ADVERTISEMENT

அமீரகத்தில் மாஸ்க் அணிவது இனி கட்டாயம் இல்லை.. சமூக இடைவெளியும் ரத்து.. NCEMA அதிரடி..!!

Published: 26 Feb 2022, 6:35 AM |
Updated: 26 Feb 2022, 6:38 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைமுறையில் இருந்து வந்த பல்வேறு கொரோனாவிற்கான கட்டுப்பாடுகளை அமீரக அரசு நேற்று முதல் படிப்படியாக நீக்கி வருகிறது. அதன் தொடர்ச்சியாக இனி அமீரகத்தில் திறந்தவெளியில் முகக்கவசம் அணிவது கட்டாயம் இல்லை என்று அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் (NCEMA) நேற்று வெள்ளிக்கிழமை அறிவித்தது.

ADVERTISEMENT

அதே போன்று பொருளாதார மற்றும் சுற்றுலா தளங்களில் கடைபிடிக்கப்பட்டு வந்த சமூக இடைவெளி விதிமுறைகளும் தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், திறந்த வெளிகள் அல்லாது மூடிய இடங்களில் பொதுமக்கள் முக கவசம் அணிவதை கட்டாயமாகத் தொடர வேண்டும் என்றும் NCEMA அறிவித்துள்ளது.

மேலும் கோவிட்-19 தொற்றுநோய் பாதிக்கப்பட்டவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள் இனி தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய அவசியமில்லை என்றும் அதற்கு பதிலாக அவர்கள் ஐந்து நாட்கள் இடைவெளியில் இரண்டு PCR சோதனைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் NCEMA கூறியுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் கொரோனா தொற்றுநோய் பாதிக்கப்பட்ட நபர்களுக்கான தனிமைப்படுத்தல் நெறிமுறைகள் முன்பு அறிவித்தபடி தொடரும் என தெரிவிக்கப்பட்டுளளது. அமீரகத்தில் உள்ள பெரும்பாலான எமிரேட்களில், கோவிட்-19 சோதனையில் நேர்மறை முடிவை பெற்ற நபர்கள் பொதுவாக குறைந்தபட்சம் பத்து நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

ஐக்கிய அரபு அமீரகத்தின் பொது சுகாதாரம் மற்றும் பல்வேறு முக்கிய துறைகளுக்கு இடையே சமநிலையை உருவாக்கி, நிலையான மீட்சியை அடைவதற்கான நாட்டின் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் அமீரக அரசின் முயற்சிக்கு இணங்க இந்த புதிய சீர்திருத்தங்கள் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் மாநில செய்தி நிறுவனமான WAM தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டியதன் அவசியத்தை பராமரிக்கும் போது உடல் ரீதியான சமுக இடைவெளியை கடைபிடிப்பது மற்றும் எல்லா நேரங்களிலும் முக கவசம் அணிவது போன்ற விதிகளை அந்தந்த எமிரேட்கள் செயல்படுத்தலாம் எனவும் NCEMA குறிப்பிட்டுள்ளது.

அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்கான தேசிய ஆணையம் அறிவித்துள்ள இந்த புதிய விதிகள் இன்று பிப்ரவரி 26 முதல் அமலுக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.