங்களில் CID குழுவினர் கைது செய்துள்ளனர். முர்பா பகுதியில் உள்ள உள்துறை அமைச்சகம் விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் ஏற்கெனவே அமீரகத்தை விட்டு வெளியேறிய நபரின் வாகனத்தை பயன்படுத்தியதைக் கண்டறிந்தது.
இதனையடுத்து காவல்துறை ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்டவர் விபத்து நடந்த இடத்தில் இருந்து தப்பி ஓடிய குற்றச்சாட்டின் பேரில் பொது வழக்குத் துறைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.